உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் தின சிறப்புக் கட்டுரை

எப்படி இருக்கும் அமெரிக்க பள்ளிக்கூடம்!பெரும் படிப்பு படித்தவர்கள் போக நினைப்பது அமெரிக்கா. உலகத்தார் ஒரு தடவையாவது போக நினைப்பது, அமெரிக்கா. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்கே பள்ளிக்கூடங்கள் எப்படி என்று பார்ப்போமா...அமெரிக்க பள்ளிகளில் அழகான சூழ்நிலையும், குழந்தைகளுக்கு கிடைக்கும் வரம்பு மீறாத சுதந்திரமும் மிக வித்தியாசமானவை.நம்மூர் போல அடிப்பது, திட்டுவது என்ற விவகாரமே இல்லாததால், ஆசிரியர்களிடம் பயமற்ற... ஆனால், மரியாதையுடன் கூடிய பரஸ்பர அன்பு இருக்கிறது. குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போதே, தினம் அவனை யார் யார் கொண்டு வந்துவிட்டு, அழைத்து போவார்கள் என்று போட்டோவுடன் விவரங்கள் தந்துவிட வேண்டும். அவர்களை தவிர வேறு யார் வந்தாலும், என்ன எமர்ஜென்சி என்று கூறினாலும், குழந்தையை வெளியே அனுப்பமாட்டார்கள்.குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே ஒரு அழகு. பள்ளி காம்பவுண்டுக்குள் ஒவ்வொரு காராக வரிசையில் தான் வரவேண்டும். வகுப்பறை வாசல் வந்ததும், அந்தந்த டீச்சர்கள் அவரவர் வகுப்பு குழந்தையை அழைத்து செல்வர்.கட்டாயமாக காரில் குழந்தையின் பெயரும், வகுப்பும் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டி விட வேண்டும். அதேபோல் திரும்ப அழைத்து வரும்போது அதே போல் வரிசை. குழந்தையை டீச்சர் அழைத்து வந்து, காரில் உட்கார வைத்து, 'சீட்' பெல்ட் கூட அணிவித்து விடுவர்.குழந்தையை நாம் காரில் ஏற்றும் போதே அவனைக் கூட்டிவரும் ஆசிரியை 'கடனே' என்று ஏற்றிவிடாமல், அன்று அவள் என்னென்ன ஸ்பெஷலாக படித்தாள். எவ்வளவு உற்சாகத்துடன் எல்லாவற்றையும் செய்தாள் என்று விவரமாக கூறி, பெற்றோருக்கு சந்தோஷத்தையும், குழந்தைக்கு ஊக்கத்தையும் தருகின்றனர்.வாரம் ஒரு குழந்தையை 'லீடர்' என்று தேர்ந்தெடுக்கின்றனர். அப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட குழந்தையின் கையில் ஒரு கொடியும் கொடுத்து, மற்றவர்களை விளையாட்டு மைதானத்திற்கு வழி நடத்த சொல்கின்றனர்.அங்கே குழந்தைகளின் நண்பர்களாய், விளையாட்டு தோழர்களாய் ஆசிரியர்கள் இருக்கின்றனர். பெற்றோரிடம், ஏன் சக நண்பர்களிடம் பகிராத செய்திகள், விஷயங்களைக்கூட குழந்தைகள் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, சமூகம் அரசாங்கம் என அனைத்தாலும் பொக்கிஷம் போல் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். இங்கேயும் அப்படி ஆக வேண்டும்!குழந்தைகள் தின வாழ்த்துக்கள் செல்லூஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !