நாற்று ஆனார்!
கடலுார் மாவட்டம், சிதம்பரம், நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 12ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!தமிழாசிரியர் சம்பத், தமிழ் மொழி மீதிருந்த அதீத பற்றால் பெயரை, செல்வம் என மாற்றியிருந்தார். மொழி கற்கும் ஆர்வத்தைத் துாண்ட, தமிழ் ஆண்டுகளின் பெயரை, மனப்பாடம் செய்ய சொன்னார். அதன்படி தமிழ் ஆண்டுகள், எளிதாக மனப்பாடமாகிவிட்டது.ஒரு நாள், 'நாத்தனார்' என்ற உறவை குறிக்கும் பெயர் சொல் பற்றி வகுப்பில் விவாதம் வந்தது. அதை நயமுடன், 'நாற்று போன்றவள் பெண்; அதாவது, ஓரிடத்தில் வளரும் நெல் நாற்றை, மற்றொரு இடத்துக்கு மாற்றி நட்டால் தான், பயிர் சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சல் தரும்... 'அதுபோல், மணம் முடித்து பிறந்த இடத்திலிருந்து, புகுந்த வீடு செல்லும் பெண்ணை, 'நாற்று ஆனார்' என அழைத்தனர். அது மருவி, 'நாத்தனார்' என இப்போது கூறுகின்றனர்...' என, விளக்கம் அளித்தார் ஆசிரியர். வியப்புடன் கவனித்து நினைவில் கொண்டேன். அதன்பின், இது போல் சுவாரசியங்கள் குறித்து தேட ஆரம்பித்தது மனம்.தற்போது, என் வயது, 54; ஒரு சொல்லின் உண்மை பொருளை இயல்பாக விளக்கிய அந்த ஆசிரியரை எண்ணும் போதெல்லாம், மனம் துள்ளுகிறது!- கவுரி ராமலிங்கம், சிதம்பரம்.தொடர்புக்கு: 75984 55457