இளஸ்... மனஸ்... (50)
அன்பு சகோதரி ஜெனிபர் அவர்களுக்கு, சகோதரன் ------ எழுதி கொண்டது. கடந்த, 25 ஆண்டுகளாக தினமலர் நாளிதழின் வாசகர் நான். ஆனால், சிறுவர்மலர் இதழ் சிறுவர்களுக்கு தானே என்று நினைத்து, அதை படிக்க மாட்டேன். நான் ஒரு பிஸினஸ்மேன். என்னுடைய, 'கார்மென்ட்' தொழிலில், மிகப் பெரிய சரிவை சமீப காலமாக, சந்தித்து வருகிறேன்.ஒரு காலத்தில், 'ஓஹோ' என்று இருந்த தொழில் இன்று, போட்டிகள் நிமித்தம் சரிந்து விட்டதை எண்ணி மிகுந்த கவலையில் இருந்த நான், எதேச்சையாக சிறுவர்மலர் இதழை புரட்டி கொண்டிருந்தேன். அதில் குறிப்பாக, ஒரு வாலிபனுக்கு, ஆரோக்யா பால் நிறுவனரின் கதையை கூறி உற்சாகப்படுத்தியிருந்தீர்கள். அது என்னை மிகவும் வியக்க வைத்ததுடன், என் மனதிற்கு மிகுந்த ஆறுதலை தந்தது.இந்த சின்ன புத்தகத்தில், இவ்வளவு அருமையான விஷயங்களா என அசந்து போனேன். சிறுவர் மலர் புத்தகங்களை தேடி தேடி படித்ததன் விளைவு, என் தொழிலை பற்றி உங்களிடமே, 'ஆலோசனை' கேட்டால் என்ன என்று தோன்றியது...என் தொழிலை, மீண்டும் வெற்றிகரமாக தூக்கி நிறுத்த, ஆலோசனை சொல்லுங்க சகோதரி... காத்திருக்கிறேன்.வணக்கம் சகோதரரே... உங்கள் தொழில், அதன் சரிவுகள் பற்றி, கடிதத்தில் விளக்கமாக எழுதியிருந்தீர்கள். என் மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. என்னோட கருத்தை சொல்றேன்...இந்த காலக் கட்டத்தில், வியாபாரத்தில் எப்போதும் வெற்றி பெற வேண்டுமானால், ஏதாவது புதுமைகளை, புகுத்தி கொண்டே இருக்க வேண்டும்.'3 எம்' நிறுவனம் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் தானே... இன்றைய, 'டிரெண்ட்' என்னவோ அதை அப்படியே பயன்படுத்தி, 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்றும் வெற்றி நடை போடுகின்றனர்.கிட்டத்தட்ட, 55 ஆயிரம் தயாரிப்புகள்... மருத்துவ, மின்னணு, கார் பாதுகாப்பு துணைக் கருவிகள் என, 25 ஆயிரம் பொருட்களுக்கு மேல் காப்புரிமை வாங்கி வைத்துள்ள மிகப் பெரிய உற்பத்தி நிறுவனம் இது.இவர்களது வெற்றியின் ரகசியமே புதுமை... புதுமை. இப்புதுமையை புகுத்த, வருவாயில், 6 சதவீதம் தொகையை இதற்கெனவே செலவிடுகிறது இந்நிறுவனம். அத்துடன், புதுமையான ஐடியாக்களை தரும் தங்கள் ஊழியர்களுக்கு, லீவு கொடுத்து, குடும்பத்துடன் வெளியூர் அனுப்பி, 'என்ஜாய்' பண்ண செய்து, 'வரும்போது, புதுப்புது ஐடியாக்களுடன் வாங்க!' என அனுப்பி வைக்கிறது.புதுப்புது ஐடியாக்களை தரும் ஊழியர்களுக்கு, உயர்தர வருமானம் கொடுத்து, அவர்கள் குடும்பத்தின் பண தேவைகளை கம்பெனி பார்த்து கொள்வதன் மூலம், இந்த ஊழியர்கள், புதுப்புது திட்டங்களை உருவாக்குவது எப்படி என்பதை பற்றி மட்டுமே, சிந்திக்கும்படி செய்கின்றனர். இதனால், அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப புதுப்புது ஐடியாக்களை உருவாக்குகின்றனர் ஊழியர்கள். இதுவே, இந்த கம்பெனி, 106 ஆண்டுகள் ஆனாலும், உலக அளவில் மூன்றாவது பெரிய நிறுவனமாக, '3எம்' நிறுவனம் இருப்பதன் ரகசியம். இந்த கொள்கையை நீங்களும் பின்பற்றலாம்.இன்னொரு விஷயம் விளம்பரம்... உங்களது பொருளை நீங்கள் எப்படி விளம்பரம் செய்கிறீர்கள் என்பதில் தான் வெற்றியின் ரகசியமே உள்ளது.நம்ம, ராம்ராஜ் வேஷ்டிகள் இன்றைக்கு சக்கைபோடு போடுகிறது. எப்படி தெரியுமா... 30 ஆண்டுகளுக்கு முன், 20 ஆயிரம் வேஷ்டிகள் தான் தயாரித்தனர். ஆனால், இன்று, தினமும், 1.5 லட்சம் வேஷ்டிகள் விற்பனை ஆகிறது.இதன் முதலாளி நாகராஜ், அவினாசி பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, கிராம பள்ளிக் கூடத்தில், 10ம் வகுப்பு முடித்து, 'மார்க்கெட்டிங்' நிறுவனம் ஒன்றில், கடைநிலை ஊழியராக, 200 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தார். ஆனால், இன்று, சர்வதேச விமான நிலையங்களில் கூட, இவரது வேஷ்டி கடைகள் உள்ளன என்றால் பார்த்துக்கோங்களேன்.தமிழர்களின் அடையாளம் வேஷ்டி. அதை அணிவதையே கேவலமாக நினைக்கின்றனர் நம் மக்கள். அதற்கு ஒரு தனி கவுரவத்தை கொடுத்தன, இவர் எடுத்த விளம்பரங்கள்.வெள்ளை வேஷ்டிகளை கண்டாலே யானைகள் மிரளும்; ஆளை துரத்தும் என்பது பொதுவான கருத்து. அந்த கருத்தையே உடைக்கும்படி, ஒரு விளம்பரத்தை எடுத்தார். ஒரு கம்பீரமான யானை, வேஷ்டி, சட்டை அணிந்த ஒரு மிடுக்கான மனிதரை கண்டதும், தும்பிக்கையை தூக்கி சல்யூட் செய்யும் காட்சி... அத்துடன், 'சல்யூட் ராம்ராஜ்க்கு சல்யூட்!' என்ற அழகான பாடல் ஒன்றை போட்டு தாக்கினார்.அத்துடன், ஒருமுறை ஒரு ஸ்டார் ஓட்டலுக்கு வேஷ்டி அணிந்து சென்ற இவரை மட்டும் அனுமதிக்காமல், 'பேன்ட்' அணிந்த நண்பர்களை மட்டும் அனுமதித்தது அந்த ஓட்டல்.அந்த அவமானத்தையே வெற்றியாக மாற்றினார் நாகராஜ். எப்படி தெரியுமா... ஸ்டார் ஓட்டலில் வேஷ்டி அணிந்தவருக்கு, ரோஜா பூ கொடுக்கிற மாதிரியும், ஆயிரம் பேர் கோர்ட், சூட்டில் வரிசையாக நின்று, கம்பீரமாக வேஷ்டி அணிந்து வரும் முதலாளியை, வரவேற்பது போலவும், அவரிடம் கையெழுத்து வாங்க வரிசையாக நிற்பது போல விளம்பரம் எடுத்து, வேஷ்டியின் மதிப்பை எங்கோ கொண்டு சென்றுவிட்டார். மக்களை சென்று அடையக்கூடிய ஒரு விளம்பரமானது, வெளிநாட்டினரும் நம் வேஷ்டியை இன்று விரும்பி வாங்கும்படி செய்கிறது என்றால் பார்த்துக்கோங்களேன் விளம்பரங்களின் மதிப்பை!போதுமா சகோதரரே... சோர்ந்து போகாமல் மேலே சொன்ன உதாரணங்களை ஒரு வெறியாக எடுத்து உழைங்க; சிந்தியுங்க; புதுமையை புகுத்துங்க.'கார்மென்ட்' உலகில் ஒரு புது புரட்சிக்கு வித்திடுங்க!சல்யூட்!சகோதரி ஜெனிபர் பிரேம்.