உள்ளூர் செய்திகள்

அவதூறு!

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை, செ.புதுார் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், 1970ல், 3ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் நாகலட்சுமி. அவரை, நாச்சி டீச்சர் என்றே அழைப்போம். சரியாக எழுத படிக்க தெரியாமல் தவித்த எனக்கு பாடங்களை கனிவுடன் கற்பிப்பார். குறும்புமிக்க மாணவர்கள் சிலர், மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுவரில், வகுப்பாசிரியை பற்றி, கெட்ட வார்த்தைகளில் விமர்சனம் எழுதி, அதன் அடியில், 'இப்படிக்கு எல்.ரவி' என, என் பெயரை குறித்திருந்தனர். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. எல்லாரும், சொல்லாலும், பார்வையாலும் திட்டினர். அழுதபடியே ஆசிரியையை சந்தித்து, 'சத்தியமா நான் எழுதல...' என விளக்கம் கொடுத்தேன். ஆறுதல் கூறி, அழுகையை நிறுத்த வைத்தார். அவதுாறை எழுதி பரப்பிய, மூன்று பேரை, சில நாட்களுக்கு பின் கண்டுபிடித்து எச்சரித்தது பள்ளி நிர்வாகம். மிகவும் சிரமங்களுடன் படித்து வாழ்வில் உயர்ந்தேன்.என் வயது, 62; பள்ளியில், தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அறியாத பருவத்தில் தடுமாறிய நிலையில், என் கண்ணீரை துடைத்து, ஆதரவு தந்த அந்த ஆசிரியையை வணங்கி மகிழ்கிறேன்!- எல்.ரவி, தஞ்சாவூர்.தொடர்புக்கு: 99521 13194


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !