சிகப்பழகி! (10)
முன்கதை: செவ்வாய் கிரகத்தில் அதிகார போட்டியால் பூமிக்கு வந்த சிகப்பழகி, பள்ளி மாணவி கீதாவை மயக்கி கடத்த முயன்றாள். அதை முறியடிக்கும் வகையில் செவ்வாய் கிரகத்து சின்னசிட்டு, மாணவன் குகனுடன் சேர்ந்து செயல்பட்டாள். இனி -'நீ தான் உதவ வேண்டும் குகன்...' சின்ன சிட்டுவின் குரல், ஈன சுவரத்தில் கேட்டது.சுதாகரித்த குகன், கீதாவுடன் இணைந்து சிகப்பழகியை பிடித்து வேகமாக இழுத்தான்.'அடே வாண்டு பசங்களா... ஒரு சிறுமியை தான் கடத்தி வருவதாக உறுதி அளித்திருந்தேன். இப்போது இரண்டு பேர். ஆஹா... என் வலையில் நீயே வந்து மாட்டியிருக்கிறாய். விட்டுடுவேனா...'உரக்க சிரித்தபடி, இருவரையும் பிடித்தாள் சிகப்பழகி. அதற்குள் சாமர்த்தியமாக, கண் இமைகள் வேக வேகமாக அடித்தாள் சின்ன சிட்டு.திடீரென அந்த அதிசயம் நிகழ்ந்தது.திரும்பி பார்த்தான் குகன்.சின்ன சிட்டு மெல்லிய குரலில், 'என்னை மன்னித்து விடு... உங்களை காப்பாற்ற முடியவில்லை...' என்றபடி, மயங்கி சாய்ந்தாள்.அட்டகாசமாக சிரித்தாள் சிகப்பழகி.அதேசமயம், வானம் இடிந்து விழுவது போல் பெரும் சத்தம் கேட்டது! மந்திரவாதி அனுப்பிய ராட்சச பறவை பூமியில் இறங்க, சரியான இடத்தை தேடி பறந்தபடி இருந்தது.என்ன செய்வதென்று தெரியாமல் அழுதாள் கீதா. ''இக்கட்டான சமயத்தில் தான் சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். நான் வந்தபோது, சின்ன சிட்டு ஒரு உபாயம் கூறினாள். அதன்படி, பூமியில் மனிதர்களான நமக்கு தான் சக்தி அதிகம்... தவ வலிமை பெற்றவர்களாக இருந்தால், வலிமை மேலும் அதிகரிக்கும்...'' என்றான் குகன்.''அவர்களை எங்க தேடுவது...இன்னும் சிறிது நேரம் தான் இருக்கிறது. அதற்குள் தப்ப வேண்டும்...'' என்றாள் கீதா.அதேசமயம் பெரும் சத்தம் கேட்டது.வாசனை புகை மூட்டம் போடப்பட்ட அறை முன் வேகமாக ஓடி வந்தனர் காவலர்கள்.'மாமன்னர் ராஜராஜனின் குருவும், தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் சன்னதி அமைய உதவியவருமான கருவூர் தேவர் என்ற கருவூரார் வருகிறார்...' என்ற குரல் கேட்டு, ''சித்தரே... காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...'' என்று சத்தமிட்டான் குகன்.குரல் கருவூர் தேவருக்கு மட்டும் கேட்டது. சகலத்தையும் புரிந்து கொண்டவர், ராட்சச பறவையின் சிறகுகளை வெட்டி எறிந்தார்.சிறகொடிந்த பறவை தரையில் விழுந்தது.'ஐயோ...' என்று ஓடினாள் சிகப்பழகி. அதற்குள், சின்ன சிட்டுவின் மயக்கம் தெளிந்தது. அவளை பத்திரமாக, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப ஒரு புஷ்பக விமானத்தை வரவழைத்தார் கருவூர் தேவர். அதில் சின்ன சிட்டுவை ஏற்றி வழி அனுப்பினார்.குகனும், கீதாவும் தேம்பியபடி நன்றி கூறினர். ஆனந்த கண்ணீர் பொங்க, கை அசைத்து விடைபெற்றாள் சின்ன சிட்டு.பார்வை இழந்த நிலையில், சிகப்பழகி, அங்கும், இங்கும் ஓடினாள். அவள் கண்களின் ஒளியை எடுத்திருந்தார் கருவூர் தேவர்.'உங்களை காக்கவும், சின்ன சிட்டுவை வழி அனுப்பவுமே, சித்து செய்தேன். இனி, உங்களை பத்திரமாக அனுப்பி வைக்கிறேன். மந்திரவாதியின் கைப்பாவையான சிகப்பழகி சிறிது நேரம் கண்கள் தெரியாமல் அவதிப்படட்டும்... அவள் விழிகள் செயல்பட்டதும், மனம் மாற்றி செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்...' என்றார்.அப்போது சுரங்கப் பாதையின் கதவுகள் திறந்தன.குகனும், கீதாவும் சுயநினைவு பெற்றனர். அதே சமயம், மாற்று உருவில் இருந்த கீதாவும், குகனும் மறைந்தனர். சுற்றுலா வந்த பள்ளி குழுவினர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றனர். அதில் சேர்ந்தனர்.கருவூர் தேவரின் மகிமை பற்றி எடுத்துக் கூறி, மாமன்னர் ராஜராஜ சோழன், எந்த அளவுக்கு குருநாதர் மீது பக்தி வைத்திருந்தார் என்ற விபரத்தை எடுத்துக் கூறினார் ஆசிரியர்.சரித்திர சுற்றுலா முடிந்து பேருந்து புறப்பட்டது.சரித்திர கால உலகுக்கே சென்றிருந்த கீதாவும், குகனும் அனுபவங்களை உற்சாகத்துடன் பரிமாறியடி இருந்தனர்.அவர்கள் பேச்சில்...* அழகிய நந்தவனம் தோன்றியது* ஆடும் மயில்களும், கூவும் குயில்களும் தோன்றின* வாசமிகு வண்ண மலர்கள் பூத்து குலுங்கின* தேனை உண்ண, ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறந்து வந்தன. மகிழ்ச்சியாக கதை சொல்லிக் கொண்டிருந்தாள் கீதா. உற்சாகத்துடன் சுற்றுலா பேருந்து திரும்பிக் கொண்டிருந்தது.- முற்றும்.ஜி.சுப்பிரமணியன்