உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (51)

அன்புமிக்க பிளாரன்ஸ்...என் வயது, 35; கணவருடன் பேக்கரி தொழில் நடத்துகிறேன். ஒரே மகள், 7ம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுமார்தான். தினமும் தலைவாரி இரட்டை ஜடை போடுவாள். தலை நிறைய மல்லிகைப்பூ சூட விரும்புவாள். அழகிய எம்ப்ராய்டரியும், ஜரிகை வேலைப்பாடும் கொண்ட பிளவுஸ், பாவாடை அணிவாள்.எல்லாவற்றுக்கும் மேலாக, பொம்மை பைத்தியம். கைச்செலவுக்கு கொடுக்கும் காசில், பொம்மை வாங்கி குவிப்பாள். வீடு முழுக்க பொம்மை தான். அவற்றுடன் தான் துாங்குவாள். உறவினர்கள் இனிப்பு வாங்கி வந்தால், பொம்மை வாங்கி வார கேட்பாள். வகை வகையாக, 300க்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன. அவள் பொம்மை பைத்தியத்தை தீர்க்க தகுந்த ஆலோசனை கூறு.மகளின் பொம்மை விருப்பத்தால் நொந்து வேகும் அம்மா...முதலில் கவலையை விடுங்க. இனி, பொம்மை பைத்தியத்தின் அம்மா என கூறாதீங்க; பொம்மை காதலியின் அம்மா என கூற பழகிக் கொள்ளுங்க. பொம்மை வைத்திருப்பது, 4000 வருட மனித கலாசாரத்தின் தொடர்ச்சி. ஒரு கல்லறையில் பாதாம் பருப்பு வடிவ கண்களும், புதர் போன்ற புருவங்களும் கொண்ட பொம்மை சிலை கண்டெடுக்கப்பட்டது. அது, 4500 ஆண்டு பழமையானது. அதுதான் உலகின் முதல்பொம்மை என கருதப்படுகிறது. குழந்தைகளின் விளையாட்டு பொருளாக மட்டுமின்றி, மாந்திரீகம் மற்றும் மத சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன பொம்மைகள். களிமண், கல், மரம், எலும்பு, யானைத்தந்தம், தோல் மற்றும் மெழுகில் செய்யப்படுகின்றன. ஆப்ரிக்கா கண்ட பகுதியில், பண்டைய எகிப்து, ஐரோப்பா கண்ட பகுதியில் பண்டைய கிரீஸ், ரோம் நகரங்களில் பொம்மைகள் விளையாட்டு பொருளாக இருந்துள்ளன. இதை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.கிரீசில், கி.மு.3ம் நுாற்றாண்டில், ஒருவகை பொம்மை இயந்திர புதிர் உருவாக்கப்பட்டிருந்தது. அது, 14 பாகங்கள் கொண்ட சதுரம். அதிலிருந்து பல்வேறு வடிவங்களை உருவாக்கலாம். கி.பி.17ம் நுாற்றாண்டில், மேற்காசியாவில் உள்ள ஈரானில் புதிர் பூட்டுகள் தயாரிக்கப்பட்டன. இவை குழந்தை விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவை.திறமையை கண்டறிய, காரண காரியங்களை கற்றுக்கொள்ள, உறவுகளை மேம்படுத்த, திறமைகளை வளர்க்க, கற்பனைகளை பெருக்க, பொம்மையுடன் விளையாடுவர் குழந்தைகள். ஒன்று, சாதாரண காகிதத்தை மடித்து, விமான வடிவம் செய்யும்; மற்றொன்று, அம்பு போன்ற உருவம் செய்யும். ஆண், பெண் குழந்தைகளின் பொம்மை விருப்பம் தனித்துவம் மிக்கது. மிருகங்கள் கூட, பொம்மையுடன் விளையாட விரும்புகின்றன. கடல் உயிரினமான டால்பின், பந்துகளை பிடித்து விளையாடும்.டில்லியில், கார்ட்டூனிஸ்ட் சங்கர் அமைத்துள்ள, பொம்மை மியூசியம் இருக்கிறது. அதில் உலகநாடுகளில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்ய நாட்டை சேர்ந்த அனேடாலி மோஸ்க்வின் என்பவர், இறந்த, 29 குழந்தைகளின் உடல்களை தோண்டியெடுத்து, 'மம்மிபிகேஷன்' செய்து, பொம்மைகளாக்கியுள்ளார்.ஆப்பிரிக்க பழங்குடிகள், 'வூடு' என்ற மாந்திரீகத்தில், துணி பொம்மையை பயன்படுத்துகின்றனர்.உலகம் முழுக்க சிறுவர், சிறுமியர், பார்பி, டெடிபியர், யோயோ, பங்கோ, லிகோ போன்ற பொம்மைகளை கொண்டாடுகின்றனர்.மகள் விளையாட வசதியாக, மரப்பாச்சி, வினைல், காகித பொம்மைகள் வாங்கிக் கொடுக்கவும். கண்ணாடி பீரோக்களில் அவற்றை அடுக்க உதவவும். பொம்மை சேகரிப்பு, படிப்பை கெடுத்துவிடாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் மகள், கற்பனையும், அதீத அழகுணர்ச்சியும் மிக்கவள். அவளை பொம்மலாட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்து போகவும். பட்டம் விட அனுமதிக்கவும்.'க்யூப்' கட்டைகள் வைத்து விளையாட அனுமதிக்கவும். 'ஓரிகமி' என்ற ஜப்பானிய காகித பொம்மை செய்யும் கலையை கற்றுக் கொடுக்கவும். பொம்மை சேகரிப்பு, எதிர்கால வாழ்வில் சாதனை புரிவதற்கான முன்னோட்டம் என, கருதி மகிழுங்கள்!- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !