உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (123)

அன்பு பிளாரன்ஸ் ஆன்டிக்கு...பெற்றோருக்கு நான், மூத்த மகள்; வயது, 18. எனக்கு, 10 மற்றும் 8 வயதில் தங்கைகள் உள்ளனர். எங்கம்மா எப்போதுமே சமையற்கட்டில் போராடியபடி இருப்பார்.புழங்கின சமையல் பாத்திரங்களை கழுவி வைப்பது தனி வேலை; சமையல், பெண்களை அடிமைப்படுத்துகிறது. சாகும் வரை சமையல்கட்டு பக்கம் போக கூடாது என, சபதம் எடுத்துள்ளேன். திருமணமானால் கூட, கணவன் சமைக்கட்டும் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட வேண்டும் என்றிருக்கிறேன்; உங்கள் கருத்தென்ன ஆன்டி.அன்பு மகளே...சமையல் கூடம் பெண்களை அடிமைப்படுத்தும் இடமல்ல; சமையல் செய்ய தெரிந்திருப்பது, பெண்களுக்கான மிகப்பெரிய ஆயுதம்.உலகில், நுாற்றுக்கணக்கான நுண்கலைகளில் முதன்மையானது சமையல்; அதை ஒரு தவம் போல செய்ய வேண்டும்.சமையலில், ஆண், பெண் தயாரிப்பு என பிரிவுகள் உண்டு. சமைப்பவரின் விருப்பு வெறுப்பு அதில் கலந்திருக்கும்; அம்மாவின் தாய்மை பெருக்கெடுத்தோடும்.சமையலை ஒரு பெண், ஆணுக்கு விட்டுத் தருவது, மூன்றாவது கையை இழப்பது போன்றது. சமையல் இல்லாத வீடு பாழடைந்த மண்டபம்; சமைக்க தெரிந்தவர்களிடம், பொறுமை, கனிவு, விருந்தோம்பல் போன்ற பண்புகள் ஓங்கியிருக்கும்.சமையல் கற்றுக் கொள்வதை, ஏழு வயதிலிருந்து துவங்கலாம்.அம்மா தான் மகளுக்கு சமையல் ஆசையை ஊட்ட வேண்டும்; வலிந்து திணிக்க கூடாது. பள்ளிக்குச் சென்று வந்த பின், விடுமுறை நாட்களில் என திட்டமிட்டு கற்றுக் கொள்ளலாம்.முதலில், எரிவாயு அடுப்பை திருகி, தீக்குச்சியால் அல்லது லைட்டரால் எப்படி நெருப்பை பற்ற வைப்பது என தெரிந்து கொள்ள வேண்டும்.நறுக்கும் முன், காய்கறிகளை மஞ்சள் துாள் போட்டு கழுவ வேண்டும்; கை விரல்களை காயப்படுத்தி கொள்ளாமல் வெட்ட கற்றுக் கொள்ள வேண்டும்; வெங்காயம் வெட்டுதல், பூண்டு உரித்தல் போன்றவை சமையலின் பாலபாடங்கள்.முதலில் சமையலின், எல்.கே.ஜி., வேலைகளான, தேநீர் தயாரிக்க, காபி போட, தோசை சுட, ஆம்லெட் போட கற்றுக் கொள்வது நலம்.மூன்று முறை பொங்க விட்டு, பால் காய்ச்ச வேண்டும்.தோசை மாவு தயாரிக்க, நான்கு பங்கு புழுங்கல் அரிசி, ஒரு பங்கு உளுந்து சேர்க்க வேண்டும். அரைத்து முடித்தவுடன், உப்பு போட்டு, இரண்டு மாவையும் கலக்க வேண்டும்.குக்கரில் சாதம் வைக்க, களைந்த அரிசி ஒரு பங்கு, தண்ணீர் இரண்டு பங்கு சேர்த்து மூடி அடுப்பில் வைக்கவும்; இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.உப்புமா செய்வதற்கு முன், ரவையை வறுக்கவும்.கோழி மாமிசத்தை துண்டு செய்யவும், மீனை, துண்டுகளாக வெட்டி, கழுவி சுத்தம் செய்யவும் கற்க வேண்டும்.எங்கம்மா, மீன் சுத்தம் செய்வதை பார்க்க கண் கோடி வேண்டும்; பளிங்கு மாதிரி சுத்தம் செய்து, உப்பும், மஞ்சள் துாளும் போட்டு சமைப்பார்.நுாடுல்ஸ், சப்பாத்தி செய்ய கற்றுக் கொள்தல் மிக எளிது. முதலில், அம்மாவுடன் காய்கறி கடைக்குச் சென்று, எப்படி வாங்குகிறார், சுத்தமான காய்கறிகளை எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்பதை கற்றுக்கொள்ளவும்.அம்மா கை பக்குவத்தை காப்பி யடிக்கவும்; அதன்பின், பிரத்யேகமான கை பக்குவம் வந்து விடும். தேவைக்கு கொஞ்சமாக சமைத்து சாப்பிடவும்; அதிகமாக சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம்.அடிக்கடி, கறிவேப்பிலை, புதினா துவையல் செய்து, உணவுடன் சேர்த்து சாப்பிடவும்; ஆண் பிள்ளைகளும், சமையல் கற்றுக் கொள்ளலாம். பின்னாளில், திருமணமானால் மனைவிக்கு ஒத்தாசையாக இருக்கும்.மகளே... சமையல் கலையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்!- அன்புடன், பிளாரன்ஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !