உள்ளூர் செய்திகள்

வாழைப்பூ உருண்டை சூப்பர்!

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், மதிய உணவை லஞ்ச் பாக்ஸில் கையோடு கொண்டு செல்வது கிடையாது. 'டப்பா வாலாக்கள்' போன்று ஆண்களும், பெண்களும் வீடு வீடாகச் சென்று, கேரியரை வாங்கி, பள்ளிக்கு மதிய உணவை கொண்டு வருவது வழக்கம். பெண்கள் சும்மாடு தலையில் கூடையையும், ஆண்கள் சைக்கிளிலும், கேரியர்களோடு, மத்தியானம் பள்ளி மரத்தடியில் காத்திருப்பதே ஒரு அழகுதான்.எஞ்சிய உணவை, ஒன்றாகக் கலந்து கூட்டாஞ்சோறாக சாப்பிட்டு, பாத்திரங்களை கழுவி திருப்பிக் கொடுக்கும் இந்த வேலையில் வருமானமும் உண்டு; வயிற்றுக்கு உணவும் உண்டு.ஒருநாள்-எனது வகுப்பு முடிய தாமதமானதால், லேட்டாகச் சென்று, என் அம்மா அனுப்பிய கேரியரை திறந்த போது, சாதம், பருப்பு, கீரை, தயிர் சாதம் இருந்தது. எனக்காகக் காத்திருக்காமல், சாப்பிட்டு முடித்த என் தோழி பத்மாவின் கேரியரைப் பார்த்தவுடன்தான், ஒரே தோற்றத்தில் இருந்த எங்கள் டிபன் பாக்ஸ் மாறியது இருவருக்கும் புரிந்தது.'உன் அம்மா அனுப்பியிருந்த ரசமும், வாழைப் பூ உருண்டையும் ரொம்ப ரொம்ப சூப்பர்!' என பத்மா சொல்ல, அப்போதுதான் இன்றைய மெனு, ரசமும், மட்டன் கோளா உருண்டையும் என என் அம்மா காலையில் கூறியது நினைவுக்கு வந்தது.அக்ரஹாரத்து பத்மா, மட்டன் கோளாவை வாழைப்பூ உருண்டையாக ரசித்து சாப்பிட்ட கதை இன்றுவரை அவளுக்குத் தெரியாது. இன்று அவள் எங்கிருக்கிறாளோ? இன்றும் மட்டன் கோளா செய்யும் போதெல்லாம், நினைவில் அழியாத கோலங்களாய் வந்து போகும் இந்த நிகழ்ச்சி. சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள்தான் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. நிஜம்தானே!- எஸ்.என்.சாந்தினி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !