தண்ணி குடிச்சி... சாப்பிட்டு...
மேட்டுக்குடி என்னும் ஊரில் ராஜன் என்பவன் வாழ்ந்து வந்தான். கடைந்தெடுத்த கருமி. அவனுக்கு சீனு என்ற மகன் இருந்தான். அவனும், தந்தையை போலவே கருமியாக இருந்தான்.அவர்கள் இருவரும், அந்த ஊரில் யார் வீட்டில் திருமணம் நடந்தாலும், வீட்டுக்காரர்கள் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும் ஊருக்கு முன் போய் விடுவர். சாப்பாட்டுப் பந்தி ஆரம்பமானதும் யாரும் அழைக்காமலேயே முதல் ஆட்களாகப் போய் அமர்ந்து விடுவர். அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா, என்று கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவர்.வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டால், அன்று முழுவதும் சாப்பிடாமலே இருந்து விடுவர். இவ்வாறு ஊரில் நடக்கும் அனைத்து விசேஷங்களிலும் சாப்பிட்டு வந்தனர்.ஒருநாள்-''அப்பா... அப்பா!'' என்று அலறியடித்து ஓடிவந்தான் சீனு.''ஏண்டா இப்படி அலறிகிட்டு ஓடி வர்றே?'' என்றான் ராஜன்.''நம்ம ஊர் பண்ணையார் மகளுக்கு நாளைக்கு கல்யாணம். பெரிய பந்தல் போட்டிருக்காங்க...'' என்று மகிழ்ச்சியோடு கூவினான்.அந்தச் செய்தி தேனாக இனித்தது ராஜனுக்கு. ''டேய் சீனு! நாளைக்கு நடக்கிற கல்யாணத்துல செமப்பிடி பிடிச்சுறனும்டா,'' என்றான்.மறுநாள் -காலையிலேயே ராஜனும், சீனுவும் கல்யாண வீட்டில் ஆஜராகிவிட்டனர். இருவரின் கண்களும் சாப்பாட்டுப் பந்தி போடும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது.பந்தி ஆரம்பமானதும் ராஜனும், சீனுவும் முட்டி மோதி ஓடிப்போய் முதல் வரிசையில் அமர்ந்தனர்.தலைவாழை இலைபோட்டு, பக்கத்தில் தம்ளரில் தண்ணீரையும் ஊற்றிக் கொண்டே சென்றனர்.பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு முதலில் இனிப்பு, வடை, காய்கறி, அப்பளம் என்று வரிசையாகப் பரிமாறப்பட்டன.ராஜன் அவசர அவசரமாக, அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். சோறு விக்கியபோது கூட தண்ணீர் குடிக்கவில்லை. 'சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடித்தால், நிறைய சாப்பிட முடியாது' என்பது அவனுடைய எண்ணம்.ஆனால், அவனுடைய மகன் சீனுவோ கொஞ்சம் சாப்பிடுவதும், ஒரு மடக்கு நீர் அருந்துவதுமாக இருந்தான். அதைக் கண்ட ராஜனுக்கு கடுங்கோபம் வந்தது.''அட மடப் பயலே! இப்படி இடையிடையே தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்கிறாயே... அதற்கு பதில் நிறைய சாதம், காய்கறிகளை சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எனக்கு வந்து நீ மகனாகப் பிறந்தாயே...'' என்று நொந்து கொண்டான்.ஆனால் சீனுவோ, நான்கு கவளம் சோறு உண்பதும், ஒரு மடக்கு நீர் அருந்துவதுமாக தன் போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தானே தவிர, தந்தையை நிமிர்ந்து பார்க்கவில்லை.ராஜனுக்கோ கடுங்கோபம் வந்தது. 'நிமிர்ந்து பார்க்கிறானா பாவி! இவனுக்கு எப்படி புத்தி புகட்டி, நீர் அருந்தாமல் சாப்பிடச் செய்வது' என்று புழுங்கினாலும் தன் வேலையை அவன் நிறுத்தவில்லை. சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தான்.விருந்து முடிந்தது. சீனு இலையில் மீதமிருந்த இனிப்பையும், வடையையும் ஒரு பையில் எடுத்து மறைத்தபடி வெளியில் வந்தான். அவன் பின்னாலேயே விரைந்து வந்த ராஜன், தெருவில் இறங்கியதும் மகனின் முதுகில், 'சுளீர்' என்று ஒரு அடி கொடுத்தான்.உடனே வெலவெலத்துப் போன சீனு, ''என்னை ஏன் அடிக்கிறீர்கள். இனிப்பையும், வடையையும் எடுத்து வந்ததற்காகவா?,'' என்றான்.''அதற்கு போய் ஏண்டா அடிக்கிறேன். நிறைய சாப்பிடுடான்னு சொன்னா, தண்ணீயைக் குடிச்சி ஏண்டா வயிற்றை நிரப்பினாய்,'' என்றான் ராஜன்.''இதுக்காகவா என்னை அடித்தீர்கள். வீட்டுக்கு வாருங்கள். நான் தண்ணீர் குடிச்சுக்கிட்டே சாப்பிட்டது ஏன் என்பதற்கு காரணம் சொல்கிறேன். அது சரியாகத் தோன்றவில்லை என்றால் அதற்கு பிறகு அடியுங்கள்,'' என்றான் சீனு.இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.சீனு உள்ளே போய் இரண்டு குவளைகளை எடுத்து வந்து, அவை நிரம்பும் அளவுக்கு மண்ணை எடுத்துப் போட்டான். பின்னர் ஒரு குவளையில் இருந்த மண் முழுவதையும் கீழே கொட்டினான். அடுத்து கொட்டிய மண்ணில் கால்வாசியை எடுத்து மீண்டும் குவளையில் போட்டு அதன் மீது தண்ணீரை ஊற்றினான்.பின் மறுபடியும் பாதி மண்ணை எடுத்து குவளையில் போட்டு அதன் மீது சிறிது தண்ணீரை ஊற்றினான். இப்படியே மொத்த மண்ணையும் குவளையில் போட்டு, அதன் மேல் மீண்டும் சிறிது தண்ணீரை ஊற்றிய போது குவளையில் போட்ட மண் அமுங்கி, மேலும் சிறிது மண்ணைப் போட இடம் இருந்தது.இதை, கருமி ராஜன் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.''பார்த்தீர்களா அப்பா! முதலில் குவளை நிறைய மண் இருந்தது. கொஞ்சம் மண், கொஞ்சம் தண்ணீர் என்ற முறையில், நிரப்ப நிரப்ப மண்ணெல்லாம் நீரில் நனைந்து அமுங்கி, இப்போது மேலும், கொஞ்சம் மண் போடுவதற்கும் இடம் ஏற்பட்டு விட்டது. நான் சாப்பிட்ட முறையும் இதுதான். நான் அதிகம் சாப்பிட்டேனா.... நீங்கள் அதிகம் சாப்பிட்டீர்களா என்று இப்போது சொல்லுங்கள்?'' என்று கேட்டான்.அதைக் கேட்ட கருமி ராஜன், மறுபடியும் தன் மகனைப் பிடித்து, 'மொத் மொத்'தென்று நான்கு அடி கொடுத்தான்.''இப்போது ஏனப்பா என்னை அடிக்கிறீர்கள்! நான் செய்தது தவறா?'' என்றான் ராஜன்.''பின் என்னடா! இதை முதலிலேயே என்னிடம் ஏன் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நானும் உன் மாதிரியே சாப்பிட்டு, இன்னும் கொஞ்சம் அதிகமான உணவை வயிற்றில் அடைத்திருப்பேனே பாவி! அதைக் கெடுத்துவிட்டாயே,'' என்று கூறி மகனின் முதுகில் மேலும், நான்கு அடி கொடுத்தான்.குட்டீஸ்... இந்தக் கஞ்சர்களைப் போல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம். அளவோடு சாப்பிடுங்க. சாப்பிட்டு முடித்த பிறகே தண்ணீர் குடிங்க. அதுதான் நல்லது. சரியா பட்டூஸ்!