இரக்கமே உயர்வு!
ஆலமரத்தில் மும்முரமாக, கூடு கட்ட துவங்கியது ஒரு காகம். இதைக் கண்ட மற்ற பறவைகள், 'துணையில்லாத ஒண்டி கட்டை நீ... உனக்கு எதற்காக கூடு கட்டுகிறாய்...' என்று ஏளனம் செய்தன.பதில் கூறாமல், கூடு கட்டும் பணியில் கவனமாக ஈடுபட்டிருந்தது காகம்.'அடுப்பு கரி போல் கருப்பா, நோஞ்சானாக இருக்கும், இந்த காக்காவை யார் விரும்புவர்...' என்று, ஏளனம் பேசியது கிளி.'பெரிய கூட்டை கட்டி, வாடகைக்கு விட்டு, கிடைக்கும் வருமானத்தில், உழைக்காமல் பிழைக்க போகிறது...'- நக்கலாக கூறியது மரங்கொத்தி.எதையும், காதில் வாங்கவில்லை காகம். சுள்ளிகளை பொறுக்கி வந்து, அழகிய கூட்டை கட்டி முடித்தது. பின் அதில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக உள்ளதா என்பதை சுற்றி வந்து கவனித்ததுமறுநாள் -அந்த கூட்டில், இரண்டு முதிர்ந்த காகங்கள் தங்கியிருந்தன. இதை பார்த்த காட்டு பறவைகள், 'இந்த கூட்டை என்ன விலைக்கு வாங்கினீர்...' என, பொறாமையுடன் கேட்டன.'விலை ஏதும் கொடுக்கவில்லை; எங்களுக்கு, வயது முதிர்ந்து விட்டதால் பார்வை மங்கிவிட்டது; பறந்து சென்று இரை தேட இயலவில்லை; பல நாட்கள் பட்டினி கிடந்தோம்; இதை அறிந்த கருணையுள்ள காகம், இந்த கூட்டை கட்டி, எங்களை பத்திரமாக அழைத்து வந்து தங்க வைத்திருக்கிறது...' என்றன. இதை கேட்டு, கேலி பேசிய பறவைகள் வெட்கி தலை குனிந்தன.அன்று தீபாவளி -அழகிய வண்டியில் காட்டில் கம்பீரமாக பவனி வந்தது சிங்கராஜாபட்டாசுகள் வெடித்து, அமர்க்களமாக வரவேற்றன பறவைகள். இரக்கமுள்ள காகமும் அதில் சேர்ந்திருந்தது. கூட்டில் தனித்திருந்த இரண்டு முதிய காகங்களை கண்ட சிங்கம் விசாரித்தது. சரியான பதிலை சொல்ல விரும்பாமல் விழித்தன பறவைகள்.உண்மை அறியும் நோக்கில் தனித்திருந்த முதிய காகங்களிடம் சென்றது சிங்கராஜா. அவை உண்மை தகவலை எடுத்து கூறின. இரக்க குணம் நிறைந்த காகத்தை பாராட்டியது சிங்கம். அதை காட்டுக்கு ராஜாவாக நியமனம் செய்தது. காகத்தின் விலை மதிக்க முடியாத குணத்துக்கு தலை வணங்கி, ராஜாவாக ஏற்று கொண்டன பறவைகள். குழந்தைகளே... இயலாதவர்களுக்கு உதவுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்!- எஸ். டேனியல் ஜூலியட்