உள்ளூர் செய்திகள்

அன்னைதெரசாவை போல...

சோழவந்தான் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த போது, தேர்வு சமயத்தில், நோய் வாய்ப்பட்டு, எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தேன். காலையில், தேர்வு நடைபெற்ற நேரத்தில், ஆசிரியை கண்ணகி, என் தந்தைக்கு போன் போட்டு, 'ஏன் முல்லைக்கரசி தேர்வு எழுத வரவில்லை...' என கேட்க, என் நிலைமையை கூறியிருக்கிறார் தந்தை.'ஒரு ஆட்டோவில் , இப்பொழுதே பள்ளிக்கு அழைத்து வாருங்கள்; நான் தேர்வு எழுத வைத்து விடுகிறேன்...' என கூற, உடனே, பள்ளிக்குச் சென்றோம்.என் வருகையை எதிர்பார்த்து, வாசலில் நின்றிருந்த ஆசிரியை, என்னை கை பிடித்து கூட்டிச் சென்று, அவரது அறையில் உட்கார வைத்து, எனக்காக பரீட்சை எழுத ஒரு மாணவியை உட்கார வைத்திருந்தார். ஆசிரியை, கேள்வியை வாசிக்க, நான் பதில் சொல்ல, அந்த மாணவி எழுதி முடித்தார்.தேர்வு முடிவுகள் வெளியானதில், நான் தேர்வில் வெற்றி பெற்றதைக் கண்டு, என் குடும்பத்தினரும், ஆசிரியை கண்ணகியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். நான் அன்னை தெரசாவை நேரில் கண்டதில்லை, அன்றைக்கு தான், என் ஆசிரியை உருவில் பார்த்து மகிழ்ந்தேன்.தற்போது, நான் அரசு பணியில் வெளியூரில் இருந்தாலும், என் ஊரான சோழவந்தானுக்கு வரும் போது, அப்பள்ளியைப் பார்த்தால், ஆசிரியை கண்ணகி நினைவு தான் வருகிறது.- ஆ.முல்லைக்கரசி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !