ஆயிரம் ஆண்டுகளாக அழியாத உணவு வகைகள்!
பழங்காலத்தில் மக்கள், குழுவாக வாழ முற்பட்ட போது, உணவு பொருட்களை சேமிக்கும் பழக்கம் துவங்கியது. இவ்வாறு சேமித்திருந்த உணவுப் பொருட்கள், உலகின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் அழியாமல் இருப்பதை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். இது பற்றிய பார்ப்போம்...ரொட்டி: தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் 1,900 ஆண்டு பழமையான ரொட்டி கண்டறியப்பட்டது. இங்கு கி.பி., 79ல் எரிமலை வெடித்து, பேரழிவு ஏற்பட்டது. அதை சுற்றியிருந்த கிராமங்கள் அழிந்தன. அதில் பாம்பீ நகரமும் முற்றிலும் அழிந்தது. அங்கு நடத்திய ஆய்வில் பழங்கால ரொட்டி கண்டெடுக்கப்பட்டது. பேக்கரியில், ரொட்டி தயாரித்து கொண்டிருந்த போது எரிமலை வெடிப்பு சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அது கருகிய நிலையில் பேக்கரி முத்திரையுடன் உள்ளது. தற்போது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் கண்டு வியக்கின்றனர்.ஒயின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனி, பிபால்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, ரைன்லேண்ட் பாலட்டினேட் பகுதி குடியிருப்பில், கி.பி.1867ல் கண்டு எடுக்கப்பட்டது. இது, வழக்கமான ஒயின் போல் ருசியுடன் இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். பாட்டிலை திறக்காமல் நடந்த ஆய்வில் பாக்டீரியா கலந்திருக்கவில்லை என்பது உறுதியானது. போதை தரும் தன்மையும் குறைந்து விட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இது, 1,650 ஆண்டுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.வெண்ணெய்: ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் நடந்த ஆய்வில் தரையில் புதைந்த நிலையில் வெண்ணெய் கட்டி கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கி.மு., 1,700ல் வெண்ணெய் சேமிக்கும் பழக்கம் இருந்ததாக வலராற்று குறிப்பு உள்ளது. திருடர்களிடம் இருந்து பாதுகாக்க இதை புதைத்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். உலகில் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.சூப்: ஆசிய நாடான சீனாவில் பழமையான கல்லறை ஒன்றை, 2010ல் திறந்தனர். வெண்கல பாத்திரம் ஒன்று அதில் இருந்தது. அதற்குள், சூப் வைக்கப்பட்டிருந்தது. ரசாயன மாற்றத்தால் பாத்திரம் பச்சை நிறத்துக்கு மாறியிருந்தது. சூப்பில், விலங்கு எலும்பின் சுவை தெரிந்தது. எருது எலும்பில் தயாரித்து, இறந்தவருக்கு படைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது, 1600 ஆண்டு பழமையானதாக கருதப்படுகிறது.பாலாடை கட்டி: வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தில், 1,885ல் கல்லறை ஒன்று கண்டறியப்பட்டது. உடைந்த பானையில், துணியால் மூடப்பட்ட விசித்திர பொருள் இருப்பதை கண்டனர் ஆய்வாளர்கள். அது, கி.மு.,13ம் நுாற்றாண்டில் தயாரிக்கப்பட்ட பாலாடை கட்டி. செம்மறி ஆட்டின் பாலில் உருவாக்கப்பட்டது. உலகின் பழமையான உணவுகளில் ஒன்றாக மதிப்பிடபட்டுள்ளது. தேன்: கெட்டுப் போகாத உணவுகளில் ஒன்று. இறந்த உடல்களை பதப்படுத்தி பாதுகாக்க பயன்படுத்தியுள்ளனர் எகிப்தியர். அங்கு பிரமிடு அருகே தேன்பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் உள்ள தேன் தற்போதும் சுவையாக உள்ளது. பழமையான தேன்மெழுகு, தேன்கூடும் கண்டறியப்பட்டுள்ளது. உலகில், 3000 ஆண்டுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.நுாடுல்ஸ்: சீனாவில், 4,000 ஆண்டு பழமையான நுாடுல்ஸ், 2005ல் கண்டறியப்பட்டது. தினை விதையில் தயாரிக்கப்பட்டது. வண்டல் மண்ணுக்கு அடியில், கவிழ்ந்த நிலையில் இருந்தது. பூகம்பத்தால் அந்த பகுதி பாழான போது, கிண்ணத்துடன் கவிழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இன்றும், தினை வகையில் நுாடுல்ஸ் தயாரிக்கும் வழக்கம் சீனாவில் உள்ளது. - மு.நாவம்மா