அதிமேதாவி அங்குராசு - பாடம் சொல்லும் ராஜநாகம்!
ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம் பாம்பு. முதுகெலும்புள்ளது. உடலால் நிலத்தை உந்தி, வேகமாக நகரும். உலகம் முழுதும், 3,600 இனங்கள் உள்ளன. அவற்றில், 600 இனங்கள் மட்டுமே நஞ்சுள்ளவை. இந்தியாவில், 230 வகை பாம்பினங்கள் உள்ளன. இவற்றில், 50 மட்டுமே விஷமுள்ளவை. அதில் ராஜநாகம் கொடிய நஞ்சுள்ளது. இதை, ஆங்கிலத்தில், 'கிங் கோபுரா' என்பர். கருநாகம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகில், மிக நீளமான நஞ்சுப் பாம்பு ராஜநாகம். அடர்ந்த காட்டில் பதுங்கி வாழும். இரவில் காண்பது அரிது. மற்ற இன பாம்பையே பெரும்பாலும் உணவாகக் கொள்ளும். பறவை, சிறு விலங்கினத்தையும் உண்ணும். இதன் நஞ்சு, ஒரே கடியில் மனிதனைக் கொல்ல வல்லது.இந்த வகை பாம்பு... * அதிக பட்சமாக, 18 அடி நீளம் வரை வளரும்* எடை, 6 கிலோ வரை இருக்கும்* மிகப்பெரிய கண்கள் உடையது. அது வட்ட வடிவில் இருக்கும். கூர்மையாக பார்க்கும் திறன் உடையது. உணவாகும் விலங்கு, 300 அடிக்கு அப்பால் இருந்தாலும் அதன் அசைவை கணித்து அறியும் * தோலில் செதில்கள் நிறைந்திருக்கும். செதில்களின் எண்ணிக்கை மற்றும் வடிவத்தை வைத்து, மற்ற இனத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்கலாம்* ஆண் ராஜநாகம் அதிக நீளம், தடிமனாக இருக்கும்* 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும்* மணத்தை நுகர்ந்தே இரையை அறியும். உடனே நாக்கை பக்க வாட்டில் அசைத்து, துல்லியமாக நகர்ந்து இரையைப் பிடித்து விழுங்கும். இதன் வாய்த்தசை நான்கு புறமும் விரியும் தன்மை உடையது. ஒருமுறை உட்கொண்டால் பல நாட்கள் இரையைத் தேடாது* இரையாகும் உயிரினத்தை தவிர மற்ற எதையும் தாக்காது. எதிரிகள் வழியில் குறுக்கிட்டால் தற்காப்புக்காக மட்டுமே சீறும். தரையில் இருந்து, 10 அடி வரை எழுந்து, படத்தை விரித்து காட்டும். அத்துடன், 'ஸ்ஸ்ஸ்...' என ஒலி எழுப்பி அச்சமூட்டும். அச்சுறுத்தலை மீறி நெருங்கினால் கொத்தும்.சில நேரம் அதிவேகமாக எழுந்து படத்தை விரித்து, வாயிலிருந்து எச்சில் போல் விஷத்தை உமிழும். அது, ஐந்து அடி துாரம் வரை பாயும்! ராஜநாகம், முட்டை இட்டு குஞ்சு பொரித்து இனப் பெருக்கம் செய்யும். அதற்காக, காய்ந்த இலை சருகுகளை குவித்து கூடு அமைக்கும். அதில் முட்டை இடுவதற்கு வசதியாக உடலை வட்டமாக சுருட்டியிருக்கும். கூட்டில், 30 முட்டைகள் வரை இடும். அவற்றின் மீது உடலை விரித்து, 28 டிகிரி வெப்பத்தை சீராக பரவ விட்டு அடை காக்கும். முட்டையை பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. சூழலியல் அறிஞர் ரோமுலஸ் விட்டேகர், ராஜநாகம் குறித்து தமிழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் வாழ்க்கையை ஆவணப்படமாக தயாரித்துள்ளார். அது, உலக அளவில் மதிப்புமிக்க பரிசுகளை வென்றுள்ளது. இந்தியா, அண்டை நாடான இலங்கை, ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், பர்மா, ஆப்ரிக்க நாடான எகிப்து, ஐரோப்பிய நாடான இத்தாலி, அமெரிக்காவில் எல்லாம் பாம்பை வழிபட்டதற்கு உரிய சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சில நாடுகளில் நல்ல தெய்வமாகவும், சில இடங்களில் கெட்டதாகவும் கருதப்படுகிறது. வாழும் சூழலில் முக்கியமான உயிரினம் பாம்பு. அவை அழியாமல் காக்க வேண்டியது நம் கடமை!தப்ப முடியுமா...ராஜநாகம் கடித்த சில நிமிடங்களில் மனிதனுக்கு கோமா நிலை ஏற்பட்டு விடும். இது கடித்தால், மூன்று மணி நேரத்தில் இறந்து விடும், யானை. ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பு மாம்பா பாம்பு மிகவும் விஷமுள்ளதாக கருதப்படுகிறது. இதை விட, ஐந்து மடங்கு வீரிய விஷம் உடையது ராஜநாகம். ஒருமுறை கடித்தால், 7 மில்லி அளவில் நஞ்சை உடலில் செலுத்தும். இதனால் தான், கடித்த உடன் மரணம் ஏற்படுகிறது.ராஜநாகத்தின் தலைப்பகுதியில் நஞ்சு சுரப்பி உள்ளது. வாயின் மேற்பரப்பில் நஞ்சு பை அமைந்துள்ளது. இந்த பையுடன் இணைந்த குழாய், அதன் முன்புற பற்களுடன் இணைந்திருக்கும். பற்களின் முனை மிகக் கூர்மையாக, துளையுடன் இருக்கும். தொந்தரவு தரும் எதிரிக்கு காயம் ஏற்படுத்தி விரட்டவே ராஜநாகம் தீண்டுகிறது. அப்போது நஞ்சுப்பையில் அழுத்தம் ஏற்படும். உடனே நஞ்சு வெளியேறி முன்பற்களை அடையும். தீண்டும் போது உடலில் ஏற்படும் காயத்தின் வழியாக ரத்தத்தில் நஞ்சு கலக்கும். உடனடியாக உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். பாம்பு தீண்டியதை பார்த்தவுடன் மரண பயம் ஏற்படுவதால், இதயம் மிக வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். இதனால், ரத்தம் உடல் முழுதும் பரவி, ஆபத்தை விரைவுப் படுத்தும். பாம்பு கடித்தவுடன் நிதானமாக, பயமின்றி செயல்பட்டு மருத்துவ உதவி பெற்றால் உயிர் தப்பலாம்.ராஜநாகம் பாம்பின் நஞ்சை முறிக்க, தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்திலும், இந்தியாவிலும், விஷ முறிவு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - என்றென்றும் அன்புடன், அங்குராசு.