உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

குறுந்தகவல் பரிணாமம்!வணிக ரீதியாக, அலைபேசிகளில், எஸ்.எம்.எஸ்., என்ற குறுந்தகவல் சேவை, 1992ல் துவங்கப்பட்டது. அப்போது, அதற்கு பயன்படுத்திய, 160 குறியீடுகள் தான், இப்போதும் உள்ளன; எழுத்து வடிவமும் மாறவில்லை. இந்த சேவை அதிகமாக பயன்பாட்டில் இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால், வாட்ஸ் ஆப், மெசஞ்சர் போன்ற, தகவல் பரிமாறும் செயலிகள் அந்த இடத்தை பிடித்து விட்டன. இன்று, வங்கி, வியாபாரம் போன்ற, வணிக ரீதியான சேவைகளில் மட்டும் தான், குறுந்தகவல் சேவை அதிகம் பயன்படுகிறது. குறுந்தகவல் அனுப்புவதன் மூலம், வருமானத்தை பெருக்கிய, தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளின் வருகையால், பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதை நிவர்த்திக்கும் வகையில், 'ஆர்.சி.எஸ்.,' எனப்படும், 'ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ்' என்ற தொழில்நுட்பத்தை, எஸ்.எம்.எஸ்., என்ற குறுந்தகவல் செயலி சேவையுடன் இணைத்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.இது, குறுந்தகவல் அனுப்புவதற்கான செயலி மட்டும் அல்ல; வாட்ஸ் ஆப் போலவே, படங்களையும், வீடியோக்களையும் பகிரும் வசதிகள் கொண்டது. மற்ற செயலிகளில் உள்ளது போல, 'குரூப் சாட்' என்ற குழு அரட்டை, 'இமோஜீ ஸ்டிக்கர்' என்ற பாவனை படம், 'கியூ.ஆர்.கோடு' என்ற விரைவு வினைக்குறி போன்ற வசதிகளையும் உள்ளடக்கியது. அரட்டைக்கு வரும் நபர், தொடர்பில் இருக்கிறாரா என்பதை அறிவது, நிறுவனங்களின் குறுந்தகவலை உறுதி செய்து கொள்ளும் அம்சம் என, பல வசதிகள் இதில் இருக்கும்.இத்துடன், வீடியோ கால் வசதியும் இணைக்கப்படும். இவை அனைத்தையும், தற்போது, குறுஞ்செய்தி பரிமாற்றத்துக்கு பயன்படுத்தும், அலைபேசி செயலி மூலமே செய்ய முடியும்.இதை சாத்தியமாக்க, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பு தேவை. இதற்காக, 55 தொலை தொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து உள்ளது கூகுள் நிறுவனம். இந்தியாவில், முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. உதைப்போர் ஆட்டம்!நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்க்கவே, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், சிலநேரம் விளையாட்டு, வினையில் முடியும். ஒரு பெரும் போர் உருவாக காரணமாக அமைந்த விளையாட்டுப் போட்டி பற்றி பார்க்கலாம்... உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டி, தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில், ஜூன் 27, 1969ல் நடந்தது. அதில், மத்திய அமெரிக்க நாடுகளான, எல் சால்வடார் - ஹோண்டுராஸ் அணிகள் மோதின.ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன், இரண்டு அணிகளும், தலா இரண்டு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. அந்த நேரத்தில், ஹோண்டு ராஸ் அணி வீரர் முரட்டுத்தனமாக விளையாடியதால், எதிரணிக்கு, 'பெனால்டி' வாய்ப்பு தரப்பட்டது. அதைப் பயன்படுத்திய எல் சால்வடார் அணி, மூன்றுக்கு, இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.உடனே, இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இது, விளையாட்டு மைதானத்தை கடந்து, இரு நாடுகளிலும் பரவியது. இரண்டு நாட்டு தலைவர்களும் குறைகள் கூறி, அறிக்கை போர் நடத்தி, உறவை முறித்தனர். இதன் உச்சமாக, பயங்கர போர் மூண்டது.அண்டை நாடுகளான இவை, ஜூலை 3, 1969ல் பயங்கர மோதலைத் துவங்கின. இதில், 70 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா முயன்றது. இரு நாடுகளுக்கும், எல்லா வகை உதவிகளையும் நிறுத்தியது. கிட்டத்தட்ட பொருளாதார தடை போல் அமைந்ததால், நெருக்கடி ஏற்பட்டது.இரு நாடுகளிலும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது; மக்கள் பட்டினியால் வாடினர். சாவுகளும் அதிகரிக்கவே, முடிவுக்கு வந்தது போர். விளைவாக, இரு நாட்டிலும், 1 லட்சம் பேர் அகதிகளாயினர். வீடு, வாழ்வை இழந்து தவித்தனர்.சகிப்பு இன்மை என்ற கெட்டகுணம், ஒரு விளையாட்டு போட்டியை, பெரும் போராக உரு மாறியது; ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது; மனித நாகரிகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு, '100 மணி நேர போர்' என, உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. புதியதோர் உலகம் செய்வோம்; கெட்ட போரிடும் மனங்களை வேரோடு சாய்ப்போம்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !