உள்ளூர் செய்திகள்

ஆவிகள் இல்லையடி பாப்பா! (3)

இதுவரை: பெரிய ராஜா பற்றிய உண்மைகளை சொல்ல, வாய் திறந்த ராமுவின் அப்பாவுக்கு பேச்சு வரவில்லை. இனி -மருத்துவர் அப்பாஸ், ராமுவின் தந்தையை சோதனை செய்தார்.''ராமு... உன் அப்பாவுக்கு இதய துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த அழுத்தம் எல்லாம் சரியாக தானே இருக்கு. அப்படின்னா, இது உடல் வியாதியினால் ஏற்பட்ட பிரச்னை அல்ல; மனம் சம்பந்தப்பட்ட பிரச்னை தான். எனக்கு தெரிந்த மனோ தத்துவ வைத்தியர் உள்ளார். அவரது போன் நம்பரும், கடிதமும் கொடுக்கிறேன். நீ உடனே அப்பாவை அழைத்துச் செல்.. அநேகமா, விரைவில் சரியாகிடும்,'' என்றார்.''டாக்டர்... அப்ப நான் சொன்ன, அந்த பெரிய ராஜாவின் ஆவி தான், அப்படி செய்திருக்குமோ,'' என்றான். ''என்ன படிக்கிற ராமு...'' ''பத்தாம் வகுப்பு படிக்கிறேன் டாக்டர்...''''பத்தாம் வகுப்பு மாணவனான நீ, இந்த ஆவி சமாசாரத்தை நம்புறியா...'' என்று உரக்கச் சிரித்தார்.''ஆனா, இந்த ரத்த கசிவு...'' என்று மெல்ல இழுத்தான். ''வா... அந்த கடிகாரத்தை காட்டு...'' என்று அழைத்துச் சென்றார், டாக்டர்.''அதோ பாருங்க... அந்த முள், 12:00 மணிக்கு மேலே ரத்த கறை...''''ஹா... ஹா...'' என்று மிகுந்த கேலியோடு சிரித்தார்.''தம்பி ராமு... பயம் இருக்க வேண்டியது தான். ஒரு பாம்பு அல்லது கருந்தேள பார்த்தா, பயம் வரத்தான் செய்யும். ஆனா, இல்லாத ஒண்ணை, நீயா கற்பனை செய்து, அதுக்கு பயப்படறது, நீ படிச்ச படிப்புக்கே அவமானம் இல்லியா... இதோ பார்...'' என்று, அவனை அருகில் அழைத்தார், டாக்டர்.அவனும், தாயும், பயந்தபடியே சென்றனர்.''கடிகாரத்தை நல்லாபாருங்கள்...'' என்றார், டாக்டர்.''ஒரு பல்லி சரியாக, 12:00 மணிக்கு முள் நகரும் போது, சிக்கியுள்ளது; அதில் இருந்து தான், ரத்தம் கசிந்துள்ளது. இதைப் பார்த்து தான், ரத்தம் என்று பயந்திருக்கிறாய்...'' என்று காட்டியதும், ராமுவுக்கு உண்மையிலேயே, அவமானமாக இருந்தது.ஆனாலும், அவனிடம் இன்னும் சில கேள்விகள் இருந்தன.'' நான் பூஜை அறைக்குச் சென்றப்ப, ஒரு கரம் ஆவி போல் வந்து, என்னை இறுகிப்பிடித்ததே... அதை, நான் அனுபவத்தில் உணர்ந்தேனே... அது பொய்யா...'' என்றான். மீண்டும், உரக்கச் சிரித்தார். ''தம்பி... இத மனபிரம்மை என்று தான் சொல்ல வேண்டும்; நீ கனவு கண்டதாக சொன்னாய் அல்லவா... அப்போ, உன் தாய், கடவுள் படத்துக்கு சூடம் காட்ட, மணி அடித்துச் சென்றதாக சொன்னாய்...''''ஆம் டாக்டர்...''''அதையே தான், நீயும் பரீட்சித்து பார்த்து இருக்கிறாய்... ஆனால், அந்த மணிக்கு அந்த ஆவி பயந்ததாக நீ கூறினாய். அப்படி என்றால், என்ன தெரிகிறது... உன் மனதில், உன்னை அறியாமல், ஒரு எண்ணம் உதித்தது... அந்த மணியை, நாம் வேகமாக எடுக்க வேண்டும். காரணம், அந்த பெரிய ராஜா, உன்னை எடுக்க விடாமல் செய்து விடுவார் என்று அஞ்சி இருக்கிறாய்... அதனால், வேக வேகமாக ஓடியிருக்கிறாய்... சரியா...'' என்றார் டாக்டர்.''ஆம்... டாக்டர் அப்படித்தான் ஓடினேன்!''''அப்போ நீயாக கற்பனை செய்து , யாரோ கையைப் பிடித்து இறுக்குவதாக நினைத்து, காலை நுழைத்து, மணியை அடித்து இருக்கிறாய்... மணிக்குத்தான் ஆவி பயப்படும் என்று நம்பி இருக்கிறாயே... அதனால, நீ மணி அடித்ததும், அந்த ஆவி போய் விட்டதாக நம்பி விட்டாய். இதுதான் மனோ தத்துவ ரீதியான உண்மை; எதற்கும் நான் கடிதம் தருகிறேன். நீயும், டாக்டரை பார்த்து, வைத்தியம் செய்துக் கொள்...'' என்றார்.இதை கேட்ட ராமுவுக்கு இன்னும் ஒரு பலத்த சந்தேகம் வந்தது.''ஏன் டாக்டர் எனக்கு, இரண்டு சந்தேகங்கள் உள்ளன; கேட்கலாமா,'' என்றான்.''ம்... கேள்... அப்பத்தான், நீ இந்த வீட்டில் தைரியமா வாழ முடியும்.'' ''டாக்டர்... நான் சப்போட்டா பழத்தை எடுக்கிற மாதிரி, கனவு வர்றப்பதான், அந்த ஆவி இறங்கி, என்ன துரத்திச்சு... அது ஏன்...'' என்றான்.''அது வெறும் கனவு... அதற்கெல்லாம் அர்த்தம் சொல்ல முடியாது; வேணும்னா, உன் வீட்டில் சப்போட்டா பழம் இருந்தா, கொண்டு வா... நான் அதை சாப்பிட்டு காட்டுறேன்...'' என்றார் டாக்டர்.'அதுவும் நல்லது தான்' என்று நினைத்த ராமு, உடனே, சப்போட்டா பழங்களை எடுத்து வந்தான். ''டாக்டர்... இன்னொரு சந்தேகத்தையும் தீர்த்து விட்டு, சாப்பிடுங்களேன் ப்ளீஸ்...'' என்றான்.''கேளுப்பா...''''என் அப்பா, பெரிய ராஜா பற்றிய விவரம் சொல்ல, வாய் எடுத்த போது, விடியற்காலை, 3:00 மணி. அப்போ கீழே கிடந்த கடிகாரம், மூன்று முறை அடித்தது. ஆனால், அப்பா சொல்ல ஆரம்பிக்கவும், முள் பழையபடி, ரிவர்ஸ் சென்று, இரவு, 12:00 காட்டியது. அப்போதும், 12 முறை மணி அடித்தது. அதே சமயம், விவரம் சொல்ல வந்த அப்பாவுக்கு வாயும் இழுத்து விட்டதே... இது, நாங்கள் கண்ணால் கண்ட உண்மை; இதற்கு என்ன காரணம்...'' என்றான், ராமு.''ஆமாம் டாக்டர் நானும் பார்த்தேன்... விவரம் சொல்லுங்களேன்...'' என்றாள், ராமுவின் தாய்.''அம்மா... இதெல்லாம் என்னை பொறுத்தமட்டில், வெறும் மனப் பிரம்மைதான்னு அடிச்சு சொல்லுவேன். இதுக்கெல்லாம் காரணம், அந்த பெரிய ராஜாவின் படம் தான். அவர் மீசையை பார்த்தா, எனக்கே பயமா தான் இருக்கு...'' என்று கூறி, சிரித்தார்.''பெண்டுலம் அசையும் போதெல்லாம், அங்கேயும், இங்கேயும் பாக்ககுறார்ன்னு, ராமு நினைச்சதெல்லாம் சொப்பனத்தின் விளைவு. சில காரண காரியங்களுக்கு, பதில் சொல்ல முடியாது. 'சேர்ந்தாற்போல, பல பல்லிகள் சத்தம் இட்டுச்சுன்னு' அப்பத்தான் நான் கவனிச்சேன். ''பெரிய ராஜா படம் மாட்டி இருக்கிற இடத்துல, ஒரு பொருளும் நீங்க வெக்கலே. அதனால, அங்க, 'எக்கோ' அதிகமாக இருக்கு. நான் உரக்க சிரிச்ச போது கூட அதுக்குத்தான் நீங்களும் பயந்தீங்க... உண்மையா, இல்லையா...''''ஆமாம் டாக்டர்...''''ஒரு பல்லியோ அல்லது இரு பல்லிகள் எதேச்சையாகவோ சத்தம் போட்டது உங்களுக்கு, 'எக்கோ'வால, பல பல்லி சத்தம் போட்ட மாதிரி தெரிஞ்சிருக்கு. ஆனா, கடிகாரம், மூணு அடிச்சி பின்னால், 12:00 மணிக்கு போயி, 12 முறை மணி அடிச்சதெல்லாம், நான் நம்பல. அதை, நான் நேரில் பார்த்தால் தான், சொல்ல முடியும். அதோடு ஒண்ணு தெரிஞ்சுக்கணும்... இன்னமும், 'மெஸ்மெரிசம்' என்ற கலை இருக்கத்தான் செய்யுது. அதை வைத்து, ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அப்படித்தான் ஏதோ இங்கு நடந்திருக்கு; அதெல்லாம் போகட்டும்; உடனே, அந்த பெரிய ராஜா படத்தை வீசி எறிங்க.''அந்த கடிகாரத்தை எடுத்து, ஒரு துணியில் சுத்தி பரண்ல போடுங்க. அவர் படம் வைச்சுருந்த இடத்துல, இயற்கை எழில் கொஞ்சும் இமயமலை அல்லது பூங்கொத்து படம் வைங்க; எல்லாம் சரியாகிடும்...'' என்றார், டாக்டர்.உடனே, இயற்கை கொஞ்சும் இமயமலையை வரைந்த படத்தை, எடுத்து வந்தான் ராமு. ராமுவின் தாய், அந்த கடிகாரத்தை, ஒரு பெரும் துணியில் சுற்றினாள். இப்போது, முக்காலியில் ஏற முற்பட்ட போது, டாக்டருக்கு ஞாபகம் வந்தது. ''தம்பி ராமு, இருப்பா... நான் அந்த சப்போட்டா பழத்தை எடுத்து சாப்பிடுறேன்; அப்புறம் நீ, அந்த படத்தை கழட்டலாம்...'' என்றார்.''சரி...'' என்றான், ராமு.''தம்பி... இதுக்குத்தானே அந்த பெரிய ராஜா உன்னை துரத்தினதா சொன்னே... இப்ப நான் சாப்பிட்டு காட்டறேன்; நடப்பதை பார்...'' என்று கூறி கடித்து, ருசித்து, சிரித்தபடியே சாப்பிட்டார்.'ச்சே... நாம தேவையில்லாம பயந்துட்டோமே' என்று ஒருவருக்கொருவர் கூறிய போது, 'மடால்' என்று கீழே சாய்ந்தார் டாக்டர்.'ஐயோ டாக்டர்...' என்று அதிர்ச்சியுடன் கத்தினான் ராமு; அவன் தாய்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.டாக்டரின் முகத்தில் நீரை தெளித்தான் ராமு.மெல்ல மெல்ல கண்விழித்த டாக்டர், ''ஐயோ... என் கண் மங்கலா தெரியுது... நீ யாரு...'' என்றார்.''டாக்டர்... நான் ராமு; நீங்க சப்போட்டா பழம் சாப்பிட்டதும், மயங்கி விழுந்துட்டீங்க...'' என்றான்.''ச்சீ... நானே விழுந்துட்டேனா... அதுவும் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட்டு... நோ சான்ஸ்... இந்த பழத்துல, ஏதோ விஷம் கலந்திருக்கணும் அல்லது பூச்சி மருந்து அதிகமாக இருக்கணும். இருக்கட்டும்... அத பிறகு பார்த்துக்கிறேன்... மொதல்ல, அந்த பெரிய ராஜா படத்தை கழட்டுப்பா...'' என்றார், டாக்டர்.முக்காலியில் ஏறி, படத்தை கழட்ட முற்பட்ட போது, கம்பீரத்துடன் ஒரு குரல் கேட்டது.அந்த குரலை கேட்டு, திடுக்கிட்டனர் மூவரும்!- தொடரும்...- பூரணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !