உள்ளூர் செய்திகள்

அடைக்கலம்!

அடர்ந்த காட்டில், காகமும், புறாவும் கூடு கட்டி வாழ்ந்தன. புறாவிற்கு கர்வம் உண்டு. எனவே எப்போதுமே காகத்தின் மீது வெறுப்பு கக்கும். ஒரு நாள் -பலத்த காற்றுடன் மழை பொழிந்தது; காற்றின் வேகத்தில் காகத்தின் கூடு சிதைந்து சின்னாபின்னமானது. அதிர்ச்சியுடன் புறாவிடம் சென்று, 'இன்று மட்டும் அடைக்கலம் தருவாயா... எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்...' என்றது காகம்.எரிச்சலடைந்தபடி, 'உன் நட்போ, நன்றியோ தேவையில்லை. வேறு இடம் தேடிக்கொள்...' என துரத்தியது புறா. ஏமாற்றத்துடன், மழையில் நனைந்த படி, பாதுகாப்பான இடம் தேடி பறந்தது காகம்.வழியில், பாழடைந்த கட்டடத்தை பார்த்தது; அங்கு ஒதுங்கியது.அதன் அருகில் நின்ற புளியமரத்தில் கூடு கட்டியது காகம். அமைதியாக அமைந்தது வாழ்க்கை. முட்டையிட்டு குஞ்சு பொரித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.சில மாதங்கள் கடந்தன.காகத்தின் இருப்பிடத்துக்கு பதற்றத்துடன் வந்தது அந்த புறா.'நண்பா... ஏன் என்னாயிற்று...' என அக்கறையுடன் விசாரித்தது காகம்.'என்ன சொல்வேன்... நான் கூடுகட்டியிருந்த மரத்தை, வெட்டி வீழ்த்திவிட்டனர்; கூடு சிதைந்து விட்டது; நிர்கதியாய் நிற்கிறேன்...' என்று புலம்பியது. 'கவலைப்படாதே... வேண்டியதை தயங்காமல் கேள்...''ஒரு நாள் மட்டும், உன் கூட்டில் தங்க அனுமதி கொடு...''என் நிபந்தனைக்கு, சம்மதம் தெரிவித்தால் இடம் கொடுப்பேன்...''என்ன நிபந்தனை...''எப்போதும் உற்ற நண்பனாய், என் கூட்டருகே புதிய கூடு கட்டி வாழ வேண்டும்... பிரிந்து செல்லக் கூடாது...' என்றது காகம்.மிகவும் மகிழ்ந்தது புறா. நிபந்தனையை ஏற்றது.அவை, அந்த பகுதியில் ஒற்றுமையுடன் வாழ்ந்தன. அன்பு செல்வங்களே... விட்டுக்கொடுத்து நட்பு பாராட்டுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !