சினிமாவும் வாழ்க்கையும்!
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1992ல், 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஒரு திரைப்படம் வெளியானது. அதில், பங்க் ஸ்டைலில் முடி வளர்த்திருப்பார் கதாநாயகன். அதே, ஸ்டைலில் தலை முடியை வளர்க்க ஆரம்பித்தனர் மாணவர்கள்.எங்கள் விலங்கியல் ஆசிரியர் ரத்தினம் மிகவும் கண்டிப்பானவர். அன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் திடீர் என, 'எல்லாரும் தலைமுடியை கொண்டை போல் வைத்துள்ளீர்கள்; நாளை, ஒரு முழம் பூவும் சூடி வாருங்கள்...' என கிண்டலாக சொன்னார். யாரும் பதில் பேசவில்லை.மறு நாள், அனைவரும் தலைமுடியை, 'கிராப்' வெட்டியிருந்தனர். அதை கண்டவர் மகிழ்ச்சியுடன், 'தலைமுடியை அதிகம் வைத்துக் கொண்டால், பேன் வந்து விடும்; குளித்தபின், தலை துவட்ட அதிக நேரமாகும். சரியாக தலை துவட்டவில்லையென்றால், ஜலதோஷம், தலைவலி போன்றவை ஏற்படும். இந்த உபாதைகளை தவிர்க்கவே, போலீசார் தலைமுடியை, கட்டையாக வெட்டிக் கொள்கின்றனர்...' என அறிவுரைத்தார்.என் வயது, 43; சினிமாவிற்கும், வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை, நுட்பமாக உணர்த்திய அந்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.- எ.சுல்தான் சேக், சென்னை.