சொத்து!
சந்தோஷபுரத்தில், ஒரு பணக்கார முதியவர் வசித்து வந்தார். அவருக்கு உடல்நலம் குன்றியதால் சொத்துக்களை, மகன்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.சொத்துக்கள் கிடைத்ததும், தந்தையைப் பாரமாக எண்ணி உதாசீனப்படுத்தினர். தள்ளாத வயதில், சுடுச்சொற்களை தாங்க முடியாமல் அவதிப்பட்டார் முதியவர். ஒரு நாள் -இளமைக்கால நண்பர் ஒருவர் அவரை சந்திக்க வந்தார். அவரிடம், மகன்களால் ஏற்படும் அவதியைக் கூறி கண்ணீர் வடித்தார்.இதற்கு தீர்வு காண விரும்பிய நண்பர், சில சாக்கு மூட்டைகளை வண்டியில் எடுத்து வந்தார். அவற்றை முதியவரிடம் ஒப்படைத்து, மிகவும் பாதுகாப்பாக அறையில் பூட்டி வைக்கும்படி கூறினார். பின் முதியவரிடம் தனியாக, 'நண்பரே... இந்த மூட்டைகள் பற்றி உங்கள் மகன்கள் கேட்பர்; பல ஆண்டுகளுக்கு முன் கடனாக கொடுத்த பணம், வட்டியுடன் பல லட்சங்களாக பெருகி, மூட்டையில் திரும்பி வந்துள்ளதாக கூறுங்கள்.'அந்த மூட்டைகளை மிகவும் பத்திரமாக பூட்டி வைத்திருங்கள்; உயிர் உள்ளவரை, அவற்றை யாரும் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்... உங்கள் மகன்களின் நடத்தையில், விரைவில் மாற்றம் ஏற்படும்...' என்று கூறி சென்றார்.முதியவரிடம் உள்ள மூட்டையில், பல லட்சம் பணம் இருப்பதாக தகவல் பரவியது.அவரது மகன்கள் அதை அடைய போட்டா போட்டி போட்டனர். தந்தை மீது அன்பையும், பாசத்தையும் பொழிந்தனர்; கனிவாக பணிவிடைகள் செய்தனர். எந்த குறையும் வராமல், கவனித்துக் கொண்டனர். முதியவர் இறந்த போது, அவர் பாதுகாத்த மூட்டைகளை பிரித்தனர் மகன்கள். அவற்றில், கற்களும், செங்கல்களும் இருந்தன. பேராசை கொண்டவர்கள் ஏமாந்தனர். செல்லுாஸ்... பொய் பாசம் காட்டியவர்களுக்கு கிடைத்த பரிசை பார்த்தீர்களா... நீங்கள் அதுபோல் இருக்க கூடாது; பெற்றோரை கவனித்து, பராமரிக்க வேண்டியது நம் பொறுப்பு. அதை, கனிவாக செய்ய வேண்டும்!