அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...
என் வயது, 15; பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி. என் அப்பாவுக்கு யார் சிரித்தாலும் பிடிக்காது. குறிப்பாக, நான் சிரித்தால் கண்டபடி திட்டுவார். அதையொட்டி பல்வேறு பழமொழிகளையும் உதிர்ப்பார்.'சிரிக்காதே... சிரிச்சா, உன் வாழ்க்கை சிரிப்பா சிரிக்கும்...' 'பைத்தியங்கள் தான் அடிக்கடி சிரிக்கும்...''சர்க்கஸ் கோமாளியா நீ... எதுக்கு சிரிச்சு கூத்தடிக்கிற...''சிரிச்சுக்கிட்டே இருந்தா, தலையில ஈசியா மிளகாய் அரைச்சுட்டு போய்டுவான்...'இப்படி சொலவடைகளை எடுத்து விடுவார்.நிஜமாகவே கேட்கிறேன்... நகைச்சுவை தேவையா, இல்லையா ஆன்டி.நகைச்சுவை எத்தனை வகைப்படும். அது பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை எல்லாம் சொல்லுங்க ஆன்டி.இப்படிக்கு,ஹேமலதா.
அன்பு செல்லத்துக்கு...
நகைச்சுவை வாழ்க்கைக்கு மிக அவசியம். ஆங்கிலத்தில், 'காமெடி' என்ற வார்த்தை, 'காம்டை' என்ற பிரெஞ்சு மொழி வார்த்தையிலிருந்து உருவானது. உலகின் முதல் நகைச்சுவை நாடகம், 'டியோனைசஸ்' என்ற கிரேக்க நகரத்தில் அரங்கேற்றப்பட்டது.மன அழுத்தத்தை உருவாக்கும் சுரப்புகளை கட்டுப்படுத்தி, நன்மை தரும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்க உதவுகிறது, நகைச்சுவை செயல்பாடு.நகைச்சுவை என்பது நாடகத்தில் ஒரு பிரிவு. அது, வாழ்க்கையை கலகலப்பாக்குகிறது. நகைச்சுவைகள் பல வகைப்படும். அவை...* காதல் சார்ந்த நகைச்சுவை - சிரிப்பு மற்றும் சோக நிகழ்வுகளை கலந்து சிரிக்க வைப்பது* மரபு சார்ந்த நகைச்சுவை - சமூகத்தை சரி செய்யும் நோக்கம் உள்ள கேளிக்கை* நடத்தை சார் நகைச்சுவை - உயர் சமூக மக்களின் நடத்தைகளை அடிப்படையாக கொண்டது* நகைச்சுவை சார்ந்த நகைச்சுவை - காற்று, நீர், நெருப்பு, பூமி சார்ந்த மனித குணாதிசயங்களை இடித்துரைப்பது* பிழைகளை சுட்டும் நகைச்சுவை - அடையாளங்கள் மாறுவதால் வரும் குழப்பங்களை காட்டுவது * உள் மன உணர்வு சார்ந்த நகைச்சுவை - உள் மன உணர்வுகளையும், உணர்ச்சி பிரவாகங்களையும் சித்தரிக்கும் வகையிலானது* கேலிக் கூத்து நகைச்சுவை - கதாபாத்திரங்களை வினோதமான சூழ்நிலையில் சிக்க வைத்து நகைச்சுவை செய்வது* நையாண்டி நகைச்சுவை - அரசியல் அவலங்களை எள்ளி நகையாடுவது* கறுப்பு நகைச்சுவை - வசனங்களை விட, உடல் சார்ந்த அசைவுகளால் நிகழ்த்தப்படும் நகைச்சுவை இது.ஆரம்ப கால சினிமாக்களில், நடிகர் சார்லி சாப்ளின், மிஸ்டர் பீன் சீரியல்களில், நடிகர் ரோவான் அட்கின்சன், ஹாலிவுட் படங்களில் ஜிம் கெரே, தமிழ் படங்களில் நடிகர் கவுண்டமணி அதிகமும், 'ஸ்லாப்ஸ்டிக்' வகை நகைச்சுவை செய்தனர்.வாழைப் பழத்தில் வழுக்குதல், ஐஸ்கிரீமை முகத்தில் அடித்தல், டின் மாவு தலையில் கொட்டுதல், அடித்து உதைத்து விளையாடுதல் போன்றவை, ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவை வகையில் அடக்கம்.பிறரின் உருவத்தையோ, நிறத்தையோ, உருவ அமைப்பையோ, தெற்றுப்பல்லையோ, கீச்குரலையோ கிண்டல் செய்வது நகைச்சுவை ஆகாது. உருவக்கேலி, கண்டிக்கதக்கது.ஆக்கப்பூர்வமான நகைச்சுவை, உணவில் போடப்படும் உப்பு போன்றது. இனிப்பு பண்டத்தில் போடப்படும் சர்க்கரை போல அளவாய் இருத்தல் நலம்.'சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!'- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.