பச்சை வண்ண பட்டு!
மதுரை, நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 11ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு... பள்ளிக்கு பேருந்தில் சென்று வர காசு கொடுப்பார் அப்பா. அதில், தட்டை, எள்ளுருண்டை, கமர்கட் என வாங்கி சாப்பிட்டு, தோழியருடன் அரட்டை அடித்தபடி, பொறுமையாக நடந்து வீடு திரும்புவேன்.முன்னெச்சரிக்கையாக, பேருந்து நிலையத்தில் கிடக்கும் பயணச்சீட்டுகளில் ஒன்றை எடுத்து வைத்துக் கொள்வேன். அப்பா கேட்டால், தப்பிக்க உதவும் என்ற எண்ணத்தில் அதை செய்வேன்.ஒரு நாள், ஆசையாக அப்பா வாங்கி தந்த பச்சை வண்ண பட்டு பாவாடை, சட்டை அணிந்து சென்றேன். அன்று மாலை வழக்கம் போல் தோழியருடன் அரட்டை அடித்தபடி திரும்பிய போது, துாரத்திலிருந்து பார்த்து விட்டார் அப்பா. அந்த, 'பளிச்' பச்சை வண்ணம் காட்டிக் கொடுத்து விட்டது. பின், நடந்த நிகழ்வை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மறுநாள், பள்ளி நிர்வாகத்திடமும் புகார் கூறினார் அப்பா. வகுப்பாசிரியை எலிசபெத், 'தவறு என்பது தவறி செய்வது; தப்பு என்பது, தெரிந்து செய்வது... தவறு செய்தால் திருந்தணும்... தப்பு செய்தால் வருந்தணும்...' என்ற கவிதை வரிகளை கூறி அறிவுறுத்தினார். வருந்தி மன்னிப்புக் கேட்டேன்.எனக்கு, 48 வயதாகிறது; அந்த நிகழ்ச்சி இன்றும் மனதில் பசுமையாக உள்ளது.- எஸ்.பனிமலர், மதுரை.தொடர்புக்கு: 96002 30001