மினி ஸ்டோரி - நல்ல வழிகாட்டி தேவை!
பார்வையற்ற நான்கு பிச்சைக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். 'காசிக்கு புனிதப் பயணம் சென்று இறைவனை வழிபட வேண்டும்' என்று முடிவு செய்தனர். தட்டுத் தடுமாறியபடி நடந்த அவர்கள் ஒரு சத்திரத்தை அடைந்தனர்.''சிறிது தொலைவு வருவதற்கே இவ்வளவு துன்பப்பட்டு விட்டோமே. காசி எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படி அங்கே போகப் போகிறோம்?'' என்று வருத்தத்துடன் சொன்னான் அவர்களில் ஒருவன்.மற்றவர்களும், ''ஆமாம். என்ன செய்வது?'' என்று கேட்டனர்.அந்தச் சத்திரத்தில் இருந்த இன்னொரு பார்வையற்ற பிச்சைக்காரன், அவர்கள் பேசியதைக் கேட்டான்.அவர்களிடம், ''நண்பர்களே! நானும் உங்களைப் போலக் குருடன் தான். புனிதத் தலமான காசியைப் பற்றி நானும் கேள்விப்பட்டு உள்ளேன். அங்கே செல்வதற்கான வழியைப் பற்றி விளக்கமாகப் பலர் என்னிடம் சொல்லி இருக்கின்றனர். காசி செல்லும் வழி என் மனக் கண்ணில் பசுமையாகப் படிந்து உள்ளது. நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன். எந்தத் தடையும் இன்றி நாம் காசியை அடைய முடியும்,'' என்று பெருமையுடன் சொன்னான்.அவன் பேச்சை நம்பிய மற்றவர்கள், ''நீ முன்னே வழி காட்டிச் செல்வதாக வைத்துக் கொள்வோம். நாங்கள் எப்படி உன்னைத் தொடர்ந்து வருவது?'' என்று கேட்டனர்.''ஒரு நீண்ட கயிற்றால் உங்கள் நால்வரையும் வரிசையாகக் கட்டுகிறேன். அதன் முனையை நான் கட்டிக் கொள்கிறேன். நான் நடக்க நடக்க, நீங்களும் என்னைத் தொடர்ந்து வரலாம்,'' என்றான்.அவன் திட்டப்படியே, அவர்கள் நால்வரும் கயிற்றால் கட்டிக் கொண்டனர். அந்தக் கயிற்றின் முனையைக் கட்டிக் கொண்ட அவன் நடக்கத் தொடங்கினான்.முன்னால் சென்ற அவனுக்கு, வழியில் இருந்த பெரிய மடு தெரியவில்லை. தட்டுத் தடுமாறியபடி நடந்த அவன், அந்த மடுவில் விழுந்தான்.கயிற்றால் கட்டப்பட்டு இருந்த நால்வராலும், அந்த ஆபத்திலிருந்து தப்ப முடியவில்லை. மடுவில் விழுந்த நால்வரும், அந்தக் குருடனுடன் சேர்ந்து நீரில் மூழ்கி இறந்தனர்.***