பயம் கொள்ளலாகாது!
மதுரை, அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில், 2000ல், 11ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!வகுப்பு ஆசிரியர் ஆர்.ஜெயச்சந்திரன் ஆங்கிலப் பாடம் எடுப்பார். மரம் நட உற்சாகப்படுத்துவார்; சுவாரசியமான கதைகள் கூறி, பாடத்தோடு தொடர்பு படுத்துவார். அன்றன்று நடத்தியதை வீட்டுப்பாடமாக மறுநாள் எழுதி வர வேண்டும். அன்று வீட்டுப்பாடம் எழுத மறந்து விட்டேன்; வகுப்புக்கு சென்றபோது, கண்டிப்பு மிக்க அந்த ஆசிரியர் கையில் பிரம்பு இருந்தது கண்டேன்; பயந்து வகுப்பிற்கு மட்டம் போட்டு, கணினி அறையில் தஞ்சம் புகுந்தேன்.இரண்டு நாட்களுக்கு பின், அங்கு வந்தவர், மற்ற மாணவர்களிடம் பாடங்கள் பற்றி விசாரித்த பின், 'இங்கு உன் வேலை முடிந்து விட்டால், என்னை வந்து சந்திக்கவும்...' என கூறி சென்றார். மாலையில் அவரை சந்தித்தபோது, 'கணினி வகுப்பில் என்ன பாடம் நடந்தது...' என கேட்டார்; பதில் இல்லாததால் தயங்கியபடி நின்றேன்.கடிந்து கொள்ளாமல், 'எந்த பாடத்தையும் தெளிவாக கற்க முயற்சிக்க வேண்டும்; கணினி அறையில் வேறு வகுப்பு மாணவர்கள் முன், உன்னை திட்டியிருந்தால் ஏளனமாக சிரித்திருப்பர்... அதனால் தான் அங்கு கண்டிக்கவில்லை. 'தவறு செய்வது மனித இயல்பு; அதை திருத்த வேண்டுமே தவிர, பயந்து ஒளியக் கூடாது...' என நம்பிக்கையூட்டி அறிவுரைத்தார். மறுநாளே வீட்டுப்பாடத்தை எழுதி கொடுத்தேன். அதை மனப்பாடமும் செய்து வகுப்பில் ஒப்பித்து பாராட்டு பெற்றேன். தற்போது, என் வயது, 36; ஆசிரியராக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியரின் வழியை பின்பற்றி, பள்ளி வளாகத்தில் மரங்கள் நட்டு பராமரித்து நன்மதிப்பை பெற்றுள்ளேன்.- பா.நுாருல்லாஹ், மதுரை.தொடர்புக்கு: 99449 77741