உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்...

அன்புத் தோழி ஜெனிபருக்கு, ஒவ்வொரு வாரமும் இளஸ்... மனஸ்... பகுதியை மிகவும் ஆர்வமுடன் படித்து வருகிறேன். என்னுடைய மனபாரத்தை உங்களிடம் இறக்கி வைப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். என் மகன் 8ம் வகுப்பு படிக்கிறான். என் மகனைப் பற்றி நானே இப்படிச் சொல்வதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. வேறு வழியில்லாமல்தான் சொல்கிறேன். சின்ன வயதில் இருந்தே மிகவும் முரடனாக இருக்கிறான். பயங்கரமான கோபம், முரட்டுத்தனம், பிடிவாதம். சின்ன வயதில் ரசிக்க முடிந்தது; ஆனால், எல்.கே.ஜி., படிக்க ஆரம்பித்த நாளில் இருந்தே இவனைப் பற்றிய, 'கம்ப்ளெயின்ட்' வந்து கொண்ட இருக்கும்.சின்னப் பசங்க காதை கடிப்பது, அடிப்பது என்று வளர, வளர இவனது அராஜகம் தாங்கல. மிஸ்கிட்ட இருந்து, 'போன்' வந்தாலே எனக்கு வயிற்றை கலக்கும். இப்போது வீட்டில் நான் கொடுக்கும் லஞ்ச், ஸ்நாக்ஸ்சை எடுத்துச் செல்வதில்லை. மற்ற பிள்ளைகளின் சாப்பாட்டை பிடுங்கித் தின்பது; அவர்களை மிரட்டி அடிப்பது... அவங்க, 'லஞ்ச்' பாக்ஸ்சை தூக்கி அடிப்பது என்று. இவனால் எந்த, 'பேரன்ட்'டும் என்னுடன் பேசுவது இல்லை. இவனை எப்படி திருத்துவது என்றே தெரியவில்லை சகோதரி. எல்லா டீச்சர்ஸ்சும் என் மகனை கண்டாலே அலறுகின்றனர். என்ன செய்யட்டும் என் அன்புத் தோழியே...பிரிய சிநேகிதியே... உங்கள் நிலை ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒன்று. ஒரு தாயின் மனநிலை எனக்குப் புரியுது. எல்லா பிரச்னைகளுக்குமே ஒரு முடிவு உண்டு. சோர்ந்து போகாதீங்க.உங்களது குடும்பத்திலோ அல்லது உங்கள் கணவரது குடும்பத்திலோ யாராவது ஒருவர் உங்கள் மகனைப் போல் இருப்பர். சரி... உங்கள் மகனது ரவுடித்தனத்தை எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்.நீங்கள் இவனுக்காக அதிக நேரம் செலவிட்டுத்தான் ஆக வேண்டும். அவனது ஒவ்வொரு தவறுகளையும், பொறுமையோடு, அன்போடு அவனுக்கு புரிய வைக்க வேண்டும். கண்டிக்கவே கூடாது. இப்படிப் பட்ட பிள்ளைகள் ஆத்திரத்தில் என்ன முடிவு எடுப்பார்கள் என்று சொல்லவே முடியாது.எந்த இடத்திலும், 'மகனே ஏன் அவனை அடிச்ச?' என்று கேட்காமல், 'உன்னை அந்த அளவு கோபப் படுத்திட்டானா... அப்படி என்னதான் செய்தான் உன் நண்பன்?' என்று கேட்கணும்.'செல்லம்... உனக்கு விதவிதமான சாப்பாடு நான் செய்து தர்றேன்பா... நீ போய் அந்த, 'திலக்'கோட பிரியாணியை பிடுங்கி தின்னன்னு சொல்லி அவங்க அம்மா வந்து என்னை எல்லார் முன்னாடியும் கேவலப்படுத்திட்டாங்கப்பா... உனக்கு இப்பவே பிரியாணி வாங்கிட்டு வரச் சொல்லட்டுமா... நீ மற்றவங்க சாப்பாட தொடவே தொடாத கண்ணா... நம்ம வீட்ல இல்லாததா என்ன? எனக்கு ரொம்ப ஷேம்... ஷேம்... ஆயிடிச்சி,' என்று சொல்லி அழுங்கள். அவன் அப்படியே மனசு உருகிடுவான்.உங்களை மற்றவர்கள் திட்டுவதை உங்கள் மகனால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.'என் புள்ள மேலே நான் எவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன் தெரியுமா... புத்திசாலி... ஸ்மார்ட் பாய்' என்று சொல்லி புகழ்ந்து உற்சாகப்படுத்துங்கள். 'மிஸ்'கிட்ட, 'குட் பாய்' ஆ நடந்துக்கணும் என்று மெல்ல சொல்லுங்க... இப்படி ஒவ்வொரு தவறுகளையும், 'பாஸிடிவ்' அப்ரோச்'ல பேசுங்க... இவர்கள் எல்லாம் அன்புக்குத்தான் அடிமையே தவிர கண்டிப்புக்கு அல்ல..பள்ளி வாழ்க்கையில் முரட்டுத் தனமாக நடந்து ஆசிரியர்கள், நண்பர்களின் சாபத்தை கொட்டிக் கொள்ளும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாகவே இருக்காது. அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க என்று சொல்லி, சிலரது வாழ்க்கையை கதைபோல் அவனுக்கு சொல்லுங்க.சகோதரி... என்னுடன் படித்த வகுப்புத் தோழன் ஒருவன் பயங்கர ரவுடி.... ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாருமே அவனை கண்டாலே நடுங்குவர். ஒருநாள், எங்கள் ஆசிரியர் அவனை பார்த்து, 'டேய்... நீ உருப்புடாம போய் தெருத்தெருவாக ரோட்டில் அலைவ பாரு...!' என சபித்தார். இன்று அவன் மனைவி, பிள்ளைகளை பிரிந்து, பிஸினஸ், வேலை எல்லாமே போய் நிஜமாகவே நடுத்தெருவில் அலைவதை நான் பார்க்கும்போது, மனது வலிக்கிறது... இது நிஜமாகவே நடந்த சம்பவம். உங்கள் மகனிடம் கூறுங்கள்.அவனிடம் 'எக்ஸ்ட்ரா' அன்பு காட்டி, 'கேர்' எடுத்து திருந்தினால்தான் அவனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இல்லையென்றால், அவனை நம்பி வரும் மனைவி, பிறக்கும் பிள்ளைகள் கஷ்டப் படுவர். ஏன், வயதானபிறகு உங்களுக்கே பெரிய முள்ளாக மாறிவிடுவான். எனவே, கோபத்திற்கு இடம் கொடுக்காமல் பொறுமையுடன் முயற்சி செய்யுங்கள். பிள்ளைகள் தவறு செய்தாலே அதை மறைத்து, 'எம்புள்ள செய்ய மாட்டான்' என்று சொல்லியே பிள்ளைகளை உருப்படாமல் போக வைக்கும் தாயார் மத்தியில், உண்மையைச் சொல்லி அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த நினைக்கும் உங்களுக்கு ஆண்டவனும் துணை செய்வான்.அன்புத் தோழி! ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !