உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வெற்றியின் அவதாரம்!பிரமாண்டமான, டைட்டானிக், அவதார் போன்ற திரைப்படங்களை தயாரித்து புகழ் பெற்றவர், ஜேம்ஸ் கேமரூன். அவரது வெற்றிக் கதை...வட அமெரிக்க நாடான கனடா, கபூஸ்காசிங் நகரில், 1954ல், பிறந்தார் ஜேம்ஸ் கேமரூன். இடது கை பழக்கம் உள்ளவர். ஓவியங்கள் வரைவதில் சிறுவயதிலே ஈடுபாடு காட்டினார். இது அவரது கற்பனைக்கு வடிகாலாக அமைந்தது. பள்ளி நாட்களில், அறிவியல் புனை கதைகள் எழுதினார். தொழில் நுட்பங்கள் குறித்துக் கற்க ஆர்வம் காட்டினார். கல்லுாரியில் இயற்பியல் பாடப்பிரிவில் சேர்ந்தார்; அதை முடிக்கவில்லை. சிறிய வேலைகள் செய்தபடியே நுாலகத்தில், 'விஷுவல் எபக்ட்ஸ்' பற்றிய புத்தகங்களைத் தேடிப் படித்தார்.நண்பர்கள் உதவியுடன், 'ஸீனோ ஜெனஸிஸ்' என்ற குறும்படம் எடுத்தார். இதைக்காட்டி, ஒரு சினிமா கம்பெனியில் சேர்ந்தார். கசப்பான அனுபவங்களால் பணியை உதறி, மினியேச்சர் மாடல்கள் உருவாக்கும் வேலையில் சேர்ந்தார். பின், ஒரு சினிமாவில் கலை இயக்குனராக பணியாற்றினார். ஒருமுறை ஜேம்ஸ் கேமரூன் வினோதமாக ஒரு கனவு கண்டார். அது, சிவப்பு கண்கள் கொண்ட, 'ரோபோட்' வடிவம். துாக்கம் கலைந்ததும் கனவில் கண்ட உருவத்தை ஓவியமாக வரைந்தார். அதை கதாபாத்திரமாக்கி, திரைக்கதையும் எழுதினார். அதனுடன் சினிமா கம்பெனிகளில் படி ஏறி இறங்கினார். அதை, படமாக்க யாரும் துணியவில்லை.அப்போது வினோத யோசனை வந்தது. அதன்படி, ஹாலிவுட் படவுலகை கலக்கிக்கொண்டிருந்த நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகரை மாதிரியாகக் கொண்டு சில ஓவியங்கள் வரைந்தார் கேமரூன். விரிவான கடிதம் எழுதி, ஓவியங்களை இணைத்து அவருக்கு அனுப்பினார். அதைக் கண்டு பிரமித்தார் அர்னால்டு. இணைக்கப்பட்டிருந்த கதையைப் படித்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இதை அடுத்து, 'டெர்மினேட்டர்' என்ற பெயரில் அந்த கதை படமாக்கப்பட்டது. அது, மாபெரும் வெற்றி பெற்றது. பின் கேமரூன் இயக்கிய எல்லா திரைப்படங்களும் ஒளிர்ந்தன. இவரது தயாரிப்பில் வெளிவந்த, 'டைட்டானிக்' திரைப்படம், ஹாலிவுட் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றியுடன், 11 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. தொடர்ந்து திரைத்துறையில் அவர் பெறாத விருதே இல்லை. கனவு கண்டால் மட்டும் போதாது; அதை புரிந்து செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதே, கேமரூன் வாழ்க்கை கற்பிக்கும் பாடம்.நீர் மூழ்கிகள்!மூச்சை பிடித்தபடி நீருக்கடியில் எத்தனை மணி நேரம் மூழ்கி இருக்க முடியும்.அரை நிமிடம்... ஒரு நிமிடம்... இரண்டு நிமிடம்... அதற்கு மேல் மூழ்கி இருக்க வேண்டுமானால், மூழ்க பயன்படும் பிரத்யேக உபகரணங்கள் தேவைப்படும். எதுவும் இல்லாமல், 10 நிமிடத்திற்கும் மேல் மூழ்கி இருக்கும் திறன் கொண்டவர் பற்றி அறிந்திருக்கிறீர்களா... ஆசிய நாடான பிலிப்பைன்சை சேர்ந்த பஜாவ் இனமக்களில் பலர், மூழ்கும் கலையில் வீராதிவீரர்களாக திகழ்கின்றனர். எந்த உபகரணமும் இன்றி, 10 முதல், 13 நிமிடங்கள் வரை, கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதில் வல்லவர்கள். கடலில், 200 அடி ஆழத்திற்கு சென்று, மீன் மற்றும் கடல் உயிரினங்களை பிடித்து வருகின்றனர். இவர்கள் உடலமைப்பு, அதிக நேரம் மூச்சு பிடித்து கடலுக்குள் மூழ்கி இருப்பதற்கு ஏற்றவாறு உள்ளதாக தெரிவித்துள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !