ஹேரியட் டப்மேன்!
அமெரிக்காவிலுள்ள அபர்ன் என்ற ஊரின் நடுமையத்தில், ஒரு அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஒரு பெரிய பித்தளை பலகை பதிக்கப்பட்டுள்ளது. அதில், 600க்கும் மேற்பட்ட நீக்ரோ அடிமைகளை மிகத்துணிச்சலுடன் விடுவித்து கடத்திச் சென்று அவர்களுக்கு, மறுவாழ்வு அளித்த பெண்மணி 'ஹேரியட் டப்மேன்' அவர்களின் நினைவாக என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.'என்னை எவராலுமே உயிருடன் பிடித்து விட முடியாது. என் வாழ்வின் குறிக்கோள் எண்ணற்ற நீக்ரோ அடிமைகளை விடுவித்து, அவர்களை சுதந்திரமாக வாழ வைப்பது தான். இல்லையெனில், நான் சாவை தழுவுவேன்' என்று அறைக்கூவல் விடுத்த வீராங்கனை, பதினைந்து வயதே நிரம்பிய சிறுமி ஹேரியட் டப்மேன்.இவளின் பெற்றோர்களும் அடிமைகள்தாம். எட்டாவதாக பிறந்த பெண் குழந்தை இவள். இவளின் மூத்த சகோதர, சகோதரிகள் அனைவருமே அடிமை சந்தையில் விற்கப்பட்டு, சோகமும் இன்னல்களும் மிகுந்த வாழ்க்கையைத்தான் அனுபவித்து வந்தனர்.இவரின் ஏழாவது வயதில், இச்சிறுமி ஒரு பெரிய வீட்டிற்கு வேலைக்கு அனுப்பப் பட்டாள். சின்னஞ்சிறு குழந்தை என்பதையும் பாராமல், அந்த வீட்டு எஜமானி, இவரை அடித்து துன்புறுத்தி பட்டினி போட்டு ஓயாமல் வேலை வாங்கினாள். பசி வயிற்றைக் கிள்ள, உடலெல்லாம் ரத்தம் கசிய... ஒருநாள் இரவில் அவ்வீட்டை விட்டு ஓடிவிட்டாள் அச்சிறுமி. உயிருக்கு பயந்து, ஒரு பொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், வெகுதூரம் ஓடிக்கொண்டே இருந்தாள்.எங்கு போவது...? எப்படி போவது? என்று ஒரு இலக்கே இல்லாமல்... ஓடி, ஓடி களைத்து போனவள்... கடைசியாக, பன்றிகள் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு கொட்டகை தென்பட, அதனுள்ளே நுழைந்து பன்றிகளிடையே முடங்கிக் கொண்டாள்.பன்றிகள் தின்று மிச்சமீதி இருக்கும் உணவை உண்டு, தற்காலிகமாக தன் பசியை ஆற்றிக் கொண்டாள் அந்த பரிதாபத்திற் குரிய சிறுமி.நாட்கள் நகர்ந்தன. இரவு நேரங்களில் அந்த கொட்டகையை விட்டு, சற்று வெளியே வந்து ஆகாயக் கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டே நிற்பாள். அங்கே எல்லா நட்சத்திரங்களும் கண் சிமிட்டிக் கொண்டே அங்குமிங்குமாய் நகர்ந்து கொண்டே இருக்க, ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் நின்று ஒளிவீசிக் கொண்டிருக்கும்.இது எப்படி? இது எப்படி? என்று அதிசயித்துப் போவாள் அந்த சிறுமி. பல நாட்களுக்குப் பின் ஒரு அடர்ந்த இரவில், இவளை தேடி வந்த இவளின் தந்தை எப்படியோ, இவளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டார்.''என் செல்லமே!'' என்று கதறியபடியே இவளை அள்ளி அணைத்துக் கொண்டார். அன்ன ஆகாரமின்றி, நடக்கக் கூட சக்தியற்ற தன் செல்வத்தை தன் தோளின் மீது சுமந்து கொண்டு வீட்டை நோக்கி நடக்கலானார். பல நாட்களுக்குப் பின் தன் தந்தையை கண்டுவிட்ட மகிழ்ச்சியில், பேசும் சக்தியையே இழந்துவிட்டாள் அச்சிறுமி என்றுதான் சொல்ல வேண்டும்.மிக இறுக்கமான அந்த இரவில், மனித சஞ்சாரமற்ற அந்த காட்டுப்பாதையில் தன் தோளில் படுத்திருக்கும் தன் பொக்கிஷத் திடம், ''செல்லப்பாப்பா! ஏதேனும் பேசுடா! பேசு. உன் குரலைக் கேட்டு எத்தனை மாதங்களாகி விட்டன?'' என்று குரல் தழுதழுக்க கேட்டார். ''பப்பூ! எனக்கு ஒரே ஒரு சந்தேகம்,'' என்றாள்.மகளின் குரலைக்கேட்டு மகிழ்ந்தவர், ''சொல்லுடா செல்லம்! சொல்லுடா உனக்கு என்ன சந்தேகம்? எதுவானாலும் சொல்லுடா என் பட்டுக்கிளியே,'' என்றார்.''பப்பூ! அங்கே அந்த ஆகாச கூரையைப் பாரேன். அங்கு அத்தனை நட்சத்திரங்களும் அங்கு மிங்குமாக கண் சிமிட்டிக் கொண்டு ஓடியாடிக் கொண்டிருக்க, ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும், ஆடாமல் அசையாமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறதே அது எப்படி பப்பூ?''''அதன் பெயர் என்னவென்று உனக்கு தெரியுமா பப்பூ,'' என்றாள் சிறுமி.அப்படியே மகிழ்ந்து போனார் தந்தை.''ஓ! அதுவா... அந்த நட்சத்திரத்திற்கு பெயர் வட நட்சத்திரம். வடக்கு நோக்கி இருக்கும் இந்த நட்சத்திரம் தான் சுதந்திரத்தை குறிக்கும்டா செல்லம். ஆடாமல் அசையாமல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறதுன்னு சொல்றியேடா செல்லம், அது ஏன் தெரியுமா? மற்ற நட்சத்திரங்களைப் போல் ஓடி ஓடித் திரியாமல், ஆடாமல்... அசையாமல் சவாலாக நின்று கொண்டு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் வலிமை மிகுந்ததாம். இப்படித்தான் இந்த நட்சத்திரத்தைப் பற்றி என் தாத்தா, பாட்டி எல்லாரும் கூறுவர்.''இந்த அதிர்ஷ்ட நட்சத்திரம் யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறதோ? யாருக்குத் தெரியும்டா செல்லம்,'' என்றார்.''பப்பூ! அப்படீன்னா... வடக்கு நோக்கிச் சென்றால் சுதந்திரம் கிடைக்குமா? என்று அவள் கேட்க, 'உம்' என்று சுள் கொட்டினார் அவள் தந்தை. பசு மரத்து ஆணி போல், அச்சிறுமியின் மனதில் பதிந்தது இந்த வாசகம்!பெற்றோர்களின் அன்பான அரவணைப்பில், மிக விரைவிலேயே உடல் நலம் தேறி விட... உடனே மறுபடியும் வேறு ஒரு வீட்டிற்கு வேலை செய்ய வேண்டும் என்ற உத்தரவு வர... (பின் அடிமைகள் எதற்கு இருக்கின்றனர்?) உடனே அவ்வுத்தரவிற்கு கீழ்பணிந்து, அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வேலைக்குச் சென்றாள் அந்த பரிதாபத்திற்குரிய சிறுமி! அங்கேயும், உடல் நலம் குன்றிய சிறுமி என்றும் பாராமல், பட்டினி போட்டு அடித்து, உதைத்து வேலை வாங்கினர்.ஒருநாள் கை, கால்கள் ஓய்ந்து போய் பசி வயிற்றைக் கிள்ள, சற்றே கொல்லைப் புறத்திலுள்ள மரத்தடியில் படுத்திருந்த சிறுமியைக் கண்டு வெகுண்டாள் அந்த நல்ல உள்ளம் படைத்த எஜமானி.''ஏய்! தண்டம்! நீ வீட்டு வேலைக்கு உதவாதவள். போ... போ...காட்டில் போய் விறகு வெட்டிக் கொண்டு வா... மிகுந்த நேரத்தில் வயல் வெளிகளில் வேலை செய்...'' என்று கர்ஜிக்க, அவ்வாறே... அவள் குறிப்பிட்ட காட்டுக்கு அனுப்பப்பட்டாள்.அங்கேயும் இவளைப்போலவே, நிறைய அடிமைகள்.அடிமைகள் என்றாலே காலி வயிற்றுடன் வஞ்சனையின்றி உழைத்து விட்டு... அதற்கு கூலியாக அடியும், உதையும் பெற்றுக் கொள்ளத்தானே பிறவி எடுத்திருக்கின்றனர். இதுதான் அடிமை உலக நியதி அல்லவா?இந்த பன்னிரெண்டு வயது சிறுமிக்கு ஒரு தோழன் கிடைத்தான். மிக மிக நல்லவன். மிகவும் கடுமையான உழைப்பாளி. இவர்களின் வேலைகளை கண்காணிக்கும் ஒரு கங்காணி ஒரு கொடூரன். ஈவு, இரக்கம் அற்றவன்; இவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க விடமாட்டான்.''டேய்! அடிமை நாய்களா! உங்களுக்கு எதுக்கடா ஓய்வு'' என்று சொல்லிச் சொல்லியே அடிப்பான்.அன்று இரவு சிறுமியின் தோழன், தனக்கு இடப்பட்ட அனைத்து வேலைகளையும் மிக கச்சிதமாக முடித்து விட்டு, அருகிலிருந்த கடைக்குச் சென்றான்.இதை கவனித்துவிட்ட அந்த சூப்பர் வைசர் கங்காணி... ''டேய்! அடிமை நாயே! எங்கேடா போகிறாய்?'' என்று சொல்லி, அவனை இழுத்து வந்து கதறக் கதற அடித்து விட்டு, சிறுமி ஹேரியட்டை கூப்பிட்டு, ''இந்த ஓடுகாலி நாயை அந்த மரத்தோடு சேர்த்துக் கட்ட வேண்டும். உம் சீக்கிரம். இந்த கயிற்றைப் பிடித்துக் கொள்,'' என்றான்.சிறுமி மிகத்துணிச்சலுடன், ''முடியாது!'' என்றாள். உடனே, அச்சிறுவன் அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தான்.ஆத்திரமடைந்த அந்த கங்காணி ஒரு பெரிய இரும்பு குண்டைத் தூக்கி அச்சிறுவனை நோக்கி தூக்கி விட்டெறிய... குறி தவறி அந்த குண்டு அச்சிறுமியின் தலையை பதம் பார்க்க... ''ஐய்யோ...'' என்று அலறியபடியே, ரத்தம் பீறிட்டு வழியும் தலையோடு அப்படியே சரிந்து விட்டாள்.- தொடரும்.