உள்ளூர் செய்திகள்

மாஜிக் மந்த்ரா! (18)

சென்றவாரம்: மந்த்ரா அருங்காட்சியத்திலுள்ள பூனைக்கு உயிர் வரும்படி போட்ட மந்திரம் யானைக்கு பலித்து உயிரூட்டி விட்டது. அதை சமாளிக்க பறக்கும் துடைப்பத்தை ஏவி விட்டாள். இனி-''ஏய், உள்ளேயிருந்து துடைப்பக் கட்டை வெளியே பறந்து போகுது... பொம்மை யானை உயிர் பெற்று அட்டகாசம் செய்யுது... இது ஏதோ சூனியக்காரியோட காரியம்... மியூசியத் திலே செத்த மிருகங்களோட ஆவிகள் அட்டகாசம் செய்யுது போலிருக்கு. நாம் இங்கிருந்து ஓடிப் போயிடலாம் சீக்கிரம்...!'' என்று குழறினான் ஒருவன்.''சரி சரி.... எப்படியோ அந்தப் பொண்ணு இந்த மூட்டையை நம்ம கிட்ட வீசிட்டா, இதிலே நல்ல சில்லறை பண்ணலாம் கிளம்பு!'' என்று வண்டியை உதைத்தான்.அப்போது மாமத் கம்பளி யானையின் துதிக்கை ஜன்னலுக்கு வெளியே நீண்டது.''ஊவ்!'' என்று பயங்கரமாக ஊதியது. அதிலிருந்து வெளிப்பட்ட காற்று, புயல் போல பயங்கரமான வேகத்துடன் வீசியது. பையன்கள் இருவரும் தங்கள் பைக்குடன் பஞ்சு போல ஆகாயத்தில் பறந்தனர்.''ஐயோ அந்த யானை! உடலெல்லாம் ரோமத்தோட அந்த பயங்கர யானை மறுபடியும்...'' என்று ஆகாயத்தில் பறந்து கொண்டே பையன்கள் கத்தினர்.யானை ஊதிய காற்றைக் கிழித்துக் கொண்டு துடைப்பக் கோலில் அமர்ந்தபடி கருப்புப் பூனையும் அதே ஜன்னல் வழியே வந்து குதித்தது. பறந்து சென்ற புரூம் ஸ்டிக், மந்த்ராவின் தாத்தாவை அழைத்து வந்து விட்டது.''என்ன மந்த்ராக்குட்டி... என்ன ஆச்சு... என்னை அழைத்து வருமாறு இந்த மந்திரத் துடைப்பக் கோலை ஏன் அனுப்பினே?'' என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தார் தாத்தா.''தாத்தா! வந்துட் டீங்களா? நல்லவேளை. உடனே நிலைமையை சீர் செய்யுங்க. இங்கே என்னென்னவோ நடந்துப் போச்சு. ஆனா, எதுவுமே நடக்காதது போல யாருக்கும் எதுவுமே ஞாபகமில்லாமல் அரை மணிக்கு முன்னே எப்படி இருந்தாங்களோ அப்படி எல்லாத்தையும் எல்லாரையும் சரி செய்யணும் தாத்தா!'' என்று கேட்டுக் கொண்டாள் மந்த்ரா.கருப்புப் பூனையும் தன் மந்திர சக்தியினால் நடந்ததைப் புரிந்து கொண்டது. மந்த்ராவின் விருப்பப்படியே மந்திரம் போட்டார் தாத்தா.மாமத் கம்பளி யானை, உயிரற்ற பொம்மையாக அதன் பீடத்தில் நின்றது.மங்காத்தாவின் கைக் குட்டை மூட்டையிலிருந்த பொருள்கள் தானாக அதன் இடத்தில் போய் உட்கார்ந்தன. சிப்பிகள் போய், அங்கு முத்துமாலை பளபளத்தது.எலிசபெத் டீச்சர் குரல் கொடுத்தார்.''மூலைக்கு ஒருத்தராப் போனா எப்படி? எல்லாரும் சேர்ந்து வாங்க!'' மாணவிகள் கூட்டத்தில் மங்காத்தாவும் இருந்தாள். வடிவும் கூட. யாருக்குமே சற்று முன் நடந்த களேபரங்கள் எதுவும் நினைவில்லை.''என் தாத்தான்னா தாத்தா தான்!'' என்றாள் மந்த்ரா கவலை நீங்கியவளாக.மறுநாள்-மந்த்ரா தன் தாத்தாவுடன் பள்ளிக் கூடத் தோட்டத்து பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். காலை வெயிலின் கதகதப்பு கருப்புப் பூனைக்கு இதமாக இருந்தது. அன்று மந்த்ராவுக்கு திடீரென்று ஓர் ஆசை ஏற்பட்டது.''தாத்தா! டாபி, சாக்லேட், கேண்டி எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று. அதன் சுவையெல்லாம் மறந்தே போய் விட்டது. ஊரில் இருக்கும் போது ராவுத்தர் கடைக்குப் போய், கண்ணாடி ஜாடியில் நானே கைவிட்டு அள்ளிக் கொள்ளுவேன். ம்... இங்கு வந்ததிலிருந்து வெளியே கூடப் போக முடிவதில்லை.''தாத்தா... தாத்தா! எனக்குத் கொஞ்சம் சாக்லேட் வரவழைத்துக் கொடுங்களேன்!'' என்று கெஞ்சினாள் மந்த்ரா.''நீ இப்போ பிரமாதமா மாஜிக் செய்யக் கத்துக்கிட்டியே மந்த்ரா குட்டி! சாக்லேட் வர வழைக்கிறது தானா கஷ்டம் உனக்கு? இந்தக் காலைக் குளிருக்கு இந்த வெயில் ரொம்ப சுகமாயிருக்கு என்னை டிஸ்டர்ப் பண்ணாதே... வேண்டியதை நீயே வரவழைத்துக் கொள்!'' என்று சுவாரஸ்யமாக தன் உடலை நக்கி சுத்தம் செய்து கொள்ளுவதில் மூழ்கியது பூனை.''ஆமா... பிரமாதமா மாஜிக் பண்றேனே. பூனையைக் கூப்பிட்டா யானை வருது! நான் சாக்லேட் கேட்டா சாக்கட்டி வரும்! இந்தக் குட்டிச் சாத்தான் நான் சொன்னபடி செய்ய மாட்டேங்குது. அதைக் கொஞ்சம் அதட்டி வையுங்க...'' என்று கூறி, சாக்லேட் வரவழைக்க மாஜிக் செய்யலானாள்.''ஓம்... ஹிரீம்... க்ரீம்... லாம்... லூம்! ஜெய் காளிதுர்க்கா!'' கண்களை மூடிக்கெண்டு கருத்தோடு மந்திரங்களை உச்சரிக்கலானாள் மந்த்ரா.அடுத்த வினாடி, ம்...ம்... மியாவ்! என்று கருப்புப் பூனை மந்த்ராவின் தாத்தா கத்தியது. அதன் வாலில் ஒரு பெரிய கண்ணாடி ஜாடி நிறைய சாக்லேட் பொத்தென்று விழுமானால் பூனைக்கு வலிக்காதா? அம்மாடி எத்தனை பெரிய ஜாடி! பெரிய கடையில் விளம்பரத்துக்கு வைத்திருப்பார்களே பெரிய கண்ணாடி ஜாடி அது!''ஐய்! எத்தனை டாபி... சாக்லேட்!'' என்று குதூகலப்பட்ட மந்த்ரா உடனே, ''சாரி கிராண்ட்பா... உங்க வால் மீது இவ்வளவு கனமான ஜாடி விழுந்ததுக்காக நான் ரொம்ப வேதனைப்படறேன். நான் சொல்லல்லே. அந்த குட்டிச் சாத்தான் சொன்னதைக் கேட்கறதில்லேன்னு. அதோட குறும்புதான் இது. நீங்க அதை அதட்டப் போறீங்களோன்னு முன் கூட்டியே தன் கோபத்தை இப்படி காண்பித்து விட்டது! '' என்றாள்.தாத்தா தன் வாலைத் தடவி விட்டுக் கொண்டிருந்தார் வலிக்கு இதமளிக்க. மந்த்ரா அந்தப் பெரிய கண்ணாடி ஜாடியை அணைத்துக் கொண்டு, 'இவ்வளவு சாக்லேட்டுகளையும் யார் கண்ணிலும் படாமல் எங்கே மறைத்து வைப்பது? என்று யோசனையில் மூழ்கி இருந்தாள். அப்போது-யார் பார்வையில் படக் கூடாதோ அவர் பார்வையில் அந்த சாக்லேட் ஜாடி பட்டுவிட்டது. ஆமாம், மங்காத்தாவும், வடிவும் அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்தனர். மரத்தடியில் பூனையோடு மந்த்ரா தனியே உட்கார்ந்திருப்பதையும் பார்த்து விட்டனர். அவள் அணைத்துக் கொண்டிருந்த பெரிய சாக்லேட் ஜாடியும் அவர்களைக் கவர்ந்திழுத்தது!''மங்கா அதோ பாத்தியா, அந்த சுண்டெலிப் பொண்ணு மந்த்ரா எவ்வளவு பெரிய ஜாடி வைத்திருக்கா! அது நிறைய ய்ய்யோ! எவ்வளவு சாக்லேட்!'' என்றாள் வடிவு வாயில் நீர் ஒழுக.''ஏய்... உனக்கு இவ்வளவு சாக்லேட் ஏது? அதுவும் ஜாடியோட... மரியாதையா அதை இப்படி எங்கிட்டக் கொடு... ம்!'' என்று அதிகாரத்தோடு அதட்டினாள் மங்காத்தா.மந்த்ரா அருகே, அவள் அமர்ந்திருந்த பெஞ்சின் சாய்மானப் பகுதி மீது உட்கார்ந்திருந்த பூனை தாத்தா அவள் காதோடு கூறியது.''நீ ஏதாவது மறுபடி தத்துப் பித்துன்னு மாஜிக் செய்ய வேண்டாம் .அவர்களை நான் கவனிச்சுக்கறேன், நீ பேசாம இரு!'' என்றார்.அவள் தாத்தாவின் பேச்சு அவளுக்கு மட்டுமே கேட்கும். பிறருக்குக் கேட்காது.கருப்புப் பூனை தன் உளிப்பற்களைக் காட்டி சீறியது.''ஏய் மங்கா! இந்த பூனை என்னமா சீறுது! அதன் கண்களும், பல்லும் பயமாக இருக்குடீ!'' என்று குழறினாள் வடிவு. மங்காவும் பார்த்தாள் பூனையின் கோபத்தை. ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு உடலை வளைத்தபடி... அதன் கால் நகங்கள் நீண்டும், சுருங்கியும் கூர்மையாக பளபளப்பாக... மங்காத்தாவும், வடிவும் குதிகால் பிடரியில் பட ஓடினர். மந்த்ராவிடம் வம்பு செய்த மங்காத்தாவையும். வடிவையும் சீறி சிலிர்த்து விரட்டினார் தாத்தா கேசவன் குட்டி. பீதி அடைந்து ஓடிய அவர்களை வெகுதூரம் துரத்தி சென்றது கருப்பு பூனை.பிறகு சாவகாசமாக சாதுப் பூனையாக மந்த்ராவிடம் வந்தது. மந்த்ரா கையில் இப்போது ஒரு சின்ன முடிப்புதான் இருந்தது. பெரிய சாக்லேட் ஜாடியைக் காணவில்லை. எங்கே போயிற்று அத்தனை பெரிய ஜாடியும், சாக்லேட்களும், டாபிகளும் என்று மந்த்ரா வியந்து கொண்டிருந்தாள்.''என்ன அப்படி திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கே!'' என்று கேட்டார் தாத்தா பூனை.''நான்தான் அவற்றை மறையச் செய்தேன். அவ்வளவு சாக்லேட்டையும் நீ சாப்பிட்டால் உன் உடம்புக்கு ஆகாது. கையில் உள்ள அந்த சின்ன மூட்டையில் உள்ளது போதும். தனிமையில் சுவைத்து ரசி. அந்த இரண்டு குட்டிகளையும் விரட்டி ஓட்டிட்டேன்!''''சரி கிராண்ட் பா. நீங்கள் சொன்னால் சரி. எனக்கு எது நன்மை என்று உங்களுக்குத் தானே தெரியும்!'' என்று கூறி அந்த சின்ன மூட்டை சாக்லேட்டில் திருப்தி அடைந்தாள் மந்த்ரா.கருப்புப் பூனையினால் விரட்டப்பட்ட மங்காத்தாவும், வடிவும் ஓடி, ஓடிக் களைத்துப் போய், மேல் மூச்சு வாங்க ஒரு இடத்தில் நின்றனர்.''என்ன பயங்கரம்.அந்தப் பூனை. பூனையா பிசாசா? கன்னங்கரேல்னு! அந்த எலிக்குட்டி மந்த்ராவுக்கு அது பாதுகாப்பா இருக்கும் போலிருக்கு. பள்ளிக் கூடத்திலே யாரும் நாய், பூனை, கிளி ஏதும் வளர்க்கக் கூடாது. இவள் அந்த கருப்புப் பூனையை வளர்க்கிறாளா? அவகிட்ட வம்பு பண்ணும் போது அதுக்கு என்னமாக் கோபம் வந்தது பார்த்தியா?'' என்று புலம்பினாள் வடிவு.''விட்டுத் தொலைடி அதை!'' அலுத்துக் கொண்டாள் மங்கா.தோல்வியை அவளால் ஜீரணிக்க முடியாது.''அதோ பார் ரங்கன் தன் தள்ளுவண்டியோட வரான். அவன் இந்த நாய், பூனைகளை அடக்கி வழிக்குக் கொண்டு வருவதிலே எக்ஸ்பர்ட். வா அவன் உதவியை நாடலாம்...'' என்று வடிவுடன் ரங்கனின் வண்டி அருகில் சென்றாள்.-மாஜிக் தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !