உள்ளூர் செய்திகள்

கர்வத்தை விட்டு தள்ளு!

ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் அது. அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தது தவளை. கிணற்றில் இருந்த, பூச்சிகளை உணவாக கொண்டு நீண்ட நாட்களாக அங்கு வாழ்ந்து வந்தது.உலகத்தில், தன்னை விட பலசாலி யாருமே இல்லை என எண்ணி, கர்வம் கொண்டிருந்தது. தண்ணீரின் மேலே பறக்கும் சிறு பூச்சிகளை கண்டு சிரித்தது தவளை. தனக்கு பயந்து தான் பறப்பதாக எண்ணி கர்வம் கொண்டது.ஒரு நாள் -அந்த பக்கமாக வந்த சிறுவன், கால் தவறி கிணற்றில் விழுந்தான். அதை கண்டு மிரண்டது தவளை. அவ்வளவு பெரிய உயிரினத்தை பார்த்த நினைவே அதற்கு இல்லை. ஆயினும் கர்வம் காரணமாக, 'யார் நீ, உடனே போய் விடு; இல்லாவிட்டால் கடித்து தின்று விடுவேன்...' என்று கத்தியது தவளை.அதன் பேச்சு, சிறுவனுக்கு கேட்கவே இல்லை; கேட்டிருந்தாலும் புரிந்திருக்க வாய்ப்பில்லை.எதையும் பொருட்படுத்தாமல் கிணற்றுச் சுவரைப் பிடித்து வெளியேறினான் சிறுவன். ஆனால் மிரட்டலுக்கு பயந்து ஓடி விட்டதாக மகிழ்ந்தது தவளை. சில நாட்களுக்கு பின் பலத்த மழை பெய்தது. கடும் வெள்ளம் ஏற்பட்டது. கிணற்று மட்டத்துக்கு நீர் நிரம்பி வழிய ஆரம்பித்தது; நீண்ட காலம் கிணற்றில் வாழ்ந்த தவளையை வெள்ளம் வெளியே இழுத்து தள்ளியது.நிலப்பகுதிக்கு வந்தது தவளை; அங்கிருந்த உயிரினங்களைக் கண்டு பிரமித்தது.ஒரு நாள் -அப்பகுதியில் மிகப்பெரிய பாம்பு ஊர்ந்து சென்றது; அதை பார்த்த தவளை, பழக்கத்தின் காரணமாக, 'போய் விடு... எச்சரிக்கிறேன். போகவில்லை என்றால் பிடித்து தின்று விடுவேன்...' என்று கர்வத்துடன் மிரட்டியது. பசியுடன் இருந்த பாம்பு, ஒரே வாயில் தவளையை விழுங்கி ஏப்பம் விட்டது. கர்வம், அறிவின்மையால் அழிந்தது தவளை.குட்டீஸ்... வாழ்க்கையில் வெற்றி பெற, பள்ளி பாடங்களோடு, அனுபவப்பாடமும் மிகவும் முக்கியம். அனுபவ பாடம், செயலை மேம்படுத்தி வாழ்வில் முன்னேற்றத்துக்கு உதவும்.ஆர்.வி.பதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !