உள்ளூர் செய்திகள்

கடல் கன்னி நகரம்! (13)

முன்கதை: கிராம கிணற்றில் நீச்சல் கற்றிருந்த சிறுவன் மிகிரனும், சிறுமி சிற்பிகாவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக, நகரில் பயிற்சி எடுத்தனர். அவர்களை ராமேஸ்வரம் அழைத்து வந்தார் பயிற்சியாளர் கணேசன். இருவரும் கடலில் நீந்தி சாகசம் புரிய தயாராயினர். இனி - ராட்சச அலைக்குள், மிகிரனும், சிற்பிகாவும் சாமர் சால்ட் அடித்தனர்.அலையின் ஏற்ற இறக்கத்தில், இருவரும், 'ஏத்தலக்கா... பூத்தலக்கா...' ஆடினர்.தொடர்ந்து, அலைக்குள் சுழன்ற மிகிரனும், சிற்பிகாவும் வெளி துப்பப்பட்டு, கரையில் வந்து சேர்ந்தனர்.இருவரும் ஜோடியாக, கை கோர்த்தபடி எழுந்து வந்தனர்.ஓடி வந்து, இருவரையும் அணைத்தார் கணேசன்.''ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்...'''கடல் தாத்தாவின் செல்ல குழந்தைகள் நாங்கள்; எங்களை அவர் ஒன்றும் செய்ய மாட்டார்...'''உங்களுக்கும், கடலுக்குமான உறவு சென்டிமென்ட்டாக இருப்பது நல்லது தான்...''''உயிரற்ற பொருட்களையும், எங்களின் உறவுகளாகத்தான் பாவிக்கிறோம். சக ஜீவராசிகளுடனும், பல ஜடப்பொருட்களுடனும், மனிதனை இணைத்துள்ளான் இறைவன். ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. பரஸ்பரம் சார்ந்தே வாழ்கிறோம்...''''மிகிரா... நீ உணர்ச்சிவசமானவன்; உன் அறிவார்ந்த பேச்சு, என்னை கிளர்ச்சியூட்டுகிறது...''''எல்லாம் உங்கள் பயிற்சியும், சகவாசமும் தான் மாஸ்டர்...''''மகிழ்ச்சி...'''நாங்கள் இருவரும் இலங்கை தலைமன்னாருக்கு எப்போது நீந்த போகிறோம்...'''நாளை மதியம், 2:00 மணிக்கு; அதற்கு முன், மருத்துவர் உங்களிருவரின் உடல் நிலையை சோதிப்பார். நாளைய வானிலை அறிக்கை, சாதகமாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இரு நாட்டு அரசுகளும், உங்கள் சாகச நீச்சலுக்கு அனுமதி தர வேண்டும். நீச்சலுக்கு முழுக்க இந்திய கடலோர காவல் படையும், அதன் வீரர்களும் துணை நிற்பர்...'''நீச்சல் சாகசம் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்...'இருவரின் உறுதியான பதில் கேட்டு கண் சிமிட்டி சிரித்தார் கணேசன்.மறுநாள் மதியம் 1:00 மணி!இரு நாட்டு அனுமதிக் கடிதங்கள் தொலைநகலில் வந்திருந்தன.நுாற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும், ஊடகங்களும் குழுமியிருந்தன.மிகிரனும், சிற்பிகாவும் உடல் முழுவதும் ரசாயனத்தை பூசினர்.இருவரின் தலையிலும் சிலிகான் தொப்பி. நீச்சல் வீரர்களுக்கு உதவ கடலோரக்காவல் படையின் கப்பல் தயாராய் இருந்தது.மிகிரன், சிற்பிகாவுக்கு முன், இரண்டு நீச்சல் வீரர்களும், பின் இரண்டு வீரர்களும் நீந்த ஆயத்தமாயினர்.மிகிரனையும், சிற்பிகாவையும் வித விதமாய் புகைப்படம் எடுத்தனர் பத்திரிகை நிருபர்கள்.ஒரு பாட்டி வந்து, இருவருக்கும் ஆசி வழங்கினார்.''இறைவன் உங்க இருவர் முயற்சியை, முழு வெற்றியாக்கி தரட்டும்...'''நன்றி பாட்டி...'அப்போது, நம்பிக்கை ஊட்டும் வகையில், ''மீனவர் பாடல்கள் மூன்று வகைப்படும்! ஒன்று, குறைந்த இழுப்பு பாடல்... பாய்மரக்கட்டைகளை இழுத்து கட்டுதல், பாயை மேலே கட்டுதல் போன்ற பணிகளில் இப்பாடல் பாடப்படும்...'' என்றார் அந்த பாட்டி.'சரி...'''இரண்டு, நீண்ட இழுப்பு பாடல்... நங்கூரத்தை இழுத்து நிறுத்தல், உச்சி பாய்மரத்தை நிறுத்தல், தண்ணீர் பம்புகளை அடித்து இயக்குதல் போன்ற பணிகளில் பாடப்படுவது...'''ஓஹோ...'''மூன்றாவதாக, அம்பா பாடல் என்ற ஒன்று இருக்கிறது; அதை கூறுகிறேன் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். பாடியபடியே நீந்துங்கள்...'''சரி பாட்டி...'பாடி காண்பித்தார் பாட்டி.அதை பாடியபடியே இரு வாண்டுகளும் குதுாகலித்தனர்.''நீச்சலை முடித்து வந்து, என் குடிசையில் தங்கி, சோறும், மீன் குழம்பும் சாப்பிட்டு தான் போகணும்...''அன்பு கலந்த கண்டிப்புடன் சொன்னார் பாட்டி.'சரி பாட்டி...'இந்திய கடலோர காவல் படை கப்பலில் இருந்து, விசில் சத்தம் கேட்டது. கடலோர காவல்படையின் கப்பலில் இருந்தார் கணேசன்.கப்பல் கேப்டன் கொடியை அசைக்க, இரு நீச்சல் வீரர்களும், கடலுக்குள் சீறி பாய்ந்தனர்.கடல் கிழவன் அட்டகாசமாக சிரித்தான்!- தொடரும்...- ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !