மாஜிக் மந்திரா! (10)
சென்றவாரம்: பட்சணக் கடையின் பின்பக்கத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து திருட திட்டமிட்டனர் மங்காத்தாவும், வடிவும். அந்த காரியத்திலிருந்து தடுக்க முயற்சித்தாள் மந்த்ரா. அவள் ஆணையை ஏற்ற குட்டிச் சாத்தான், ஜன்னலுக்கு வலைக் கம்பி மாட்டுவதற்கு பதில், மங்காத்தா, வடிவின் உடம்பிலேயே கம்பி வலையை வரைந்து விட்டது. இனி-மந்த்ராவின் உத்தரவை அது சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. 'ச்சீ! எப்போ நான் மந்திரம் போட்டாலும் தப்புத் தப்பா பலிக்கிறது!' என்று அலுத்துக் கொண்ட மந்த்ரா உடனே வேறு மந்திரம் போட்டாள்.'அவர்கள் மீதுள்ள கம்பிக் கோடுக ளெல்லாம் மறையணும். உள்ளே செல்ல முடியாத படி அவர்களை மாத்தணும்!' என்று கண்ணை மூடிக் கொண்டு ஜக்கம்மா வையும், பொம்மக்கா வையும் வேண்டிக் கொண்டாள். இந்த முறையும் குளறுபடிதான்!குவா குவா என்று சத்தம் கேட்டது! ஜன்னலின் கீழே மங்காத்தாவும், வடிவும் ஒரு வயதுக் குழந்தைகளாகி உட்கார்ந்திருந்தனர்.'அடக் கடவுளே!' என்று பதறிப் போனாள் மந்த்ரா.'அவர்கள் எண்ணத்தை மாத்தணும்னுதானே நினைச்சேன். இப்படி உருவத்தை மாத்தி குழந்தைகளாக்கிட்டியே குட்டிச் சாத்தான்!' என்று தவித்துப் போனாள். 'சரி, இவங்களை இங்கிருந்து அப்புறப் படுத்தலாம். முதல்ல இவங்களை பள்ளி கூடத்திலே கொண்டு போய் சேர்த்துடறேன். அதன் பிறகு வேறு என்ன செய்வது என்று யோசிக்கலாம்!' என்ற முடிவோடு இரு குழந்தைகளையும் கைக்கு ஒன்றாக தூக்கி கொண்டு பள்ளியை நோக்கி ஓடினாள். மங்காத்தா அகற்றியிருந்த பலகை வழியே உள்ளே புகுந்து, ஹாஸ்டல் அறையில் இரண்டு குழந்தைகளையும் கீழே விட்டாள். மூச்சு வாங்கிற்று மந்த்ராவுக்கு. ஆனாலும் பாதி இக்கட்டிலிருந்து விடுபட்டதில் நிம்மதி ஏற்பட்டது. வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டாள்.இதற்குள் குழந்தைகள் இரண்டும் மழலை யில் பிதற்றியபடி அறையில் அங்கும், இங்கும் தவழ்ந்து போக ஆரம்பித்தன. சட்டென்று குப்பைகளைப் போடும் கூடையை எடுத்து, குழந்தைகள் மீது கவிழ்த்து மூடினாள் மந்த்ரா அவர்கள் நகராதபடி. நல்லவேளை ஹாஸ்டல் அறையில் யாருமில்லை. அது அவள் அதிர்ஷ்டம்தான். அவர்கள் திரும்பி வருவதற்குள் மங்காத்தாவையும், வடிவையும் அவர்கள் சுய உருவத்துக்கு மாற்றியாக வேண்டும்.தாத்தாவிடம் தான் கற்ற மந்திரங்களையெல்லாம் நினைவுப்படுத்திக் கொண்டாள். சரியாக பலிக்கணுமே என்று தாத்தாவை வேண்டிக் கொண்டாள். தன் ஆட்காட்டிவிரலை பாம்பு விரல் மீது ஏற்றிக் கொண்டு கண்களை மூடியபடி ஜெபிக்கலானாள்.''ஏய்! வடிவு நாம் எப்படி இங்கு வந்தோம்? மிட்டாய் கடையின் பின் பக்க வாசலில் அல்லவா நின்று கொண்டிருந்தோம். என் தலையை கூடைக்குள் எப்போது நுழைத்துக் கொண்டேன்?'' என்ற மங்காத்தாவின் குரல் கேட்டது.''அதானே! என் தலையிலும் யார் இப்படிக் கூடையை கவிழ்த்தது? எடுக்க முடியலியே சனியன்!'' என்று ஆத்திரப்பட்டாள் வடிவு.'அப்பாடா! என் மாஜிக் நல்லபடியா பலித்து விட்டது. இருவரும் அவர்கள் பழைய உருவத்தை அடைந்து விட்டனர்' என்று மகிழ்ந்து போனாள் மந்த்ரா.மங்காத்தாவும், வடிவும் தங்கள் தலை களைக் கூடையிலிருந்து விடுவித்துக் கொள்ளத் திண்டாடுவதை கண்டு, 'க்ளூக்' கென்று சிரித்துக் கொண்டாள் மறைந்து நின்றபடி.ஆனால், மங்காத்தாவின் கூச்சல் ஹாஸ்டல் வார்டனை வரவழைத்து விட்டது.''என்ன கலாட்டா இங்கே?'' என்று கேட்டப்படி உள்ளே வந்த வார்டன், மங்காத்தாவும், வடிவும் குப்பைக் கூடையைத் தலையில் மாட்டிக் கொண்டு தடுமாறுவதைக் கண்டு, ''ஏய், இதென்னா கூத்து?'' என்று அதட்டினார்.''கூத்தில்ல மேடம் குழப்பம்! என்னன்னே புரியல்லே. எப்படி இந்தக் கூடையில என் தலை மாட்டிக் கிட்டுதுன்னும் தெரியல!'' என்று பரிதாபமாகக் கூறினாள் மங்காத்தா. தாங்கள் வெளியே போய் பட்சணக் கடையை சூறையாடி வயிறுமுட்டத் தின்னத் திட்ட மிட்டதைக் கூற மாட்டார்கள் என்பது மந்த்ராவுக்கு தெரியும். தன் மறைவிடத்தை விட்டு அவள் வெளிவரவில்லை.''அப்படியா சேதி? குழப்பமா இருக்கா? கூடைக்குள்ளே தலை எப்படிப் போச்சுன்னு புரியலேன்னா உங்களுக்கு உங்களோட சுய நினைவே இல்லேன்னு அர்த்தம். இது ரொம்ப அபாயமான வியாதி! வாங்க என் அறைக்கு. நல்ல மருந்து இருக்கு தரேன்!'' என்று கூறிய வார்டன் இருவர் தலையிலும் கவிழ்க்கப் பட்டிருந்த கூடையை லாவகமாக அகற்றி இருவரையும் தம் அறைக்கு அழைத்துப் போனார்.அங்கு அவ்விருவருக்கும் அவர்கள் திமிரத் திமிர, குமட்டக் குமட்ட அமுக்கிப்பிடித்து, பெரிய ஸ்பூனில் வழிய வழிய விளக்கெண்ணையை வாய்க்குள் ஊற்றினார். ''குழப்பம், மயக்கமெல்லாம் காலையில் சரியாப் போயிடும். உடல் கலகலப்பாக இருக்கும் போங்க!'' என்றாள். குபுக்கென்று வாந்தி வராதிருக்க வாயை மூடிக்கொண்டு இருவரும் பாத்ரூமிற்குள் ஓடினர்.பட்சணக் கடைக்குள் புகுந்து திருட்டுத் தனமாக வயிறு முட்ட ஒரு பிடி பிடிக்கத் திட்ட மிட்ட மங்காத்தா, வடிவின் நிலையை நினைத்து மந்த்ரா சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த போது, வாலை நிமிர்த்தி உடலை வளைத்து சோம்பல் முறித்தபடி கருப்புப் பூனை அவள் அருகில் வந்தது.''சுகமா ஒரு தூக்கம் போட்டேன். மந்த்ராக்குட்டி, உடம்பு அசதியெல்லாம் போச்சு!'' என்ற கேசவன் தாத்தா, பேத்தி யோசனையுடன் இருப்பதைப் பார்த்து, ''என்ன சிந்தனை பலமாக இருக்கு? பெரிய மாஜிக் காரியா வரது எப்போன்னு கவலைப் படறியா? கவலையே வேண்டாம். ஒருநாள் நீ பெரிய மாஜிக் நிபுணியாகப்போறே... என் வித்தை யெல்லாம் உனக்குக் கத்துக் கொடுத்துடறேன்!'' என்றது பூனை.''இப்ப என் மாஜிக் சரியாகவே பலிச்சுடுத்து தாத்தா. வர வர நான் போடும் மந்திரங்கள் பலிக்க ஆரம்பிக்கின்றன...'' என்றாள் மந்த்ரா நம்பிக்கையோடு.அன்று கணித வகுப்பு முடிந்ததும், டீச்சர் ஒரு அறிவிப்பு செய்தார்.''எல்லாரும் ஜிம்னாசியம் (உடற்பயிற்சிடக் கூடம்) செல்லுங்கள். அங்கே உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஒன்று காத்திருக்கிறது!'' என்றார்.மாணவியர் உற்சாகப்பட்டனர். மங்காத்தா வைத் தவிர. மங்காத்தா ஒரு சோம்பேறி. அவளுக்கு மூளை உழைப்பும் பிடிக்காது, உடல் உழைப்பும் ஒத்துக் கொள்ளாது. அடங்காப் பிடாரியான அவள் எதற்கும் கட்டுப்படாதவள். ஜிம்னாசியம் போய் பல்வேறு உடல்பயிற்சிகளில் ஈடுபடுவதை, 'போர்' என்று நினைப்பவள். ஆகவே, அங்கு போகாதிருப்பதற்கு வழி தேடலானாள்.மாணவிகள் ஜிம்னாசியம் போகுமுன் அதற்கான உடைமாற்றிக் கொள்ளுவர். உடற் பயிற்சிக்கான உடை, காலணி முதலிய சாதனங் களை வைத்துக் கொள்ள ஒவ்வொரு மாணவிக்கும் தனித்தனியான தட்டுக்களைக் கொண்ட நீண்ட பீரோ சுவரில் பதிக்கப்பட்டி ருக்கும். ஒவ்வொரு தடுப்புக்கும் கதவும், பூட்டு சாவியும் உண்டு. உடற்பயிற்சியின் போது அணியும் உடை காலணிகளை தன் பகுதியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு ''என் ஜிம்னாஸ்டிக் பொருள்களைக் காணவில்லை!'' என்று கூப்பாடு போட்டாள் மங்காத்தா.ஜிம்னாஸ்டிக்கில் ஈடுபட ஆங்காங்கே உடையணிந்தபடியும், ஷூ அணிந்தபடியும் இருந்தனர் மாணவியர். ஜிம்னாஸ்டிக் ஆசிரியை எலிசபெத் காத்திருந்தார். மங்காத்தாவின் கூச்சல் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தது. மந்த்ராவும் அதைக் கேட்டாள். மங்காத்தாவைப் பற்றி முழுவதும் புரிந்து கொள்ளாத மந்த்ரா, அவளுக்காக பரிதாபப்பட்டாள்.'பாவம் மங்காத்தா. முரட்டுப் பெண்தான். ஆனால், அவள் தன் உடைமைகளை இழப்ப தென்றால் வேதனை தான். காணாமல் போன அவள் உடைகளை என் மாஜிக்கினால் வர வழைத்துத் தருகிறேன்!' என்று தீர்மானித்தவள் உடனே செயல்படவும் செய்தாள். குட்டிச் சாத்தானைக் கூப்பிட்டாள். மங்காத்தாவின் உடைமைகளை எங்கிருந்தாலும் கொண்டு வரும்படி கட்டளையிட்டாள். அடுத்த வினாடி.மங்காத்தாவின் மீது அவளுடைய ஸ்போர்ட்ஸ் உடைகளும், ஷூக்களும், சாக்ஸ்களும் பொத்பொத்தென்று எங்கிருந்தோ மாயமாக வந்து அவள் தலையிலும், முகத்திலும், உடலிலும் வந்து விழுந்தன.- மாஜிக் தொடரும்.