முன் கசப்பு பின் இனிப்பு!
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம், ஸ்ரீ சோளீஸ்வரா நடுநிலைப் பள்ளியில், 1935ல், 8ம் வகுப்பு படித்தேன். என் தந்தை, எஸ்.ராமமூர்த்தி, வகுப்பு ஆசிரியராக இருந்தார். நேர்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர்.எங்கள் கிராமத்திலிருந்து, பள்ளிக்கு, 3 கி.மீ., துாரம். தினமும் அப்பாவுடன் நடந்து செல்வேன். ஒரு நாள் அதிகாலை, 'மாயவரத்தில் வேலை இருப்பதால் சீக்கிரம் போகிறேன்; பள்ளி சாவிக்கொத்தையும் எடுத்து, சரியான நேரத்துக்கு வா...' என்றார்.அன்று, பள்ளி முகப்பில், தந்தையுடன் ஆசிரியர்கள் காத்திருக்க கண்டேன். சாவிக்கொத்தை மறந்ததால் திடுக்கிட்டேன். கோபத்தின் உச்சிக்கு சென்ற அப்பா, கடுமையாக அடித்து, 'போய் சாவியை எடுத்து வா...' என்று விரட்டினார். 'மிதிவண்டியில் எடுத்து வருகிறோம்...' என்று உடனிருந்த ஆசிரியர் பரிந்தார். மறுத்தவர், 'பாடம் கற்றால் தான் புத்தி வரும்...' என தண்டித்தார்.அழுதபடியே, 6 கி.மீ., துாரத்தை ஓடியும், நடந்தும் கடந்தேன்; கோபம், வெறுப்பு, ஆத்திரம் பொங்க சாவிக்கொத்தை கொடுத்தேன். படிப்பை முடித்து வங்கியில் உயர் அதிகாரியாக சேர்ந்த போது, நேரம் தவறாது, கவனம் சிதறாது சாவிக்கொத்தை எடுத்து செல்ல, இந்த அனுபவமே உதவியது.நல்லாசிரியர் விருது பெற்ற என் தந்தையின் வாழ்க்கை, 'மூத்தோர் சொல், முது நெல்லி போல... முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்' என உணர்த்தியது. - டி.ஆர்.ரங்கநாதன், சென்னை.