உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு !

அனைவருக்கும் எனது அன்பு.குடை வெயிலுக்கா ? மழைக்கா ? மழை என்றவுடன், குடையும், குடை என்றவுடன் மழையும் டக்கென்று நம் மனதில் தோன்றும். ஆனால், குடை கண்டுபிடிக்கப்பட்டது வெயிலுக்குத்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். குடை பிறந்து நாலாயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. எகிப்துதான் குடையின் பிறப்பிடம். சூரியன் சுட்டெரித்தலிலிருந்து தப்பிக்க பெரிய இலைகளை முதலில் குடையாக பிடித்திருந்தனர். பிறகு அடர்த்தியான துணி, அப்படியே அதற்கு நீர் நுழையாதபடி மேல் பூச்சுப் பூசி மழைக்கு பிடித்தனர்.சுறுசுறுப்பு வேணுமா மூளைக்கு ? கற்றல் என்பது மூளை சம்பந்தப்பட்ட வேலை. படிக்கும் காலத்தில் மூளையை சுறுசுறுன்னு வைத்து கொண்டிருந்தால், உங்களை எந்த காலத்திலும் யாராலும் ஜெயிக்க முடியாது. எந்த விஷயமும் மறக்காது. நிறைய சுவையான விஷயங்கள் பேசுவதால், ஏராளமான நண்பர்கள் கிடைப்பர். உங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது என்னும் வகையில் பெயர் வாங்குவீர்கள். மூளை சுறுசுறுன்னு இருந்தா ஏராளமான அறிவு செல்வங்களை அது கொண்டு வந்து சேர்க்கும். மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு இதோ சில வழிகள்:வழி1: தினமும் மூளைக்கு வேலை கொடுங்கள். புதிர், கணக்கு, குறுக்கெழுத்து, போன்ற எளிய விளையாட்டுகளை விளையாடுங்கள்.வழி2: தினமும் படிங்க. படிக்கிறது நிறைய புதுத் தகவல்களை தரும்.வழி3: மூளையின் வலது அரைக்கோளப் பகுதியைப் பலப்படுத்துகிற சமாசாரம் இசையில் இருக்கு. நல்ல இசையை கேட்பது உணர்வு பூர்வமான அறிவாளியாக உங்களை உருமாற்றும்.வழி4: தினமும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு தனியே அமர்ந்து உள்ளுக்குள் ஆழமா மூச்சை இழுத்து விடுங்க. மூளைக்கு உடனடியாக ஆக்சிஜன் பாய்ஞ்சு சடார்னு அது முழிச்சுக்கும். உங்க உடம்பு விழிப்புணர்வோட உஷாரா செயல்பட ஆரம்பிக்கும்.வழி5: நல்ல சுகமா தூங்குங்க. தூக்கம் மூளைக்கு ஓய்வு கொடுத்து புத்துணர்ச்சி பெற வைக்கிறது. எட்டு மணி நேரம் போதும். 'கும்பகர்ண பட்டம்' வேண்டாம் சரியா!வழி6: நிறைய காற்கறிகளை சாப்பிடுங்க. முடிஞ்சா பச்சையாக சாப்பிடுங்க.டிவி நிறைய பார்க்கிறீர்களா ? 'டிவி' நிறைய பார்த்தால் கணக்கிலே நிறைய மார்க் உதைக்கும். 'சிறுவயது முதல் 'டிவி' பார்க்கும் மாணவர்கள், கணக்கில் மந்தமாகி விடுகின்றனர். அவர்கள் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது' என கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கனடா நாட்டின் மான்ட்ரியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கடந்த 97 மற்றும் 98ல் பிறந்த 1,314 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு நடத்தினர். இரண்டாவது வயது முதல், 'டிவி' பார்க்கும் குழந்தைகளின் திறனை, அவர்கள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களை கொண்டு கண்காணித்தனர்.  'தினமும் அதிகமாக, 'டிவி' பார்க்கும் குழந்தைகள் கணக்கு பாடத்தில் மந்தமாக உள்ளனர். வகுப்பில் அவர்கள் பாடங்களை கூர்ந்து நோக்குவதில்லை. ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை அவர்கள் சீக்கிரமாக புரிந்து கொள்வதில்லை,' என பள்ளியின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.  'டிவி' நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கப் பார்க்க, அவர்களது நுண்ணிய கூர்மை திறனும் குறைந்து வருகிறது. நொறுக்கு தீனி சாப்பிடும் வழக்கம் அதிகரித்து, உடல் எடையும் கூடி விடுகிறது. இதனால், இந்த குழந்தைகள் பத்து வயதில் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.குழந்தைகள் அதிக நேரம், 'டிவி' பார்ப்பதை அனுமதிக்காதீர்கள். அவர்கள் வீட்டுப்பாடங்களை செய்ய அறிவுறுத்துங்கள் என பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் லிண்டா பகனி, தன் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார். 'டிவி' பார்க்க எந்த அறிவும் தேவையில்லை; எந்த ஞாபகசக்தியும் தேவையில்லை; எந்த கண்டறியும் திறனும் தேவையில்லை. படுத்து கொண்டே, சாப்பிட்டு கொண்டே பார்க்கலாம். 'டிவி' பார்ப்பது, தூங்குவது இவைகள் படிப்பில் நாட்டமில்லாமல் செய்துவிடும். மிக எளிதான பழங்கங்களான இவை, நம் எதிர்காலத்தை மிக கடினமாக்கிவிடும், கண்ணுங்களா - கவனம்!அம்மா ! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா !  இது உளுந்து சாப்பாத்தி செய்முறை நேரம்.தேவையானவை:கோதுமை மாவு - ஒரு கப், சோயா மாவு - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.பூரணத்திற்கு தேவையானவை: உளுந்து - கால் கப், காய்ந்த மிளகாய் - 2, சோம்பு - கால் டீஸ்பூன், தேவையான அளவு உப்பு.செய்முறை:<கோதுமை மாவு மற்றும் சோயா மாவு ஆகியவற்றை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் மிருதுவாக பிசைந்து கொள்ளவும். ஒரு மிளகாயுடன் உளுந்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் சோம்பு, உப்பு, ஒரு மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து கொள்ளவும். ஒரு குச்சியை விட்டு பார்க்கும்போது மாவு ஒட்டாமல் வர வேண்டும். பிறகு இந்த உளுந்து பூரணத்தை ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும். கடாய் காய்ந்ததும் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, உளுந்து பூரணத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.பிசைந்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிது எடுத்து உருண்டையாக்கி கிண்ணம் போல செய்ய வேண்டும். உளுந்து பூரணத்தை அதில் நிரப்பி, உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும். தோசைக்கல்லில் சுட்டெடுக்கவும்.இந்த உளுந்து சப்பாத்தியை பற்றிய டயட்டீஷியன் கமென்ட்ஸ்:சப்பாத்திக்குள் வேக வைத்த உருளைக்கிழங்கை வைத்து செய்வதுதான் வழக்கம். ஆனால், இந்த சப்பாத்தியில் உளுந்து பூரணத்தை வைத்து செய்வதால், புரதச்சத்து அதிகமாக கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான டிபன் இது.கலாம் காலம் ! படிப்பில் சாதியுங்கள்! அறிவையும், அனுபவத்தையும் வளர்த்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் இலக்கை தீர்மானியுங்கள். அந்த இலக்கை நீங்கள் அடைய முயற்சிக்கும்போது, கண்டிப்பாக சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பிரச்னைகள் உங்களை வீழ்த்திவிடக்கூடாது. நீங்கள் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்துங்கள். நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற கூடிய அறிவான குடிமக்களாக, நீங்கள் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.   அன்புடன் அங்குராசு. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !