உள்ளூர் செய்திகள்

இதயத்தில் ஒளி!

பாரம்பரியமும், தனித்துவமும் மிக்கது தீபாவளி பண்டிகை. புராண, இதிகாச கதைகளுடன் தொடர்புடையது. வாமன புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், பத்ம புராணம் மற்றும் துலா மகாத்மியம் போன்ற நுால்கள், தீபாவளியின் சிறப்பை கூறியுள்ளன.தீமை அழிந்து, உலகம் உய்வது தொடர்பான கதைகளை பதிவு செய்துள்ளன புராணங்கள்; ஆண்டு தோறும், அவற்றை நினைவுபடுத்தும் விதமாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது.ஒழுக்கத்துடன் வாழ்ந்தால், தீய எண்ணம் அகன்று, ஆன்ம ஜோதி ஒளிரும் என்பதே பண்டிகையின் தாத்பரியம்.வண்ணங்களுடன்...இந்துக்கள் மட்டுமின்றி, சமணர், பவுத்தர், சீக்கியர் என, பல மதத்தவரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். துவக்கத்தில், நெருப்பையும், நாகரிகம் வளர்ந்த போது, விளக்குகளையும் வழிபட்டு கொண்டாடப்படுகிறது. மொகலாய பேரரசர் அக்பர் காலத்தில், பட்டாசு, இனிப்புகளுடன் கொண்டாட்டம் களை கட்டத் துவங்கியது. இப்போது, புத்தாடை, பட்டாசு, இனிய விருந்து, நல்லெண்ண பரிமாற்றம் என, புதிய பரிணாமம் அடைந்துள்ளது.காதைப் பிளக்கும் வெடி, இரவை பகலாக்கும் வர்ண ஜாலம், மகிழ்வூட்டும் பட்டாசு என, தற்போதைய தீபாவளி, வண்ணங்களாலும், ஓசைகளாலும் நிறைந்துள்ளது. பண்டிகையின் முக்கிய அம்சம், உறவு, நட்புகளின் கூடல். நல்லெண்ணத்துடன், அன்பை, பகிரும் வாய்ப்பை நல்குகிறது.கண்மணிகளே... அன்பையும், மகிழ்ச்சியையும் அக்கம் பக்கத்தவருடன் பகிர்ந்து, பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !