உள்ளூர் செய்திகள்

மாய விழிகள்! (13)

முன்கதை: தோப்பு கிணற்றில் தண்ணீர் குடித்த சிறுமியர் தியா, அனு வினோத சக்தி பெற்றனர். கிராமத்துக்கு சென்ற வழியில் மர்ம வேனை பார்த்ததும் துப்பு துலக்க முயன்றனர். இதைக் கண்டு துரத்தி வந்தவர்களிடம் இருந்து தப்பினர். இனி -தியாவும், அனுவும் ஒரு கிளைப்பாதையை தேர்ந்தெடுத்து நடந்தனர்.''சீக்கிரம் போய் ஊர் பூசாரியிடம் தகவல் சொல்ல வேண்டும் அக்கா. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும், வேனில் இருக்கும் தோழியருக்கு ஆபத்து...''''இதற்கு மேல் வேகமாக நடக்க முடியவில்லை. இதற்கே மூச்சு வாங்குகிறது...''''எதற்காக அவர்களை இங்கே கடத்தி வந்திருப்பர்...'' ''ஊகிக்க முடியவில்லை அனு. உடல் உறுப்புகளை எடுப்பதற்காக இருக்குமோ அல்லது வெளி மாநிலங்களுக்கு விற்பதற்காக இருக்குமோ...''''நினைக்கும் போதே பயமாயிருக்கு...''''எப்படியானாலும் காப்பாற்றியாக வேண்டும்...''இருவருமே உறுதி பூண்டனர். எச்சரிக்கையாக சுற்றுப்புறத்தை கவனித்தபடி நடந்தனர்.''அக்கா... அதோ புகை தெரிகிறதே... அது தான் எங்கள் குடியிருப்பு...'' என்றாள் அனு.''பரவாயில்லை பக்கத்தில் வந்து விட்டோம். நீண்ட தொலைவு இருக்கும் என்று பயந்து விட்டேன்...''''நான் தான் சொன்னேனே, பக்கம் தான் என்று...''''முதுகில் இருக்கும் மூட்டையை முதலில் இறக்கி வைக்க வேண்டும். இதை துாக்கி திரிவது சிரமமாக இருக்கிறது அனு...''''பூசாரியை பார்க்க குறிஞ்சியம்மா கோவிலுக்கு போக வேண்டும். வழியில், எங்கள் வீட்டில் பைகளை வைக்கலாம்...'' என்றாள் அனு.''வேனில் பிடித்து வைத்திருப்பவர்களை எங்கே அழைத்து செல்வர்...''''இங்கே வனத்துறைக்கு சொந்தமான பயன்படுத்தாத குடியிருப்பு ஒன்று இருக்கிறது. ஒருவேளை அங்கே அழைத்து போவர் என்று நினைக்கிறேன். அங்கே தான் நிறைய பேர் தங்க வசதி இருக்கிறது...''''நீ சொல்லும் குவாட்டர்சில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை. எல்லாரையும் சமாளித்து தான் இவர்களை மீட்க வேண்டும்...''''ஆமாம் அக்கா... முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நிதானமாக யோசித்து செயல்பட முடிகிறது. உன்னோடு சேர்ந்து எனக்கும் நிதானம் வந்து விட்டது...'' அந்த சூழ்நிலையிலும் சிரித்த அனு, திடீரென நினைவு வந்தவளாக, ''அக்கா ஒரு விஷயம் கவனித்தாயா...'' என்றாள்.''என்ன... சொல்லு...''''நாம் நகர்ந்த பின் வேன் சத்தம் கேட்கவே இல்லை...''''ஒருவேளை அவர்கள் வேறு ஏதாவது வழியில் போயிருந்தால்...'' என்றாள் தியா.''வாய்ப்பு இல்லை அக்கா... லாரி, வேன் போகும் அளவுக்கு அகலமான பாதை இந்த ஒன்றே ஒன்று தான். அதன் வழியாகப் போனால், நிச்சயமாக சத்தம் நமக்கு கேட்கும். மற்றதெல்லாம் ஒத்தையடி பாதை தான்...''''அப்படியானால், துரத்திய இருவரும் இன்னும் அந்த வேனை சென்று அடையவில்லை என்று நினைக்கிறேன்...''''ஆமா அக்கா... காட்டுக்குள் திசை தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பர்...''''வேன் இருக்கும் இடம் இங்கிருந்து எவ்வளவு துாரம் இருக்கும்...''''அதிகபட்சம் அரை கி.மீ., துாரம் இருக்கலாம்...''''அந்த வேனை பார்க்க முடியுமா அனு...''''ஏதாவது மேடான பகுதியில் ஏறினால் பார்க்கலாம்; ஏன் கேட்கிறாய்...''''எனக்கு ஒரு யோசனை... ஒருவேளை அவர்கள் வேனுக்கு வரவில்லை என்றால், திசை திருப்பி, இன்னும் சுற்ற விடலாம். நமக்கு மேலும் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்...'' என்ற தியா, தன் திட்டத்தை விவரித்தாள்.சிறிது துாரம் நடந்தவர்கள் மேடான பகுதிக்கு வந்தனர். அங்கிருந்து பார்த்த போது, அந்த வேன் நிற்பது மரங்களுக்கு இடையில தெரிந்தது.''வேன் இன்னும் துல்லியமாக தெரியும் இடத்திற்கு போக முடியுமா அனு...''''இப்படி வா அக்கா... இந்த பக்கம் வந்தால், முழு வியூ கிடைக்கும்...''தியா அங்கு நகர்ந்த போது வேனை பார்க்க முடிந்தது.வேன் இருக்கும் திசை நோக்கி, செல்வாவும், வீராவும் வருவது தெரிந்தது. தயாரானாள் தியா.''அனு தயாரா... அவர்கள் உன் பார்வைக்கு தெரிகின்றனரா...''''ஆமாக்கா... சாலையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்...''''அனு... நீ அவர்கள் ரெண்டு பேரையும் பார்த்தபடியே இரு. அவர்கள் மரங்கள் இருக்கும் பகுதியை விட்டு, சாலையை நெருங்கும் போது எனக்கு சொல்... நான் வேனை, அவர்கள் பார்வையிலிருந்து மறைய வைத்து விடுகிறேன்...''''சரி அக்கா...'' என்ற அனு, அவர்களின் நடமாட்டத்தை கவனித்தாள். வேன், பார்வைக்கு நன்றாக தெரியும் வகையில் நின்று கொண்டிருந்தாள் தியா.''அக்கா... அவங்க ரெண்டு பேரும் சாலைக்கு பக்கமா வந்துட்டாங்க...''அனு சொன்னதும், செருப்பை கழற்றி விட்டு தரையில் நின்றபடி வேனை உற்று பார்க்க ஆரம்பித்தாள் தியா.அவள் கண்களுக்கு முன் புகை மூட்டம் தோன்றியது. சில நொடிகளில் வேன் அவள் பார்வைக்கு மங்கலாகியது.இது நிகழ்ந்த அடுத்த சில நொடிகளில், வீராவும், செல்வாவும் சாலைக்கு வந்திருந்தனர்.வேன் இருப்பது அவர்கள் கண்ணுக்கு புலப்படாததால், சுற்றும் முற்றும் பார்த்தனர். அனுவும் அந்த வேனைப் பார்த்தாள். அவள் கண்களுக்கும் அது மறைந்து விட்டது. வீராவும், செல்வாவும் ஒருவருக்கு ஒருவர் ஏதோ பேசி கொள்வது அனுவின் கண்களுக்கு தெரிந்தது.''அக்கா... நீ சொன்ன மாதிரி அவங்க கண்ணுக்கு வேன் தெரியல... சுத்தி சுத்தி பார்த்துகிட்டு இருக்காங்க. இப்போ ரெண்டு பேரும் தங்களுக்குள்ள பேசிக்கிறாங்க...'' என்று, 'ரன்னிங் கமெண்டரி' கொடுத்து கொண்டிருந்தாள் அனு.அதை காதில் வாங்கியபடியே, கண் சிமிட்டாமல் வேனை பார்த்தபடியே இருந்தாள் தியா.வேன் கண்ணுக்கு தெரியாததால் குழப்பம் அடைந்த வீராவும், செல்வாவும் மீண்டும் தங்கள் போனில் லொகேஷனை பார்த்து குழப்பமடைந்து, அந்த மண் சாலையில் நடக்க ஆரம்பித்தனர்.''அக்கா... வேற எங்கேயோ போறாங்க... இன்னும் சிறிது துாரம் போனதும், இந்த பாதை வளைந்து திரும்பி விடும். அதில் திரும்பி நடந்தால், வேன் இவர்கள் பார்வையில் இருந்து மறைந்து விடும்...''''ம்...''இமைக்காமல் தொடர்ந்து வேனை உற்று பார்த்தாள் தியா.சாலையின் வளைவிற்கு வந்தவர்கள் வேன் இருந்த திசையை மீண்டும் திரும்பி பார்த்து, அது கண்ணுக்கு புலப்படாததால் திருப்பத்தில் நடந்தனர்.''அக்கா... அவங்க திரும்பி போயிட்டாங்க...'' அனு உற்சாகமாய் சொன்னதும், கண் சிமிட்டினாள் தியா. வேன் மீண்டும் பார்வைக்கு தெரிந்தது.- தொடரும்...- ஜே.டி.ஆர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !