உள்ளூர் செய்திகள்

கற்பதே நற்செயல்!

திருவண்ணாமலை, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 10ம் வகுப்பு படித்த போது, என் குடும்பம், மிகவும் வறுமையில் வாடியது. வகுப்புகள் முடிந்ததும், ஒரு செல்வந்தர் வீட்டு வேலைக்குச் செல்வேன்.துணி துவைப்பேன்; பாத்திரம் கழுவி தருவேன். ஏவும் அனைத்தையும் செய்து முடித்து, இரவு, 11:00 மணிக்கு தான் திரும்புவேன். காலை எழுந்ததும், பெற்றோருக்கு உதவியாக வேலைகளை முடித்த பின், பள்ளிக்கு செல்வேன். இந்த வழக்கத்தால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தேன்.என்னை அழைத்த ஆசிரியர், 'என்ன பிரச்னை...' என்று கேட்டார். கண்ணீர் வழிய நடந்ததை கூறினேன். என் பெற்றோரை அழைத்தவர், 'பெண் பிள்ளைகளுக்கு கல்வி தான் சொத்து; அது தான் வாழ்க்கையை முன்னேற்றும்...' என்று அறிவுரை கூறி அனுப்பினார்.அன்று முதல், என்னை வேலைக்கு அனுப்புவதை நிறுத்தினர். நன்றாக படித்து, 10ம் வகுப்பில், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து படித்து, நல்ல பணியில் சேர்ந்தேன்.என் வயது, 50; நிறைவாக வாழ்கிறேன். என்னை, வளம்பெற செய்த, அந்த ஆசிரியரை போற்றுகிறேன்.- வி.ராதிகா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !