வழி மீது விழி வைத்து... (1)
நன்றியுள்ள பிராணி நாய். அதன் பாசமும், பற்றும் வியக்க வைக்கும். நாய்கள் சார்ந்து, உலகம் முழுவதும் சாகச கதைகள் பல உள்ளன. ஒரு அற்புத நாய் பற்றிய, வியப்பூட்டும் உண்மைக் கதை இது -அது, 1936ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத பகல் பொழுது...அமெரிக்காவில் உள்ள மாண்டானா மாகாணம், போர்ட் பெண்டன் ரயில் நிலையத்தில், ஒரு ரயில் வந்து நின்றது. பயணியர் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர். பொருட்களை ஏற்றி செல்லும், 'கூட்ஸ்' பெட்டியில், ஒரு சவப்பெட்டியை ஏற்றிக்கொண்டிருந்தனர். இதை கவனித்தபடி, ரயில்வே நடைமேடையில், ஒரு நாய், சோகமாக படுத்திருந்தது; அது, செம்பழுப்பு நிறத்திலான கூலி இனத்தை சேர்ந்தது. இந்த இனம், ஆடுகளை நிர்வகிக்கும் திறன் மிக்கது. ஆபத்து வந்தால் கடுமையாக போராடி காக்கும். ஆடு வளர்ப்போர் இவற்றை விரும்புவர். நம் நாட்டில் உள்ள, 'அல்சேஷன்' இனம் போன்றே இருக்கும்.சவப்பெட்டி, ரயிலில் ஏற்றப்பட்டது. அதையே, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது அந்த நாய். பெட்டிக்குள், அதன் எஜமானின் பிணம் இருந்தது; அடக்கம் செய்வதற்காக எங்கோ எடுத்துச் சென்றனர். பேச முடியாத அந்த பிறவிக்கு, இந்த விவரம் தெரியாது. பெட்டிக்குள், எஜமானை கிடத்தியதை பார்த்து, பயணம் போகிறார் என்றே எண்ணியது. ரயில் நிலையத்துக்கு எடுத்து வந்த போது, உடன் வந்து நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தது.ரயில் புறப்பட்டது. ரயில் சென்ற திசையில், நடைமேடையின் கடைசி வரை ஓடி களைத்தது அந்த நாய். பின், வேகமெடுத்த ரயிலை பார்த்தபடி பரிதாபமாக நின்றது. சற்று நேரத்தில், தள்ளாடியபடி திரும்பியது; அதன் காதுகளும், வாலும் துவண்டு தொங்கின. ரயில்வே நடைமேடையின், ஒரு கோடியில் சோகமாக ஒதுங்கியது. பயணியர் நடமாட்டம் இல்லாத பகுதியில், குழி உருவாக்கி படுத்துக் கொண்டது. பாசம் நிறைந்த அதன் விழிகள், ரயில் தண்டவாளத்தையே வெறித்துக் கொண்டிருந்தன. 'எஜமான் வெளியூர் போயிருக்கிறார்; விரைவில் திரும்பி விடுவார்; அதுவரை காத்திருக்கலாம்' என்று எண்ணியிருக்கலாம்.ஒவ்வொரு நாளும், ரயில்கள் வரும்போது, பரபரப்புடன் எழுந்து வரும் அந்த நாய். இறங்கும் பயணியரின் முகத்தை ஆவலுடன் பார்க்கும்; அதில், எஜமான் இருக்கிறாரா என்று படபடப்புடன் தேடும். ரயில் புறப்பட்டதும், நடைமேடையின் கோடி வரை, வேகமாக ஓடும். பின், சோகத்துடன் திரும்பி வந்து படுத்துக் கொள்ளும். இதை, வழக்கமாக்கிக் கொண்டது. ஆரம்பத்தில், அந்த நாயை யாரும் கவனிக்கவில்லை. 'ஏதோ தெரு சுற்றி நாய், எச்சில் உணவுக்காக காத்திருக்கிறது; இரண்டாடொரு நாளில் ஓடிவிடும்' என்று தான் ரயில்வே ஊழியர்கள் எண்ணினர். அந்த வழித்தடத்தில் வரும் ரயில் நடத்துனர், எட்ஷீல்ட் என்பவரும், இப்படித் தான் எண்ணியிருந்தார். ஆடு மேய்த்தவரின் சவப்பெட்டியை, ரயிலில் ஏற்றியதை அவர் தான் மேற்பார்வையிட்டார். அந்த நிகழ்வை, சோகம் ததும்ப பார்த்துக் கொண்டிருந்தது இந்த நாய் தான் என்பது நினைவுக்கு வர, அவரது கவனம் திரும்பியது. தன் எண்ணத்தை மாற்றி, தினமும், அதை கண்காணிக்க துவங்கினார். ஒரு நாள் -ரயில் நிலைய அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தார் எட்ஷீல்ட். பேச்சு, அந்த நாய் பக்கம் திரும்பியது. பெருமூச்சு விட்டபடி, 'பாவம்... திரும்பி வராத எஜமானுக்காக, விசுவாசத்துடன் காத்துக்கொண்டிக்கிறது...' என்றார்.அதன் உன்னதமான காத்திருப்பை அறிந்த, ரயில் நிலைய அதிகாரி ஆச்சரியப்பட்டார். மிகுந்த நெகிழ்ச்சியுடன், 'ரொம்ப பரிதாபமாக இருக்கு... அது விரும்பும் வரை, இங்கேயே இருக்கட்டும். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. தேவையான உணவுக்கு நானே ஏற்பாடு செய்கிறேன்...' என்றார். அந்த ரயில் நிலையத்தில் முக்கியத்துவம் பெற்றது அந்த நாய். அதற்கு, 'ஷெப்' என்று பெயர் சூட்டி, நெகிழ்ச்சியுடன் பராமரிக்க துவங்கினர் ரயில்வே ஊழியர்கள்.ரயில்கள் வரும் போதெல்லாம் தவறாமல், எஜமானை தேடியது. துாரத்தில், ரயிலின், 'ஜிகு... ஜிகு...' ஓசையோ, கூவலோ கேட்டால் போதும்; ஆர்வத்துடன் ஓடி வந்து, நடைமேடையில் தயாராக நிற்கும். பயணியர் இறங்கும் போது, நம்பிக்கையுடன் தேடும். ஒவ்வொரு பயணியின் முகத்தையும் உற்றுப் பார்த்தபடி, 'என் எஜமான், இந்த வண்டியில் வரவில்லையா... அவரை கண்டீர்களா' என்று வினவுவது போல், அதன் பாவனை இருக்கும். ரயில் கிளம்பியதும், ஏமாற்றத்துடன் தள்ளாடியபடி முடங்கி, உடல் துவண்டு படுத்துக் கொள்ளும். ஆனால், எந்த நாளும் நம்பிக்கையை இழந்ததில்லை.மாதங்கள் உருண்டன -அந்த அற்புத நாயின் புகழ், அந்த பகுதி முழுவதும் பரவியது. அதை அனுதாபத்துடன் நோக்கி, நட்பு பாராட்ட முயன்றவர்கள் பலர். அன்பு செயல்களால், நெகிழ்த்தி ஆறுதல் படுத்த முயன்றவர்கள் ஏராளம். அதற்கு தனித்தன்மையுள்ள ரசிகர் பட்டாளம் பெருகியது.சிறுவர், சிறுமியர் அதை சீண்டி, குரைக்க வைத்து, ஓடி பிடித்து விளையாடினர். மிகவும் எளிமையாக பழகியது. ஆனால், குறிப்பிட்ட வரம்புக்கு மேல், யாரையும் நெருங்க அனுமதிக்கவில்லை. அன்றாட செயல்பாடுகளை, ஒரு எல்லைக்குள் அடக்கிக் கொண்டது.அதை, முசுடு என்று கூற முடியாது. கம்பீரமும், தன்மானமும் நிறைந்தது. தன் உடலை தொடவும், தழுவவும் ரயில் நிலைய அதிகாரியையும், எட்ஷீல்டையும் மட்டுமே அனுமதித்தது. மற்ற யாரையும் நெருங்கி வர அனுமதிப்பதில்லை. யாராவது தொட முயன்றால், பொய் கோபத்தை பாவமாக காட்டி விலக்கும். அதன் குணத்தை நன்கு புரிந்து, அன்பை பொழிந்தனர் மக்கள்.- தொடரும்...