உள்ளூர் செய்திகள்

பொறுமையே பெருமை!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, தேபிரித்தோ உயர்நிலைப் பள்ளியில், 1954ல் எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். தலைமை ஆசிரியராக இருந்தார் பாதிரியார் மச்சடோ. அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 60 மாணவர்களை, கல்வி சுற்றுலா அழைத்து சென்றார். தனுஷ்கோடி துறைமுகம் வழியாக, இலங்கைக்கு சிறிய கப்பலில் புறப்பட்டோம். பாஸ்போர்ட், விசா எல்லாம் முறையாக வாங்கியிருந்தார்.முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தோம். ஒருநாள் மாலை, கொழும்பு கடற்கரையில் நாங்கள் வேட்டி அணிந்தபடி அணிவகுத்து சென்றதை பார்த்த சிலர், 'கள்ளத்தோணி... அரிசி மூட்டை...' என்று கிண்டல் செய்து நகைத்தனர். இதை கேட்டதும் ஆத்திரமும், ஆவேசமும் கொண்டோம். அமைதிப்படுத்திய தலைமை ஆசிரியர், 'நாம் வெளிநாட்டில் இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை; ஆனால், பொறுமை, பெருமை சேர்க்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நிதானத்தை இழந்து விட வேண்டாம். ஆத்திரப்படாமல் என் பின்னால் அணிவகுத்து வாருங்கள்...' என அறிவுரைத்தார். அதை பின்பற்றினோம். பல விஷயங்களை கற்று திரும்பினோம்.தற்போது, என் வயது, 85; அந்த தலைமை ஆசிரியர் அன்று கூறிய அறிவுரை, மனதில் பதிந்துள்ளது. வாழ்வில் இன்றும் அதை கடைபிடித்து வருகிறேன்.- ம.ரெங்கராஜன், மதுரை.தொடர்புக்கு: 94894 83132


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !