ஜார்ஜ் வாஷிங்டன்! (1)
அமெரிக்கா விடுதலை பெற்றபோது, அது ஒரே நாடு அல்ல; சிறிய நாடுகள் பல இணைந்து, ஐக்கிய நாடானது. பின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி கண்டுள்ளது.ஒரு காலத்தில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்திற்கு அடிமையாக இருந்தது அமெரிக்கா. சுய அதிகாரமோ, தனி சட்ட மன்றமோ, நாடாளுமன்றமோ கிடையாது. இங்கிலாந்து பார்லிமென்டில், இயற்றிய சட்ட திட்டங்கள், அமெரிக்காவை கட்டுப்படுத்தியது. இங்கிலாந்துக்கு வரியும் செலுத்த வேண்டியிருந்தது. இது, அமெரிக்கர்கள் எண்ணத்தில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது.அமெரிக்க மக்களின் விடுதலை உணர்வை அடக்க, பெரும் படையை அனுப்பியது இங்கிலாந்து. மக்கள் அஞ்சி ஓடவில்லை; எதிர்த்து போரிட்டனர். விடுதலைப் படைக்கு, தலைமை தாங்கி நின்றார், ஜார்ஜ் வாஷிங்டன்.விடுதலை கிடைத்ததும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசு தலைவராக ஆனார். நாட்டிற்கும், மக்களுக்கும் அரும்பெரும் தொண்டாற்றி புகழ் பெற்றார்.அமெரிக்கா, வர்ஜீனியா பகுதியில், 1732ல் பிறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்; தந்தை விவசாயி. அவர் பிறந்த காலத்தில், வர்ஜீனியா முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை; கல்வி, தொழிற்கூடங்கள் எதுவும் இல்லை.குடும்ப தொழிலான விவசாயத்தில், பிள்ளைகளும் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார் தந்தை; ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லை; அதனால் விவசாயத்தில் தந்தைக்கு உதவியாக இருந்தார்.அவரது, 11 வயதில், தந்தை இறந்தார். பின், நெருங்கிய உறவினர் லாரன்ஸ் வீட்டில் வளர்ந்தார். வசதியான, போர்பாக்ஸ் பிரபு குடும்பத்தில் திருமணம் செய்தவர் லாரன்ஸ். இங்கிலாந்தில் பெருஞ்செல்வாக்குடன் விளங்கிய அந்த குடும்பம், பின் அமெரிக்காவில் குடியேறியிருந்தது. சிறுவன் வாஷிங்டன் குணமும், நடவடிக்கையும் போர்பாக்ஸ் பிரபுவுக்கு பிடித்து விட்டது. அவன் முன்னேற்றத்துக்கு உதவ விரும்பினார். அமெரிக்காவில் ஷெனாண்டோ பள்ளத்தாக்கு பகுதியை ஆய்வு செய்ய, 1748ல் ஒரு குழுவை அனுப்பினார் போர்பாக்ஸ் பிரபு. அந்தக் குழுவில் உதவியாளனாக, ஜார்ஜ் வாஷிங்டனை சேர்த்திருந்தார்.பின், உறவினர் லாரன்சுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமானார். அங்கு, ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அம்மை நோய் ஏற்பட்டது. அதிலிருந்து பிழைத்தாலும், முகத்தில் ஏற்பட்ட வடுக்கள் நிலைத்து விட்டன. லாரன்ஸ் திடீர் என மரணம் அடைந்தார். அவரது சொத்துகள், ஜார்ஜ் வாஷிங்டனுக்கு சேர்ந்தன. இளம் பருவத்திலேயே செல்வ சீமான் ஆனார். வாழ்வை உல்லாசத்தில் கழிக்க விரும்பவில்லை. சொத்துகளை முறையாக நிர்வகிக்க துவங்கினார்.விவசாயத் துறையில் அப்போது அமெரிக்கா முன்னேறியிருக்கவில்லை; மிகவும் பின் தங்கியிருந்தது. அந்த துறையில் மாற்றங்களை செய்தார் ஜார்ஜ். விளைச்சலை பெருக்க, இங்கிலாந்தில் இருந்து பண்ணைக் கருவிகளை வரவழைத்தார்.முழு முயற்சியால் விவசாயத் தொழிலில் முன் மாதிரியாக திகழ்ந்தார். சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும், ஒரு பகுதியில் மட்டும் விவசாயம் செய்தார்; மற்ற பகுதிகள், ஆடு, மாடு மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டன.பண்ணையில் ரோமத்திற்காக ஆடு வளர்க்கப்பட்டது; அதில், கம்பளி ஆடைகள் நெய்யும் தொழிற்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. விவசாய பண்ணையில், பல தொழில்கள் நடைபெற்றன. எனவே வரவு செலவு கணக்கு அதிகரித்தது.அவரது நிலம் இருந்த மலைப்பகுதி வளம் பெற்றது; ஓய்வு நேரத்தை, அப்பகுதி மக்களுடன் கழித்தார்; அவர்களின் மதிப்பு, அன்புக்கு உரியவரானார். இதன் விளைவாக, வெர்ஜீனியா மாவட்டப் படை பிரிவில், உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசு அளித்த பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றினார்; அதனால், அரசுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது.அக்காலத்தில், வட அமெரிக்கப் பகுதி, இங்கிலாந்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது. நிர்வாக பொறுப்பை, ஆளுநர்களே கவனித்து வந்தனர். சில பகுதிகள், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது.ஆங்கிலேயரும், பிரெஞ்சுகாரரும் அமெரிக்காவை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்; இதனால் அடிக்கடி மோதல் எழுந்தது.- தொடரும்...