மீன் எண்ணெய்!
சென்னை, வண்ணாரப்பேட்டை, புட்டாச்செட்டி தெரு, மாநகராட்சி பள்ளியில், 1957ல், 4ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தார், வெங்கட்ராமன். என் மீது, மிகுந்த பற்றும், அக்கறையும் கொண்டவர்.அப்போதுதான் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டிருந்தது. பிற்பகல், 3:00 மணி அளவில், பால் பவுடர் பானம் ஒரு டம்ளரில் கொடுப்பர்; மீன் எண்ணெயில் சில சொட்டுகள் வாயில் ஊற்றுவர்.நான் சைவ உணவுப் பழக்கம் கொண்டவன்; பால் பவுடர் பானம் மட்டும் குடித்து, மீன் எண்ணெய்க்கு, 'டிமிக்கி' கொடுத்து வந்தேன். இதை கவனித்து, 'சில சொட்டுகள் தானே... தயங்காமல் சாப்பிடு... உடம்புக்கு நல்லது...' என அறிவுரைத்தார் ஆசிரியர். பின், அதையும் வாயில் வாங்கிக் கொண்டேன். சக மாணவர்கள், 'மீன் எண்ணெய் சாப்பிடுறான் ஐயர்...' என, கேலி செய்தனர்.என்னை தட்டி கொடுத்தபடி, 'உடம்பு மிக மோசமாக உள்ளது; மற்றவர் கேலியை பொருட்படுத்தாதே... ஒரு சிலச் சொட்டு தானே... தயங்காமல் சாப்பிடு...' என உற்சாகப்படுத்தி, கிண்டல் செய்தவர்களை மென்மையாக அடக்கினார் ஆசிரியர்.எனக்கு, 75 வயதாகிறது; அந்த நிகழ்வை, இன்றும் மறக்க முடியவில்லை. - பி.கே.ஈஸ்வரன், சென்னை.தொடர்புக்கு: 63696 53068