தை பிறந்தால் வழி பிறக்கும்!
தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது தை. அதன் பிறப்பை, அறுவடைத் திருநாளாக கொண்டாடுகின்றனர் தமிழர்கள். பொங்கல் என்றால், பொங்கிப் பெருகுவது என பொருள். தமிழகத்தில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, வட அமெரிக்க நாடான கனடா மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சோழர் ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகை, 'புதியீடு' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. ஆண்டின் முதல் அறுவடை என்பது அதன் பொருள். தை மாதத்தில், அறுவடையை மேற்கொள்வது உழவர்களின் வழக்கமாக இருந்தது. இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது.பருவ காலத்தில் வந்து உதவும் மழை, ஓய்வின்றி இயங்கும் சூரியன் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது, பொங்கல்.தமிழகத்தில், பொங்கலுக்கு முந்தைய நாள் போகி என கொண்டாடப்படும். அன்று பழைய பொருட்களை களைவர். அல்லவை அழிந்து, நல்லவை வரட்டும் என்பது இதன் பொருள். மறுநாள் பொங்கல் தினம்; தை மாதப் பிறப்பு நாள். புதுப்பானையில், மஞ்சள் உள்ளிட்ட விளை பொருட்களை தோரணம் கட்டி, புது அரிசி, வெல்லம் கலந்து பொங்கலிடுவர். வீட்டுக்கு வெளியே சூரியனிருக்கும் திசை நோக்கி இந்த நிகழ்வு நடக்கும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டு, 'பொங்கலோ பொங்கல்' என, மகிழ்வர். அடுத்தநாள் மாட்டுப் பொங்கல். கிராமங்களில் இது விமரிசையாக கொண்டாடப்படும். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, அலங்காரம் செய்து படையலிட்டு வழிபடுவர். பின், கால்நடைகளுக்கு பொங்கல் விருந்து அளிக்கப்படும்.விவசாயத்தில் அயராது உழைத்து உதவும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி, ஜல்லிக்கட்டு என்ற மாடுபிடி விளையாட்டும் நடக்கும். மூன்றாவது நாள் காணும் பொங்கல் என தமிழக வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களை நேரில் கண்டு வாழ்த்து பரிமாறுகின்றனர். அன்று சுற்றுலா தலங்களில் கூடுவதும் வழக்கமாக உள்ளது. பொங்கலை தித்திப்புடன் கொண்டாடுவோம். வளம், நலமுடன் வாழ சூரியக் கடவுளை வணங்குவோம்.