உள்ளூர் செய்திகள்

உழைப்பே உயர்வு!

ஏழையிடம் இரண்டு பசு மாடுகள் இருந்தன. அவற்றில் கிடைத்த பாலை விற்ற வருமானத்தில் வாழ்ந்து வந்தான். குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. மனைவி, குழந்தைகளுடன் வறுமையில் வாடினான். ஏழ்மையை போக்க மாற்று வழி தெரியாமல் தவித்தான்.ஒருமுறை, அவன் வசித்த ஊருக்கு வந்திருந்தார் ஒரு ஞானி. அவரிடம் மிகுந்த சக்தி இருப்பதாக பேசிக்கொண்டனர். அவரை சந்தித்து ஆலோசனை பெற சென்றான் ஏழை.மிகுந்த அமைதியுடன், 'இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்...' என்று ஆசி கூறினார் ஞானி. அன்று மாடுகள் அதிக பால் கொடுத்தன; அது தொடர்ந்ததால் வருமானம் பெருகியது. இரண்டு நாலாகி, நான்கு எட்டாயின.வீட்டில், 30 மாடுகள் சேர்ந்தன.கூரை வீடு, பங்களா ஆனது.திரும்பிய இடமெல்லாம் செல்வம் செழித்தது.ஓய்வெடுக்க நேரமில்லை. ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருந்தான் அந்த ஏழை. ஆண்டுகள் ஓடின.மீண்டும் அந்த ஊருக்கு வந்தார் ஞானி.கடந்த பயணத்தின் போது ஆசி பெற்ற ஏழை, பெருஞ்செல்வந்தன் ஆகியிருந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். தேடி வருவான் என்று எதிர்பார்த்தார்.மூன்று நாட்கள் கடந்த பின்னும் வரவில்லை.நேராக அவன் வீட்டுக்கு சென்றார் ஞானி.கனிவுடன் வரவேற்று அமர வைத்தாள் அவன் மனைவி.மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தான் கணவன். ஞானியின் வருகை குறித்து தெரிவித்தாள்.வேலையை முடித்து வந்து விடுவதாக தகவல் அனுப்பினான்.ஞானிக்கு கடும் கோபம் வந்தது. 'காசு, பணம் வந்ததும், பழசை எல்லாம் மறந்து விட்டாயா... இனி, உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது; பழையது போல் இரண்டே மாடுகள் தான் இருக்கும்...'சபித்தபடி வெளியேறினார் ஞானி.பதறியடித்து ஓடி வந்தான்; செய்வதறியாது திகைத்தான்.ஞானி கோபித்துக் கொள்வாரென்று அவன் எண்ணவே இல்லை. அவர் சென்ற திக்கில் தேடி ஓடினான்; எங்கும் தென்படவில்லை.சோர்ந்து திரும்பினான்; வீட்டில், இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன. தலையில் அடித்து அழுதபடி, 'அலட்சியத்தால் எல்லாம் போச்சு; பழையபடி வறுமை வாட்டுமே...' என புலம்பினான்.தவித்தவனிடம், 'இரண்டு மாட்டையும், இப்பவே வித்துடுங்க...' என்றாள் மனைவி.அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.'மாட்டை விற்றால் வருமானத்துக்கு என்ன வழி...'எதுவும் புரியாமல் கேட்டான்.மாடுகளை விற்க மறுபடியும் வலியுறுத்தினாள் மனைவி.'சரி... நடப்பது நடக்கட்டும்...'மாடுகளுடன் சந்தைக்கு புறப்பட்டான்.நன்றாக வளர்ந்திருந்ததால் மாடுகளை உடனே நல்ல விலையில் விற்க முடிந்தது.கண்ணீருடன் வீடு திரும்பியவனை, புன்னகையுடன் வரவேற்றாள் மனைவி.ஒன்றும் புரியாமல் நின்றவனிடம், 'கொல்லைப் புறத்தில் போய் பாருங்க...' என்றாள்.இரண்டு புதிய மாடுகள் அங்கு நின்றன. கேள்விக்குறியுடன் மனைவியை பார்த்தான்.'எப்பவும் இரண்டு மாடு தான் இருக்கும் என்பது தானே சாபம்... அப்ப அவற்றை வித்தாலும், அதே இடத்துக்கு இரண்டு புதிய மாடுகள் வந்துவிடும் அல்லவா...'அவள் கூறியதும் விபரம் புரிந்தது.அவற்றை சிறப்பாக பராமரித்து விற்றான். அந்த வருமானத்தில் மகிழ்வுடன் வாழ்ந்தான்.குழந்தைகளே... உழைப்பு எப்போதும் வாழ்க்கையை உயர்த்தும். - எம்.ஏ.நிவேதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !