பசி ஞானம்!
வகுப்பில் மதியம், டிபன் பாக்சை திறந்தனர் மாணவர்கள். பூரி - கிழங்கு, இட்லி - சாம்பார், சப்பாத்தி - குருமா, தயிர் சாதம்... வித விதமான உணவுகள் இருந்தன. காலையில் சாப்பிட்ட சிற்றுண்டியும், வகுப்பு இடைவேளையில் தின்ற நொறுக்கு தீனியும் வயிற்றில் நிரம்பியிருந்தன. ராமுக்கு பசிக்கவில்லை. அதனால் சாப்பிட முடியவில்லை. மதிய உணவை, சாப்பிடாமல் எடுத்து சென்றால் அம்மாவிடம் வசவு கிடைக்கும்; சில சமயம் அடியும் உண்டு. மதில் ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில், உணவை கொட்டினான் ராம்.'அப்பாடா... யாரும் பார்க்கவில்லை...' நிம்மதியுடன் வகுப்புக்கு திரும்பினான். அன்று மாலை -வீடு திரும்பிய ராமின் டிபன் பாக்சை திறந்த அம்மாவுக்கு சந்தோஷம்.'ஒழுங்காக சாப்பிட்டு விட்டான்' என மகிழ்ந்தார்.மறுநாளும் அதே போல சாப்பாட்டை குப்பையில் கொட்ட ஓடினான்.அங்கு நின்ற சிறுவன், ''சாப்பாட்டை என்னிடம் கொடு அண்ணா...'' என, கையை நீட்டினான்.''யார் நீ... பள்ளிக்கு போகலயா...'' ஆச்சரியத்தோடு கேட்டான் ராம்.''போகல... அந்த தோட்டத்துல என் அம்மா வேலை செய்றாங்க; சாப்பிட பழையதோ, கஞ்சியோ தான் கிடைக்கும். எனக்கு ரொம்ப பசிக்குது...''அவசரமாக உணவை பிடுங்கி ஓடினான் சிறுவன்.வியப்புடன் அவனை பின் தொடர்ந்தான் ராம்.தோட்டத்தில் கடும் வெயிலில் வேலை செய்து, களைப்புடன் காணப்பட்டார் சிறுவனின் தாய்.காய்கறியுடன், நெற்பயிர் சாகுபடி செய்து வந்தார். அதை பார்த்தபடி திரும்பி வந்து வகுப்பில் அமர்ந்தான்.குப்பையில் வீசும் உணவுக்காக காத்திருந்த சிறுவன் முகம் நினைவில் வந்தது. 'இத்தனை நாளா, எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளேன்' என எண்ணியபடி வருந்தினான் ராம். திடீர் அழைப்பு குரல் கேட்டு திரும்பினான். ''பாடத்தை கவனிக்காம என்ன ஆழ்ந்த யோசனை; நீ யோசிக்கிறதை கூறினால், நாங்களும் சேர்ந்து கொள்வோம் அல்லவா...'' சற்று கோபத்துடன் கேட்டார் வகுப்பு ஆசிரியர்.வகுப்பறை சிரித்தது. தினமும் அளவுக்கு அதிகமாக உணவு எடுத்து வந்து, குப்பையில் வீசும் மாணவர்கள் பற்றியும், உணவின்றி தவிக்கும் ஏழை சிறுவன் பற்றியும் விபரத்தை கூறினான் ராம். அவன் மனக்குமுறலை புரிந்து கொண்டார் வகுப்பு ஆசிரியர். சில நாட்களுக்கு பின் - பள்ளி வாசலில் சிறிய குளிர்சாதன பெட்டியும், பக்கத்தில் மர பீரோ ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. மீதமாகும் உணவு பொருட்களை, வைக்க குளிர்சாதன பெட்டியை பயன்படுத்தும்படி அறிவிப்பு வெளியிட்டிருந்தது, பள்ளி நிர்வாகம். தேவையற்ற பழைய ஆடைகள், படித்த புத்தகங்கள், விளையாட்டு பொருட்களை, பீரோவில் வைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாணவர்கள் சிரத்தையுடன் கடைப்பிடித்தனர்.அந்த ஏற்பாட்டால், ஏழை எளிய சிறுவர், சிறுமியருக்கு, உணவும், உடையும் கிடைக்க ஆரம்பித்தது. நல்ல யோசனை கூறிய ராமை பாராட்டி, பள்ளி ஆண்டு விழாவில் பரிசளித்தார் தலைமையாசிரியர். பெற்றோர் அகம் மகிழ்ந்தனர்.குழந்தைகளே... நல்ல எண்ணத்துடன் நாட்டை உயர்த்தும் வழி வகைகளை உருவாக்க சிந்தியுங்கள்!உமா ஸ்ரீதரன்