அறிவு கூர்மை!
அன்புடன் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வந்தான் குமரன். வாலை ஆட்டியபடி எப்போதும் அவனை சுற்றிக்கொண்டிருந்தது.அன்று பக்கத்து வீட்டுத்தோட்டத்தில் நாய்க்குட்டி குரைக்கும் சத்தம் கேட்டது. பதறியப்படி ஓடினான் குமரன்; சத்தம் அங்கிருந்த கிணற்றுக்குள் கேட்டது. அவனுக்கு புரிந்து விட்டது.உதவி கோரி சத்தமிட்டான்; ஊர் மக்கள் கூடினர்.மிகவும் பாழடைந்த கிணறு அது. யாருக்கும் பயன்படாமல் கிடந்தது. அதற்குள் தவறி விழுந்திருந்தது நாய்க்குட்டி. கிணற்றில் இறங்கி அதை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. குமரனுக்கும் கிணற்றில் இறங்கும் திறன் இல்லை. எனவே கடும் கோபத்தில், ''எல்லாரும் வேடிக்கை பார்க்கறீங்களே... இதுவே, ஒரு குழந்தை விழுந்திருந்தால்...'' என வெடித்தான். ஊர் பெரியவர், ''என்னடா சொல்ற...'' என்று கடிந்தார். ''ஆசையாக வளர்த்த நாய்க்குட்டி கிணற்றுக்குள் விழுந்து அழும் குரலை கேட்கும் சக்தி எனக்கில்லை ஐயா; எல்லாரும் சேர்ந்து, அந்த பாழுங்கிணறை உடனே மூடிடுங்க...'' என்றான்.அதன்படி, கிணற்றை மூடும் பணி துவங்கியது. மண்ணை எடுத்து வந்து கொட்டிக்கொண்டு இருந்தனர்.தப்ப வழி தெரியாமல் அலறியபடியே இருந்தது நாய்க்குட்டி. அதைப் பொருட் படுத்தாமல், மூடுவதற்காக மண்ணை போட்டனர். ஒரு கட்டத்தில் நாய்க்குட்டியின் அலறல் நின்றது; எல்லாரும் பதறினர். புன்னகையுடன் கிணற்றை எட்டிப் பார்த்தான் குமரன். கைக்கெட்டும் துாரத்தில், செல்ல நாய்க்குட்டி நின்று வாலாட்டியது.ஒவ்வொரு முறை மண் விழும் போதும், உடலை உதறி, மண் மீது ஏறி, முயற்சியைக் கைவிடாமல் மேலே வந்திருந்தது. அதன் அறிவுக் கூர்மையையும், விடாமுயற்சியும் கண்டு வியந்தனர் கிராம மக்கள்.குழந்தைகளே... முயற்சி திருவினை ஆக்கும்.பூபதி பெரியசாமி