உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு! - பெண்களின் கண்டுபிடிப்புகள்!

உலகில், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் பெண்களால் நிகழ்த்தப்பட்டவை. தற்போது, பயன்படுத்தும் வீட்டு உபயோக சாதனங்களில் பல பெண்கள் யோசனையில் உதித்தவை என்பது ஆச்சரியம் தரும். அதில் சிலவற்றை பார்ப்போம்...குழந்தைக்கு அடிக்கடி உள்ளாடை மாற்ற வேண்டியிருந்ததால் சிரமப்பட்டார் அமெரிக்காவை சேர்ந்த மரியான் டோனாவன். அந்த சிரமத்தை போக்க கண்டுபிடித்தது தான், 'டிஸ்போசபிள் டயபர்' என்ற உபயோகப் பொருள். அதன் காப்புரிமையை, 8 கோடி ரூபாய்க்கு விற்றார். இது, 1961ல் விற்பனைக்கு வந்தது.வீட்டில் பாத்திரம் கழுவி, காய வைக்கும் கருவி, டிஸ்வாஷர். இதை கண்டுபிடித்தவர் ஜாஸ்பின் காக்ரேன். பணக்கார வீடுகளில் விருந்து மேற்பார்வையாளராக பணி செய்து வந்தார். சமையல் பணியாளர்கள் பாத்திரம் கழுவ சிரமப்பட்டதை அறிந்து, இந்த கருவியைக் கண்டுபிடித்தார். இவரது கணவர் போதைக்கு அடிமையாகி இறந்தார். இதனால், வறுமையில் வாடியது குடும்பம். இவரது கண்டுபிடிப்பால் கிடைத்த பணம் வறுமையை போக்கியது. டிஸ்வாஷர் கருவி வர்த்தக ரீதியாக, 1887ல் விற்பனைக்கு வந்தது.வீடுகளில் காலால் மிதித்து திறக்கும் குப்பைக் கூடை பயன்படுத்தபடுகிறது. இதை கண்டுபிடித்தவர் லில்லியன் கில்பெர்த். பொறியாளர். வீட்டில் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்த போது, கழிவை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதை சுலபமாக்க கண்டுபிடித்தது தான் இந்த வகை குப்பை தொட்டி. இது, 1920ல் நிகழ்ந்தது.கடைகளில் வாங்கும் பொருட்களை எடுத்து செல்ல வசதியாக, அடிப்பகுதி சதுர வடிவில் பழுப்பு நிற காகித பை தருகின்றனர். இதை அறிமுகம் செய்தவர் அமெரிக்காவை சேர்ந்த மார்க்ரெட். இவர், 1868ல் மில் தொழிலாளியாக இருந்தார். அங்கு நீளமாக பேப்பர் பைகள் தயாரித்து வந்தனர். அதன் அடிப்பகுதி சதுர வடிவில் இருந்தால், சமமாக எடை பிரியும். இதனால், பை வலிமையாக இருக்கும் என்ற யோசனையை தெரிவித்தார். அதன்படி, காகித பைகள் இன்றும் தயாரிக்கப்படுகின்றன.வளர்ப்பு நாயை உலா அழைத்து செல்ல நீள கயிறு அல்லது வார்களை பயன்படுத்துவதே வழக்கமாக இருந்தது. இதனால், மிகவும் சிரமம் ஏற்பட்டது. தற்போது, எளிதாக கையாளும் வகையில் உள் இழுக்கும் வசதியுள்ள கயிறு பயன்படுத்தப்படுகிறது. இதை கண்டுபிடித்தவர் அமெரிக்கா, நியூயார்க் நகரை சேர்ந்த, மேரி ஏ.டெலனே. கொழுத்த நாயை நடை பயிற்சிக்கு அழைத்து சென்ற போது மிகவும் சிரமப்பட்டார். அது பற்றி தீவிரமாக யோசித்து, 1908ல் இதை கண்டுபிடித்தார். உள்ளிழுக்கும் வசதியுள்ள நாய் கயிறு, இன்று உலகம் முழுதும் பலருக்கு பயன்படுகிறது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !