மரங்கள் பாதுகாப்பு!
மதுரை, நரிமேடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 1994ல், 5ம் வகுப்பு படித்த போது, அறிவியல் ஆசிரியை கோரிஜான் செயல்முறை விளக்கங்களுடன் பாடம் நடத்துவார். இதனால், வீட்டுப் பாடத்தை எளிதாக செய்ய முடிந்தது.ஒருநாள், தாவரங்களின் வளர்ச்சி பற்றிய பாடம் நடத்தினார். பள்ளி தோட்டத்திற்கு அழைத்து சென்று, செடிகளை காட்டி இனிமையாக கற்பித்தார். அப்போது, ஒரு செடியை மிதித்து விட்டேன். கோபத்தில் திட்டி, இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை விளக்கினார்.மறுநாள் பாடம் நடத்திய போது, தயங்கி நின்றேன். அங்கு, புதிதாக, 10 செடி பைகள் இருந்தன. அவற்றை பரிசாக வழங்கி, 'இந்த செடிகளை நீங்கள் தான் பராமரிக்க வேண்டும். சிறப்பாக வளர்த்தால் தக்க பரிசு வழங்குவேன்...' என்று கூறி ஆர்வமூட்டினார்.அந்த செடியை சிறப்பாக பராமரித்து, பரிசு பெற்றேன்.என் வயது, 37; பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறேன். என் வீட்டருகே மரங்களை பராமரிப்பதற்காக, 'இயற்கை நேசர்' என்ற விருது பெற்றுள்ளேன். என் வகுப்பு மாணவர்களின் பிறந்த நாள் பரிசாக, மரக்கன்றுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறேன்.- பா.நுாருல்லாஹ், மதுரை.தொடர்புக்கு: 99449 77741