உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்...

அன்புள்ள ஜெனிபர் ஆன்டிக்கு, என் பெயர்....; வயது 17. இளஸ்... மனஸ்... பகுதி மிகவும் பிடிக்கும். எல்லாருக்கும் ஆறுதல் கூறும் நீங்கள், என் பிரச்னைக்கு வழி சொல்லுங்க ஆன்டி... ப்ளீஸ்.எங்கள் குடும்பத்தில் அப்பா, அம்மா, நான் மற்றும் என் 14 வயது தங்கை. அப்பா 5 வருடத்திற்கு முன், மரணமடைந்தார். 10ம் வகுப்பு மற்றும் +2 விலும் நல்ல மதிப்பெண் பெற்றதால், MITல் இன்ஜினியரிங் கோர்ஸ்சில் இந்த வருடம் சேர்ந்துள்ளேன். என் அம்மா நெருங்கிய உறவினர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். நான் அதை தவறு என கூறவில்லை; அம்மாவின் நிலை எனக்கு புரிகிறது. இருந்தாலும், அவரை அப்பாவாக என்னால் ஏற்க முடியவில்லை. அதனால், அவரை, 'சித்தப்பா' என்று கூப்பிடுகிறேன். என் அம்மா, 'டாடி'ன்னு கூப்பிடச் சொல்லி வற்புறுத்துகிறார். என்னால் குடும்பத்தில் சிறு சிறு சண்டைகள் வருகிறது. கல்லூரி விடுதியில் சேரச் சொல்கின்றனர். சிறுவயது முதலே விடுதியில் தங்கியதுமில்லை; என் அம்மா, தங்கையை விட்டு இருந்ததும் இல்லை. இதைவிட, பெரிய பிரச்னை என்னவென்றால், இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது. டாக்டர் முதல் யோகா வரை அனைத்தையும் என்னால் முடிந்தவரை முயற்சி செய்துவிட்டேன்; ஒன்றும் பயனில்லை.ஒரு பக்கம் புதிய சூழலில் இருந்தால் அந்த குணம் மாறி விடுமோ என்று மனம் எண்ணுகிறது; மறுபக்கம், விடுதியில் இருந்தும் அந்த குணம் மாறவில்லை எனில், மாணவர்கள் மிகவும் கேவலப்படுத்துவர். இப்போது நான் என்ன செய்யட்டும் ஆன்டி?ஓ டியர்! இளம் வயதில் அப்பாவை இழப்பது மிகவும் கொடுமை. அந்த வேதனையிலும் படிப்பில் சாதித்துள்ளாய். வெரிகுட். பக்கத்தில் உட்கார்ந்து பெற்றோர் பேசினாலே இந்த காலத்துப் பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை. நம்முடைய கலாசாரம் அப்படி. அதிலும், இந்த வயதில் உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பது எனக்குப் புரிகிறது மகனே... அம்மாவின் திருமணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவரை, 'டாடி' என்று கூப்பிட கஷ்டமாக இருந்தாலும், உன் அம்மாவுக்காக, சொல்ல பழகிக்கொள் மகனே. அப்போதுதான் அவருக்கும் உன் மீது பாசம் வரும். சரியா?இன்னொரு விஷயம். இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை ஒருசில வளர்ந்த பிள்ளைகளுக்கு இன்றும் இருக்கு. இதில் இருந்து நீ வெளியே வராமல், ஹாஸ்டலில் போய் தங்கினால், மாணவர்கள் ரொம்ப கிண்டல் செய்வர். யாரும் உன்னுடன் சேர்ந்து படுக்கவே மாட்டார்கள். இது ஒருவகை, 'வீக்னஸ்' மகனே. புதிய சூழலில் இந்தப் பிரச்னை மாறும் என்று சொல்லமுடியாது. நீயும் நிறைய முயற்சிகள் செய்துள்ளாய். ஆன்டி சொல்ற இந்த விஷயத்தையும் செய்து பாரேன், நிச்சயம் இந்தப் பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும். முடிவு இல்லாத பிரச்னை என்று எதுவுமே இந்த உலகத்தில் இல்லை. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு முடிவு உண்டு.ஒன்று, இரவு சாப்பாட்டை, 8:00 மணிக்குள் முடித்துவிட்டு, அதன் பிறகு தண்ணீர் குடிக்காதே. படுக்கைக்கு செல்லும் முன், யூரின் பாஸ் பண்ணிவிட்டு படு; அலாரம் வைத்து இரண்டு முறையேனும் எழுந்து யூரின் பாஸ் பண்ணு. இதை கட்டாயம் செய்து பார்.அதையும் மீறி யூரின் பாஸ் பண்ணினால், ஒன்று ஸ்பைனல் கார்டில் பிரச்னை இருக்கும் அல்லது மனரீதியான பிரச்னை இருந்தாலும் இப்படி, 'யூரினேட்' பண்ணுவாங்க. நீ சென்னை என்பதால், டாக்டர் ராஜேந்திரன், மொபைல் நம்பர்: 98941-18899.இவரிடம் நேரில் சென்று, ஜெனிபர் ஆன்டி அனுப்பினார்கள் என்று சொல். உன்னோட பிரச்னை என்ன என்பதை அழகாக கண்டுபிடித்து சொல்லிவிடுவார். அதிலிருந்து நீ விடுதலை அடைந்து விடலாம்.கவலைப்படாதே! சந்தோஷமா இரு; தங்கையை அன்பா பார்த்துக்கோ. உங்க அம்மாவுக்காக உன் டாடியை நேசிக்க கத்துக்கோ.உங்கள் நலனில், அக்கறை கொள்ளும்,ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !