க்ரேவி வரிக்குதிரை!
வரிக்குதிரை இனத்தில் பெரியது, க்ரேவி வரிக்குதிரை. விலங்கினத்தில், 'ஈகுயூஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்தது. பெரிய காதுகள், நீண்ட கழுத்துடன் கோவேரி கழுதை போல் காட்சி தரும். மந்தையாக வாழும் பண்பு கொண்டது; இடப்பெயர்ச்சியிலும் அப்படியே செல்லும். மந்தையில் இருக்கும் போதுதான் பலத்தை உணரும்.இந்த விலங்கு...* ஆரோக்கிய கண்கள் உடையது* பகல் மற்றும் இரவில் நன்றாக பார்க்கும் திறன் பெற்றது* உடலின் மேல் பகுதியில் கருப்பு பட்டைகள் உண்டு; அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் காணப்படும்* காதுகளை, நான்கு திசையிலும் சுழற்றும் திறனுள்ளது. இதனால், மெல்லிய சத்தத்தையும் துல்லியமாக கேட்கும்* புல், பழம், மரக்கிளை மற்றும் இலைகளை தின்னும்* வாழ்வில், 60 சதவீதம் நேரத்தை, சாப்பிட செலவிடும்* பசு போல் சாந்த குணம் கொண்டது. ஆனால், எதிரியால் எளிதில் நெருங்கி விட முடியாது; சிங்கம், புலியை கூட, உதைத்து எலும்பை உடைத்து விடும்.இதன், கர்ப்ப காலம், 13 மாதங்கள்; ஒரு குட்டி ஈனும். குட்டி, பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து நிற்கும்; மூன்று மாதத்தில் புல் மேயத் துவங்கும்; ஆறு மாதத்துக்கு பின் தான் தண்ணீர் அருந்தும். பின், தாயுடன் இணைந்து, மூன்று ஆண்டுகள் வாழும்.ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, சூடானில் அதிகம் இருந்தது; தோல், மாமிசம் மற்றும் மருந்திற்காக வேட்டையாடப்பட்டதால், அருகிவிட்டது. தற்போது, ஆப்பிரிக்காவில் வட கென்யா, எத்யோப்பியா காடுகளில் மிக குறைந்த அளவில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.உலகம் முழுதும், 2 ஆயிரம் க்ரேவி வரிக்குதிரை தான் தற்போது உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 800 விலங்கு பூங்காக்களிலும், மற்றவை காடுகளிலும் உள்ளன.- வர்ஷினி