உள்ளூர் செய்திகள்

நெருப்புக்கோட்டை (4)

சென்றவாரம்: காட்டில் விரக்தியோடு அமர்ந்திருந்த மூன்றாவது இளவரசன் இளங்குமரனை, ஒரு கிழவி சந்தித்து 'நீ கண்டிப்பாக சக்ரவர்த்தி ஆகிவிடுவாய்' என ஆரூடம் கூறினாள். உற்சாகத்துடன் தந்தையை சந்தித்தான். இனி-''மகனே... விருத்த வைத்தியனும், பால ஜோசியனும் நம்பத் தகுந்தவர்கள் என்று நம் முன்னோர் கூறி இருக்கின்றனர். அதே போலக் கிழட்டுக் குதிரையும், முரட்டு வீரனும் வெற்றி தேடித் தருவர் என்ற ஒரு நம்பிக்கையும் நம் நாட்டில் உண்டு. ஆனால், என் குதிரை இங்கு எங்கே இருக்கிறதென்று எனக்கு தெரியாது. அதன் எலும்புகள் கூட மண்ணோடு மண்ணாகி மக்கி மடிந்து போயிருக்கலாம். இத்தனை ஆண்டுகள் அந்தக் குதிரை உயிரோடிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இப்படியொரு எண்ணத்தை யாரோ உன் மனத்தில் புகுத்தி இருக்கின்றனர். இறந்த குதிரையின் குளம்புகள் அதிர்ஷ்டம் தரும் என்று யாராவது கூறினார்களா?'' என்றார்.''அப்பா, இப்படியெல்லாம் விடுகதைகள் போட்டுப் பேசாதீர்கள். அந்தக் குதிரை இருக்கிறதா, இறந்துவிட்டதா என்பதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். நான் உங்களை கேட்பதெல்லாம் உங்களுடைய பழைய ஆடை அணிகளையும், ஆயுதங்களையும், குதிரையையும் எடுத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்,'' என்றான்.''ஆட்சேபணை ஏதுமில்லை மகனே. ஆடை அணிகளும், ஆயுதங்களும், அரண்மனைப் பொக்கிஷ சாலையில் எங்காவது இருக்கும். ஆனால் குதிரை? அது இப்போது உயிரோடு இவ்வுலகிலிருக்காதே!''''அப்பா, அதை எனக்கு அளிப்பதாகக் கூறுங்கள் போதும். அது உயிரோடிருந்தாலும், இறந்து போயிருந்தாலும் அது என் குதிரை. அதன் பிறகு முடிவெடுப்பது என் பொறுப்பு,'' என்றான் இளங்குமரன்.அரசர் தம் கடைக்குட்டி மகனை, அவனுடைய விசித்திரமான வேண்டுகோளை எண்ணி வியப்படைந்தவராக, ''இல்லாத ஒன்றை, உனக்களித்து உன்னுடையதாக்குவதில் எனக்கு என்ன கஷ்டம்? அந்தக் குதிரை இனி உன்னுடையதுதான், போதுமா? என்னோடு பொக்கிஷ சாலைக்கு வா... நீ கேட்ட மற்றவற்றையும் தருகிறேன்,'' என்று கூறி, அவனுடன் அரண்மனையின் கஜானாவுக்குப் போனார்.புழக்கத்தில் இல்லாத ஒரு அறையில், ஒட்டடையும், புழுதியும் மண்டிக் கிடந்த ஒரு மூலையில் போய், ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் அவருடைய குதிரைக்கு அணிவித்த சேணம், லகான் மற்றும் ஒளி இழந்து போயிருந்த பல அலங்காரப் பொருள்கள் இருந்தன. அவற்றைத் இளங்குமரனிடம் கொடுத்தார்.பிறகு, ஒரு பழங்காலத்து தேக்குமரப் பெட்டியிலிருந்து தாம் அணிந்த பழைய ஆடையணிகளையும், வில், வாள், கேடயம், ஈட்டி, அம்புகள் எல்லாவற்றையும் அவன் முன் குவித்தார்.''இத்தனையும் இனி உன்னுடையவை!'' என்றார்.இளங்குமரன் முகம் சுளிக்கவில்லை. ஆர்வத்தோடு, அவற்றை தன் அறைக்கு எடுத்து வந்தான். அவற்றைத் தூசி தட்டி, சுத்தமாக்கினான். ஆயுதங்களில் ஏற்பட்டிருந்த நசுங்கல்களையும், வளைசல்களையும் நேர் செய்தான். தேய்த்து, தேய்த்துத் துருவை அகற்றி பளபளப்பாக்கினான். வாள், ஈட்டி, அம்புகளை சாணை பிடித்துக் கூராக்கினான்.அதன் பிறகு குதிரையைத் தேடி லாயத்துக்குச் சென்றான். வரிசை வரிசையாக ஏராளமான குதிரைகள், கருப்பும், சிவப்பும், வெளுப்பும், குட்டையாகவும் வளர்ந்தும், பருத்தும் எத்தனை எத்தனை! இவற்றில் அந்தக் கிழவி கூறிய குதிரையைக் கண்டுபிடித்தாக வேண்டுமே!ஒரு அகன்ற தாம்பாளத்தில் தகதகவென்று கங்குகளைக் குவித்து லாயத்தின் நடுவே வைத்தான். அருகே நெருங்க முடியாதபடி வெப்பம் தகித்தது. குதிரைகளை எல்லாம் அவிழ்த்துவிட்டான். எந்தக் குதிரையும் தகிக்கும் தணல் நிறைந்த தட்டை திரும்பியும் பார்க்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு ஓடின.அப்போது -ஒரு குதிரை... குதிரையா அது? பல்லக்குப் போலக் குழிவாக வளைந்த முகுகு... எலும்புகளை எண்ணிக்கொள் என்று கூறும் உடல்... நரையும் திரைமயுமாக நடக்க முடியாமல் நடந்து வந்தது. தட்டிலிருந்த நெருப்புத் துண்டங்களை வேகவேகமாக விழுங்கியது.இளங்குமரனுக்கு ஏனோ ஒரே வெறுப்பாக இருந்தது. இப்படியொரு குதிரையா தனக்கு வாய்க்க வேண்டும் என்ற வேதனை ஏற்பட்டது. சவுக்கை எடுத்து அதை அடித்து விரட்டினான்.''உன் மீது ஏறிப் போனால், பார்த்தவர் எல்லாம் சிரிப்பர்,'' என்றான்.அந்த குதிரை அவன் சவுக்கடியை லட்சியமே செய்யவில்லை.தணலைச் சுவாரசியமாக விழுங்கிக் கொண்டிருந்தது. வேறு ஏதாவது நல்லதொரு குதிரை வராதா என்று ஆசையோடு பார்த்தான். ஆனால், அத்தனை பெரிய லாயம் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு குதிரை கூட இல்லை. எல்லாம் வெளியே புல்வெளிக்கு ஓடிவிட்டன.அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.என்ன அதிசயம்?தாம்பாளத்திலுள்ள நெருப்புத் துண்டுகளை எல்லாம் சாப்பிட்டதும், அந்தத் தொத்தல் குதிரை மூன்று முறை தன் உடலைக் குலுக்கியது. அப்போது?கம்பீரமானதொரு கனைப்புக்குரல் எழுந்தது. ஒட்டி, உலர்ந்து சாகும் நிலையிலிருந்த அந்தக் குதிரை... கம்பீரமாக, உடலில் ஒரு அபூர்வமான பளபளப்பும் மினு மினுப்புமாக, பிடரிமயிர் கொழுந்துவிட்டு எரியும் தீயின் நாக்குகளைப் போல அலை அலையாகப் படர்ந்து நெளிய மூன்று வயதுக் குதிரைக் குட்டியாக, தரையை உதைத்து நின்றது!அத்தனை அழகான குதிரைக் குட்டியை, வலுவுள்ள உடல் கொண்ட குதிரையை, கம்பீரமாகக் கனைக்கும் குரலை அதுவரை அவன் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. அழகு மட்டுமா? அந்த அதிசயக் குதிரை பேசவும் செய்தது!''இளவரசனே! என் முதுகின் மீது தாவி ஏறி அமர்ந்துகொள். என் பிடரியை உறுதியாகப் பிடித்துக் கொள்,'' என்றது.மந்திரத்தினால் கட்டுண்டவனைப்போல, இளங்குமரன் அதன் மீது ஏறி அமர்ந்து, அதன் திடமான கழுத்தை உறுதியாக அணைத்துக்கட்டிக்கொண்டான். அடுத்த விநாடி வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல அக்குதிரை வானத்திலே கிளம்பியது.மின்னலை விட வேகமாக விண்ணிலே பறந்தது. திடீரென்று, உருட்டிவிட்ட பாறையாகத் தரையில் இறங்கியது.சந்திரனுக்குப் போகவா, இல்லை சூரியனைத் தொடவா, கூறுங்கள் இளவரசே!''எஜமானே! வானத்திலே மிதந்து போய் மேகங்களைப் பிடிக்கலாமா கூறுங்கள்! ஏன் வாய் மூடி மவுனியாகிவிட்டீர்கள்?'' என்று கேட்டது அந்த மாயக் குதிரை.திகைப்புக் கனவிலிருந்து விழித்துக்கொண்ட இளவரசன், ''என் இனிய நண்பனே! நான் சொல்ல என்ன இருக்கிறது? என் தலையைக் கிறுகிறுக்க வைத்துவிட்டாயே. நான் மூச்சடைத்துப் போனேன்,'' என்றான்.''என்னைச் சாட்டையால் அடித்தீர்களே... அப்போது என் தலையும் கிறுகிறுத்துத்தான் போயிற்று. உங்கள் சவுக்கடியினால் என் உயிரே போய்விட்டது. இப்போதாவது என் மதிப்பைப் புரிந்து கொண்டீர்களா? அவலட்சணத்திலே அழகும், முதுமையிலே இளமையும், பலவீனத்திலே பலமும் உண்டென்பதை உணர்ந்தீர்களா? ''இனி நான் என் பழைய உருவை அடையப் போகிறேன். இந்த விநாடி முதல் நீங்கள் இடும் ஆணைப்படி, உங்களோடு வருவதற்குச் சித்தமாக இருக்கிறேன். உங்களை எப்படிச் சுமந்து செல்லட்டும், கூறுங்கள். சிந்தனையின் வேகத்திலா அல்லது காற்றின் வேகத்திலா?'' என்று கேட்டுக் கனைத்து நின்றது வேங்கைக் குதிரை!''அப்பனே! சிந்தனையின் வேகத்தில் போனாயானால், நான் செத்துப் போவேன். காற்றின் வேகத்துக்குப் போனால்தான் என் காரியங்களைக் களிப்போடு கவனிக்க முடியும்!'' என்றான்.''அப்படியே ஆகட்டும், இளவரசே! என் முதுகிலே பயமின்றி ஏறி அமருங்கள். நீங்கள் விரும்பும் இடத்துக்கு உங்களைக் கொண்டு சேர்க்கிறேன்!''இளவரசன் அந்த மாயக்குதிரை மீது மகிழ்ச்சியோடு ஏறி அமர்ந்தபின், அதன் கழுத்தையும், பிடரியையும் அன்போடு தடவிக் கொடுத்து, மனதார மன்னிப்பு கேட்டான். தென்றல் காற்றெனத் தவழ்ந்து சென்றது அந்தத் தொத்தல் குதிரை. ஆம், இப்போது அது தன் பழைய உருவில் எலும்பும் தோலுமாக காண்பவர் கை கொட்டிக் சிரிக்கும்படி இருந்தது.காற்று வீசுவது நின்றது. அந்தக் குதிரை இளவரசனோடு அரண்மனையின் முற்றத்தில் வந்து நின்றது. மகனை எதிர்பார்த்துக் காத்து நின்றார் அரசர்.அவன் ஏறி வந்த குதிரையைக் கண்டதும், ''இந்தக் குதிரையையா உன் பயணத்துக்கு தேர்ந்தெடுத்தாய்?'' என்று வேதனையுடன் கேட்டார்.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !