நன்றி மறவாதே!
சித்திரன் அங்க நாட்டு மன்னன்; வேட்டையாடுவதில் ஆர்வம் உள்ளவன். வீரர்களுடன் காட்டிற்கு, குதிரையில் கிளம்பினான்; சிங்க வேட்டை ஆர்வத்தில், தனியாக வெகுதுாரம் சென்று விட்டான். பாதை தெரியவில்லை; பசி வயிற்றைக் கிள்ளியது; தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை. இருட்ட ஆரம்பித்தது. குதிரையும் சோர்வுறவே, ஒரு மரத்தடியில் களைப்பாறினான்.துாரத்தில் சிறு வெளிச்சம் தெரிந்தது; குதிரையுடன் அங்கு சென்றான்; குடிசை ஒன்றில் எரிந்த அகல் வெளிச்சம் தான் அது. அங்கு, தியானத்தில் இருந்தார் பெரியவர். காலடி ஓசை கேட்டு கண் விழித்தவரிடம், 'ஐயா... நான் ஒரு மன்னன்; வேட்டையாட வந்த போது, வழி தவறி வீரர்களைப் பிரிந்து விட்டேன். இருட்டில் பாதை தெரியவில்லை; பசிக்கிறது; எனக்கும், குதிரைக்கும் சாப்பிட ஏதாவது தாருங்கள்...' என்றான்.'மன்னா... இந்த எளியவன் இங்கு கிடைக்கும் பழங்களைத் தான் சேகரித்து வைத்துள்ளேன்...' என்று கொடுத்தார். சித்திரனை, குடிசைக்குள் படுக்கச் சொல்லி, மிருகங்கள் அணுகாதவாறு வாசலில் தீயை மூட்டி காவல் இருந்தார். நன்றாக துாங்கிய சித்திரன், விடிந்ததும் நன்றி தெரிவித்தான். என்ன வேண்டுமானாலும் தருவதாக வாக்குறுதி அளித்தான்.சிறு சிரிப்புடன், 'மன்னா... உன் ராஜ்ஜியத்தில் பாதியை எனக்கு கொடுப்பாயா...' என்றார் பெரியவர்.'நீர் கொடுத்த பழங்களுக்கு பதிலாக பாதி ராஜ்ஜியமா...' என்று கேலி செய்தான் மன்னன்.'நான் கொடுத்தவை கொஞ்சமாக இருக்கலாம்; ஆனால், அது கிடைக்காவிட்டால், நீ சோர்வுற்று, காட்டு விலங்குகளிடம் சிக்கி இருப்பாய். அதன்பின், இந்த ராஜ்ஜியம் உனக்கு இல்லை...'உன் ராஜ்ஜியம் எல்லாம் எனக்கு வேண்டாம்; உனக்கு நன்றி உணர்ச்சி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தேன். அது, அறவே இல்லை என்று புரிந்து கொண்டேன். நீ உன் வழியே போகலாம்...' என்றார் பெரியவர்.தவறைப் புரிந்து, பெரியவர் பாதம் தொட்டு வணங்கி, மன்னிப்பு கேட்டான் மன்னன்.குழந்தைகளே... ஒருவர் செய்யும் சிறு உதவியும் முன்னேற்றத்துக்கு துணை செய்யும். எனவே, எந்த உதவி பெற்றாலும் நன்றி கூற மறவாதீர்.என்.உஷாதேவி