உள்ளூர் செய்திகள்

தபால் பெட்டி!

கடந்த, 1969ல் உசிலம்பட்டியில் உள்ள, டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தேன். என் பெற்றோர், நெசவுத் தொழில் செய்பவர்கள். அந்த காலத்தில் வறுமை காரணமாக என்னுடன் பிறந்த நான்கு பேரும், வெவ்வேறு ஊர்களில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் சேர்ந்து படித்தோம்.நான் படித்த பள்ளியில், அனைவரும், கட்டாயம் சீருடை அணிந்தே வர வேண்டும். என்னிடம் ஒரே ஒரு சீருடை தான் இருந்தது. வேறு துணி எடுத்து தர பெற்றோரால் முடியவில்லை; அவ்வளவு வறுமை. அந்த ஒரு சீருடையை, துவைத்து துவைத்து போடவே என் கால் சட்டை பின் பக்கம் கிழிந்து, தபால் பெட்டி போன்று இருக்கும். அதை கை தையல் கூட, போட முடியாத நிலை.என் வகுப்பில், நோட்டை சரி பார்க்க வகுப்பு ஆசிரியரிடம் நிற்கும் போது, சக மாணவர்கள் காகிதத்தை சுருட்டி தபால், போடுகிறேன் என்று கேலி செய்வர். நான் என் வறுமையை நினைத்து அழுவேன். இதே நிலை, எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. என் விடுதிக்கு வந்த ஒருவர் எனக்கு இரண்டு சீருடை வாங்கி தந்தார். 12ம் வகுப்பு வரை, எனக்கு சீருடை வாங்கி கொடுத்தார்.இன்று நான், பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள, 30 குழந்தைகளுக்கும், என் வீட்டின் அருகே இருக்கும், இலங்கை அகதிகளுக்கும், பண்டிகைக்கு, உடை எடுத்து தருகிறேன்.தபால் பெட்டி என்று கேலி செய்த என் நண்பர்கள், ஒருவர் கூட இன்று நல்ல நிலையில் இல்லை. நான் இன்று ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன். ஆசிரியர் சமுதாயமே வறுமையுள்ள பிள்ளைகளுக்கு உதவும் போது, நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை இதன் மூலம் வலியுத்துகிறேன்.- எஸ்.ராஜேந்திரன், மேலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !