உள்ளூர் செய்திகள்

தன் கையே தனக்கு உதவி!

மேகாலயாவிலுள்ள, ஒரு சிறிய கிராமத்தில், இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களுக்கு சொந்தமான நிலத்தில், நெற் பயிரை விளைவித்து, விற்று, குடும்பம் நடத்தி வந்தனர். அவர்கள், எதற்குமே, அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்ப்பர். 'தங்கள் வேலையை, தாங்களே செய்து கொள்ள வேண்டும்; மற்றவர்களின் உதவியை, ஏன், நாட வேண்டும்' என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லவே இல்லை.இவர்களின் தோட்டத்திலுள்ள மரத்தில், ஒரு குருவி தம்பதியர் குடியேறினர். அந்த, ரம்மியமான சூழல், அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த அன்பு தம்பதிகளுக்கு, இரண்டு குட்டி பாப்பாக்கள். அப்பா மாற்றி அம்மா மாற்றி, தங்களின் குட்டி பொக்கிஷங்களுக்கு, ஆகாரம் ஊட்டி விட, குட்டிப் பாப்பாக்களும் வளர்ந்து வந்தன.இதற்கிடையே, இரு சகோதரர்களும், தங்கள் நிலத்திற்கு, நீர் பாய்ச்சி சென்றனர். நெற்கதிர்களும், நன்றாகவே விளைந்திருந்தன.திடீரென அம்மா குருவிக்கு கவலை வந்தது. ''ஏன், இப்படி வருத்தமாக உட்கார்ந்திருக்கிறாய்...'' என்றது ஆண் குருவி.''வருத்தப்படாமல் என்ன செய்வதாம்... நெற்கதிர்கள் எல்லாம் நன்றாக முற்றி விட்டன; எஜமானர்கள் இருவரும், அறுவடை செய்ய வந்து விட்டால் என்ன செய்வது... நம் கூட்டையும் அழித்து விடுவர். நம் குழந்தைகள் இருவருக்கும், இன்னும், இரண்டு அடி கூட பறக்கத் தெரியவில்லையே...''''ச்சே... ச்சே... கவலையை விடுடா செல்லம்... சில கதிர்கள் இன்னும் முற்றவில்லை; அறுவடை செய்ய, இன்னும் சில நாட்களாகும்; அதற்குள், நம் செல்வங்களுக்கு பறக்க கற்று கொடுத்து விடலாம்...''அன்றிலிருந்து, குஞ்சுகளுக்கு, தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பறக்க கற்றுக் கொடுக்க ஆரம்பித்தன... முதலில், கூட்டை விட்டு வெளியே வர பயந்து, அடம் பிடித்த, அந்த சிறுசுகளை 'சர்க்கரை குட்டிப் பாப்பா...' என்றெல்லாம் கொஞ்சி, கூத்தாடி மெதுவாக, கூட்டுக்கு வெளியே வர கற்றுக் கொடுத்தனர். அந்த சர்க்கரை குட்டிகளுக்கு, தங்களின் கடுகு கண்களால், அப்படியும், இப்படியும் தலையை திருப்பி திருப்பி, வயல் வெளியைப் பார்த்து விட்டு, 'ச்...ச்...ச்...ச்...ச்...' என்று, ஏதோ பேசி விட்டு, போய் விட்டன! ஒருநாள்-இரண்டு சகோதர்களும், வயல்களை பார்வையிட வந்தனர். ''தம்பி... அறுவடைக்கு தயாராக இருக்கிறது நிலம். நம் இருவரால் மட்டும் இதை அறுவடை செய்ய முடியாது.கூலிஆட்களை ஏற்பாடு செய்து, அறுவடையை ஆரம்பித்து விட்டால், ஒரே நாளில் முடித்து விடலாம்...' 'என்றார் அண்ணணன்.இந்த பேச்சைக் கேட்ட அம்மா குருவிக்கு, துக்கம் தாங்க முடியவில்லை. நீர் மல்கும் கண்களுடன், ''பாருங்கள்... ஆட்களை திரட்டி வந்து, இன்னும் இரண்டு நாட்களில் அறுவடையை முடிக்கப் போகிறாராம். அந்த கூட்டம், முதல் வேலையாக, நம் கூட்டின் மேல் தான் கை வைக்கும்; கூட்டை துாக்கி எறியும். அப்புறம், நம் குழந்தைகளின் கதி...'' என்று, குலுங்கி குலுங்கி அழும் மனைவியை அணைத்து, தட்டி கொடுத்தது.''அழாதேடா கண்ணம்மா... வீணாக, மனதை குழப்பிக் கொள்ளாதே. நிச்சயமாக ஆட்கள் வர மாட்டார்கள்; அறுவடையும் நடக்காது...'' என்று தைரியம் சொல்லியது.''சரி... உங்க ஜோசியத்தை நம்புங்கறேன்; எப்படியோ, நம் செல்வங்களுக்கு பறக்க கற்றுக் கொடுத்து விட்டால் போதும்...'' என்றது. அப்பாவின் மேற்பார்வையில், அந்த இரண்டு குட்டி பாப்பாக்களும், 'க்கீச்... க்கீச்...' என்று கத்தியபடியே, ராணுவ மிடுக்கோடு, பறக்க கற்றுக் கொள்ள ஆரம்பித்தன!மறுநாள் -தங்கள் வயலுக்கு வந்த சகோதரர்களுக்கு ஒரே அதிர்ச்சி! ஒரு பயல் கூட, அங்கு வரவில்லை. ''என்ன அக்ரமம்... ஆட்களை அழைத்து வருகிறேன் என்றவன், இப்படி வார்த்தை மாறினால் எப்படி... இப்படியே நாட்களை கடத்தினால், நாம் அறுவடை செய்வது எப்போது... சரி, நாளைக்கு நம் உற்றார், உறவினர் அனைவரையும் அழைக்கலாம். அவர்கள் மட்டும் ஒன்று கூடி வந்தால், ஒரே நாளில் அறுவடையை முடித்து விடலாம்' என்று கூறி, தம்பியுடன் புறப்பட்டான்.அன்றிரவு -பெண் குருவி, தன் பல்லவியை அழுகையுடனே ஆரம்பித்தது.''என்ன இது... இந்த முதலாளி பேசும் பேச்சைக் கேட்டால், சர்வ நிச்சயமாக இம்முறை, உறவினர்களுடன் வந்து அறுவடையை ஆரம்பித்து விடுவர் போலிருக்கு... இன்னும் ஒரு அடி கூட பறக்க முடியாமல், தவித்துக் கொண்டிருக்கும் நம் கண்மணிகளின் கதி என்னவாகும் என்று புரியவில்லை; எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது...'' என்றது குரல் கம்ம...தலையில் அடித்து கொண்ட, ஆண் குருவி, ''ஐயோ... முட்டாள் மனைவியே... அனைத்து தெய்வங்களின் மீதும் சத்தியம் செய்ய தயார். அவன், தன் உறவினர்களுடன் இந்த வாரம் வரமாட்டான்; இவனுக்கு அறுவடை செய்து தர, அவர்களுக்கு என்ன தலை எழுத்து...''சரி அதை விடு... நம் கண்மணிக்கு நாளை காலையிலிருந்து போர் கால அடிப்படையில், பறக்கும் பயிற்சி அளிக்கப் போகிறேன். ஒரே வாரத்தில், அட்லான்டிக் மகா சமுத்திரம் வரை, நம் செல்வங்கள் பறந்து போய், உலக மக்களை வியப்பில் ஆழ்த்தப் போவது சர்வ நிச்சயம். உனக்கு புரிகிறதா...'' என்றான்.''சரிங்க... நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும். எப்படியோ, உங்கள் வாக்கு பலித்தால் சரி...''மறுநாள் -அதிகாலை, தங்களின் அப்பாவுக்கு இணையாக, விசில் அடித்தபடியே பறக்க ஆரம்பித்தன. அவர்களின், அந்த இரண்டு கண்மணிகளும் .இதைப் பார்த்த அம்மாக்காரிக்கு பெருமை தாங்கல... 'ஐயோ... யார் கண்ணாவது பட்டுடப் போகிறதே' என்று, உள்ளூற பதைத்துப் போனாள்!அப்பாவுக்கு மிகவும் அலுத்து விட்டது. வெயில் வேறு, 'சுளீர்...' என்று அடிக்கவும், ''வாலுப் பசங்களா... வாங்கடா... திரும்பிப் போகலாம். உங்க அம்மா, கவலையோடு, காத்துக் கொண்டிருப்பா...'' என்று கெஞ்சியது.''போங்கப்பா... உங்களுக்கு பயமாக இருந்தால், ஏதேனும் மரத்தின் மீது உட்கார்ந்துக் கொள்ளுங்கள்; நாங்கள் இருவரும் இன்னும், ஒரு மணிநேரம் பறந்து விட்டு, திரும்பி விடுகிறோம்...'' என்று பிடிவாதம் பிடித்தன. ''சரிடா கண்ணுங்களா... என் கண் பார்வை படும் இடத்திலேயே பறந்து போங்க. அப்போது தான், எனக்கு நிம்மதியாக இருக்கும். சீக்கிரம் திரும்பி விடுங்கள்...'' என்று கூறியபடியே, அங்குள்ள மரக்கிளையில் உட்கார்ந்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டது! மிக சமத்தாக, கூறியபடியே, ஒரு மணி நேரம் பறந்த பின், தன் அப்பா முன், ஆஜராகி விட்டன சிட்டுக் குருவிகள் இரண்டும்! அம்மா குருவிக்கு பெருமை தாங்கவில்லை என்று சொல்லவும் வேண்டுமா என்ன...மறுநாள் -காலை , வெகுதுாரம் பறந்ததால், மிகவும் அயர்ந்து துாங்கின இரண்டு சிட்டுக் குருவிகளும்!சகோதரர்கள் இருவரும் வந்தனர்.''தம்பி... நம் சொந்தக்காரர்களின் லட்சணத்தைப் பார்த்தாயா... நன்றி கெட்ட ஜென்மங்கள். அவர்களுக்கு எல்லாம், எத்தனை உதவிகள் செய்து இருக்கிறோம். நான் நேரில் போய், அவர்களின் காலில் விழாத குறையாக, கெஞ்சிக் கேட்டும், 'கட்டாயமாக, நாளைக் காலை வந்து விடுவோம்!' என்று கூறி, நம்மை, எப்படி ஏமாற்றி விட்டனர் பார்த்தாயா... வேண்டாம் தம்பி... எந்த ஜென்மத்திற்கும் இவர்களின் உறவு நமக்கு வேண்டவே வேண்டாம்... ''நாளை, காலை நாம் இருவருமாகவே இந்த அறுவடை வேலையை செய்வோம். அறுவடை முடிக்க, சிறிது நாட்கள் கூடுதலாகலாம். பரவாயில்லை... சரியா... நாளைக் காலை மதிய உணவையும் கையில் எடுத்து வந்து விடுவோம்... நேரத்தை வீணடிக்காமல், ஒரே மூச்சில் வேலையை முடித்து விடுவோம்...'' என்றான். ''சரி அண்ணா...'' புறப்பட்டு விட்டனர்.இந்த பேச்சை, முற்றிலுமாக, ஒட்டுக் கேட்ட தம்பதிகள், ''இந்த முறை, நிச்சயமாக நாளைக் காலை சகோதரர்கள் இருவரும் வந்து விடுவர். இப்போது தான், அவர்களுக்கு உலகமே புரிகிறது! 'தன் கையே தனக்கு உதவி' என்று... அதனால், நாளை அவர்கள் வருமுன், நாம் இவ்விடத்தை காலி செய்து விடுவோம்...'' என்றது ஆண் குருவி.''நீங்கள் எது சொன்னாலும் முற்றிலும் சரியாகத் தானே இருக்கும்...'' என்று கூற, தங்கள் அம்மாவின் இந்த பேச்சைக் கேட்ட, குட்டிப் பாப்பாக்கள் இரண்டும், மிக சந்தோஷமாக, அக்கூட்டை விட்டு புறப்பட்டு, வானவெளியில் பறக்கத் துவங்கின.மற்றவர் உதவியை எதிர்பார்ப்பதைவிட தாமே செயலில் ஈடுபடுவது நல்லது என்பது இபபோ புரியுதா குட்டீஸ்...- ஸ்ரீராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !